நாம்தமிழர் கண்காணிப்பு வளையத்துள் ரஜனியின் ஆன்மீக கட்சியும், ஆண்டவரும்.

எவ்வளவோ பேர் எத்தனைமுறை வற்புறுத்தி கேட்டபோதும் அரசியல் தனக்கு ஒருபோதும் ஒத்துவராது என்றும், அரசியல்பற்றி தனக்கு தெரியாது, தன்னுடைய குணாதிசயத்துக்கு முற்றிலும் எதிர்மறையானது அரசியல் என்று சாதித்து அரசியல்பற்றி யார் பேசினாலும் எந்தக்கருத்தும் சொல்லாமல் புறக்கணித்து கடந்துபோனவர் உலகநாயகர் ஆண்டவர் கமல்ஹாசன்,

தனக்கு கட்சியும் தேவையில்லை கொடியும் தேவையில்லை ராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன என்று இருந்தவர் ஆன்மீக அரசியல் தலைவர் சுவாமிஜி ரஜினிகாந்த் அவர்கள்.

ஒரு காலத்தில் ரஜனிகாந்த் அவர்கள் தான் நடிக்கும் படங்களில் எதேச்சையாக இடம்பெற்ற அரசியல் ரீதியான நையாண்டி “பஞ்ச்” டயலாக்குக்கள் அவரை மிகவும் உயரத்துக்கு கொண்டுசெல்ல தொடங்கின,

அதிலிருந்து அவர் ஒவ்வொரு படத்திலும் அரசியல் நையாண்டி இடம்பெறும்வண்ணம் வேண்டி விரும்பி பார்த்துக்கொண்டார்.

அவர் பேசி நடித்த அரசியல் ரீதியான பஞ்ச் டயலாக்குக்கள் அவரது ரசிகர் மனங்களில் பெரும் பிம்பமாக உருவெடுத்தது, ஒரு கட்டத்தில் அவர் சுப்பர் ஸ்ரார் அந்தஸ்த்துக்கு உயர்த்தப்பட்டார்.

இப்படியான சினிமா பிம்பம் ரஜனிகாந்ததை அவரது ரசிகர்கள் மத்தியில் தங்களை வழிநடத்தும் மேய்ப்பனாக உருவகப்படுத்தியது.

ரஜனிகாந்த்தின் தமிழ்நாட்டு ரசிகர்கள் இருபது ஆண்டுகளாக அவரை அரசியலுக்கு வரும்படி அழைத்தபோதும் முன்னாள் அரசியற் தலைவர்களான ஜெயலலிதா, மற்றும் கருணாநிதி ஆகியோரை நேரடியாக தன்னால் எதிர்க்கமுடியாது என்று உணர்ந்த ரஜனிகாந்த் தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்தார்.

இருந்த போதிலும் அரசியல் ரீதியான பஞ்ச் டயலாக்கை கைவிடாமல் தொடர்ந்து வித்தைகாட்டி ரசிகர்களை தன்னகத்தே கட்டி வைத்திருந்தார்.

ஜெயலலிதாவின் மறைவு, கருணாநிதியின் ஆட்டமின்மை இவைகளை கணக்கில் எடுத்துக்கொண்ட ரஜனிகாந்த் சினிமா நடிகை கஸ்தூரி, மற்றும் முக்கியமான சில பத்திரிகையாளர்கள் மூலமும் அரசியல் தரகர் தமிழருவி மணியன் போன்றோரையும் பயன்படுத்தி ரசிகர்கள் மற்றும் மக்களின் விருப்பத்துக்காக வேண்டாவெறுப்பான கட்டாயத்தின்பேரில் அரசியலில் நுழைவதுபோன்ற ஒரு தோற்றத்தை ஊடகங்கள் மூலம் பொதுவெளியில் உலவவிட்டார்.

அதன் தொடர்ச்சியாக 2017 மே ரசிகர்கள் சந்திப்பு ஒரு பஞ்ச் டயலாக், அதன்பின் டிசம்பர் 26 முதல் 31 வரை மீண்டும் ஒரு ரசிகர் சந்திப்பு,

டிச 31 2017 ரசிகர்கள் சந்திப்பின் கடைசிநாள் அவர் தனது பேச்சில் 1996 ல் இருந்து தான் தொடர்ந்து அரசியல் இருந்துகொண்டு இருப்பதாகவும் இப்போ ரசிகர்களின் விருப்பத்திற்காக கட்சி அமைத்து 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு மக்களுக்கு வாழ்வு கொடுக்கப்போவதாகவும் அறைகூவல் விடுத்திருந்தார்.

வெற்றிபெற்று பதவிகாலத்தில் ஒருவேளை வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாது போனால் ஒரு மூன்று வருட காலத்தில் ராஜினாமா செய்துவிட்டுபோவோம் என்றும் உணர்வுமயமாக உசத்தி குரல் கொடுத்தார்.

ஜெயலலிதா கருணாநிதி இல்லாத குளப்பமான அரசியல் சூழ்நிலையில் ரஜனிகாந்த் + கமலஹாசன் ஆகிய இருவருக்கும் முதலமைச்சர் ஆசை வந்திருக்கிறது.

படித்தவர்கள் பாமரர்கள் என்று பரவலாக அறியாமையில் ஊறிக்கிடக்கும் தமிழக மக்கள் மத்தியில் இப்பேற்பட்ட செல்வாக்கு பெற்ற நடிகர்களின் மாயை வெற்றியளிக்கக்கூடிய ஒன்றுதான்.

