மஹிந்தவுக்கு பாடம் புகட்டவே அவரை பதவியில் இருந்து நீக்கினோம்: ரிஷாட்

பௌத்த மதகுருமாரின் இனவாத நடவடிக்கைகளை அடக்க முடியாது பார்த்துக்கொண்டடிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷக்கு பாடம் புகட்டவே அவரை பதவியில் இருந்து இறக்கினோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் நேற்று ((வியாழக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“நாம் சிறிய கட்சியாக இருந்த போதும், இறைவனை முன்னிறுத்தி மிகவும் தைரியமாக கடந்த அரசிலிருந்து வெளியேறி, மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தோம். தமிழ்ச் சமூகமும், மலையக சமூகமும், முஸ்லிம் சமூகமும் மஹிந்தவுக்கு பாடம் புகட்ட வேண்டுமென்று முடிவெடுத்த பின்னர், அப்போதைய மஹிந்த அரசில் அங்கம் வகித்த சிறிய கட்சிகள் யாரை ஆதரிப்பது என்று தடுமாறிக் கொண்டிருந்த போது, நாம்துணிச்சலுடன் முடிவெடுத்து மைத்திரியை ஆதரிக்க முன்வந்தோம்.

யுத்தம் முடிவடைந்திருந்த போது, பெரும்பான்மைச் சமூகத்திலுள்ள ஒருசில மதகுருமார்கள் இனவாதத்தைத் தூண்டி சிறுபான்மையினரின் மத உரிமைகளை அடக்குகின்ற, ஒடுக்குகின்ற, அவர்களின் பொருளாதாரத்தை நாசமாக்குகின்ற அனாச்சாரங்களில் ஈடுபட்டனர்.

இனவாத மதகுருமாரின் நடவடிக்கைகளை அடக்க முடியாது, அந்த அசிங்கங்களை பார்த்துக்கொண்டு வாழாவிருந்த நாட்டுத்தலைவரை, வீட்டுக்கு அனுப்புவதற்கு நாங்கள் உதவினோம். அகதியாக வெளியேற்றப்பட்டு, அகதிகளுடன் அகதியாக வாழ்ந்து பல்வேறு துன்பங்களை அனுபவித்ததன் விளைவினாலேயே, இந்த சமூகத்துக்கு விடிவு கிட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியலுக்குள் உந்தப்பட்டேன்.

அகதி மக்களின் வறுமை, கொடுமையான வாழ்வு, மழை வந்தால் ஒழுகும் கொட்டில்களில்அவர்கள் பட்ட துன்பங்கள்தான், எனது அரசியல் செயற்பாடுகளை தீவிரப்படுத்தியது. நாடாளுமன்ற உறுப்பினரான பின்னர் பிரதியமைச்சர் அமீர் அலி போன்ற மேலும் ஒருசிலருடன் இணைந்து தனிக்கட்சி ஆரம்பிக்கக் கூடிய பாக்கியம் கிட்டியது” என கூறினார்

About காண்டீபன்

மறுமொழி இடவும்