எம்ஜீஆர், ஜெயலலிதா போன்றவர்கள் அரசியலில் கோலோச்சியவர்கள் என்பதால் சினிமா மாயையில் ஊறிக்கிடக்கும் தமிழகத்துக்கு ரஜனி, கமலஹாசன், விஜய், அஜித், விசால், விஜய் சேதுபதி, என்று தொடர்ச்சியாக ரசிகர்கள் கூட்டம் அவரவர் விருப்பமான நடிகர்களை முதலமைச்சர் ஆக்க துடித்துக்கொண்டிருக்கிறது.

அப்படி தமது விருப்பமான நடிகர் முதலமைச்சர் ஆக்கிவிட்டால் சுலபமாக தாம் எம் எல் ஏ ஆகலாம் மந்திரி ஆகலாம் என்ற கனவு மறைமுகமாக நடிகர்களை தலைவராக்கிக்கொண்டிருக்கிறது.

இந்த அறியாமை இருக்கும்வரை அரை மணிநேரத்தில் நடிகர்களிடம் சோரம் போகக்கூடியதுதான் தமிழ்நாடு,

ஆனால் எம் ஜீ ஆர் ஜெயலலிதாவுக்குப்பின் அப்படி ஒரு நிகழ்வு நடக்காமல் வேகத்தடையாக உருவெடுத்து தடைக்கல்லாக நின்றுகொண்டிருப்பது நாம்தமிழர் கட்சியும் அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களும் என்பதுதான் யதார்த்தமான உண்மை.

தமிழ்நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் சக்தியாக முன்னணியில் இருப்பது சினிமா, அந்த சினிமாவையும் நிர்வகிக்கக்கூடிய இடத்தில் பத்திரிகை மற்றும் ஊடகங்கள் இருந்து வருகின்றன.

சமீபத்தில் பல ஆயிரம் மீனவர்களை காவு வாங்கி பல்லாயிரம் கோடி சொத்துக்களை ஏப்பமிட்ட ஓகி புயல் அனர்த்தத்திற்கு கொடுக்காத ஊடக வெளிச்சத்தை டிச 31 ரஜனிகாந்த்தின் அரசியல் பிரவேசத்திற்கு ஊடகங்கள் போட்டிபோட்டு வழங்கின.

அனிதாவின் படுகொலைக்கு கொடுக்கப்படாத முக்கியத்துவத்தை விஜய் ரிவியின் பிக் பொஸ் கமலஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி என்பதால் நாடு தழுவிய பிரபல்யத்தை பெற்றது.

எழுபது வயதை நெருங்கும் நபராக இருந்தாலும் புகழ்பெற்ற சினிமா நடிகர் என்பதால் எந்த ஒரு பின்புலமும் கொள்கையும் இல்லாத ரஜனிகாந்தின் ஆன்மீக அரசியற்கட்சிக்கு ஆயிரம் பக்க பொருள் பொழிப்புரை கூறுவதற்கு தினமும் ஐந்து ஆறு பேரை வைத்து விவாதம் நடத்துகின்றன தமிழ் ஆங்கில கன்னட தெலுங்கு ஊடகங்கள்.

பாரம்பரியம் மிக்கதாக கணிப்பிடப்படும் நூற்றாண்டு பழைமைமிக்க ஆங்கில தமிழ் நாளிதழ் பத்திரிகைகள் ஆசிரியர் தலையங்கம் எழுதி கௌரவிக்கின்றன.

என்ன இருந்தாலும் நாம் தமிழர் கட்சியின் வரவுக்குப்பின்னர் நிறைய மாற்றங்கள் தமிழக மக்களிடையே தோற்றம் பெற்றிருக்கின்றன.

பூர்வீக தமிழர் அல்லாதோரை முதலாளியாக கொண்ட பார்ப்பனிய பத்திரிகைகளும் பெரும் கட்சிகளின் பணத்துக்கு சோரம்போகும் காட்சி ஊடகங்களும் நாம் தமிழர் கட்சியின் செயற்பாடுகள் அனைத்தையும் வெறுப்புடன் இருட்டடிப்பு செய்வதற்காகவே கமலஹாசன் ரஜனிகாந்த் போன்றோர் வலிந்து முன்னிலைப்படுத்தப்படுகின்றனர்.

இருந்தும் நாம் தமிழர் கொள்கைகள் மக்கள் மத்தியில் பெருமளவு வரவேற்கப்பட்டு வரும் எதிர்த்தாக்கமே பெரு வெளிச்சமாக தெரிகிறது.

இரு நடிகர்களுக்கும் இரண்டு இரண்டு படங்கள் வெளிவர இருக்கின்றன…
ஒருவேளை அவர்கள் தொடர்ந்து நடிப்பார்களானால் அரசியல் அறிவிப்புக்கள் இன்னும் தொடரும்……..

குறித்த இரு நடிகர்களும் முதலமைச்சர் ஆவதற்கான ஆதாரங்கள் எதுவும் கண்ணுக்கெட்டிய தூரம் தாண்டியும் தெரியவில்லை.

ஈழதேசம் செய்திகளுக்காக..
-ஊர்க்குருவி-

About இலக்கியன்

மறுமொழி இடவும்