ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க விடுதலை!

மிக் விமான கொள்வனவு தொடர்பில் சந்தேக நபராக கருதி தேடப்பட்டு வரும் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க, தான் விடுதலை செய்யப்பட்டதாக பேஸ்புக்கில் பதிவினை இட்டுள்ளார்.

எனினும் இது தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குனசேகரவை தொடர்புகொண்டு கேட்ட போது,

அது தொடர்பில் உத்தியோகபூர்வமாக எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என்பதால் உறுதியாக கூற முடியாது என தெரிவித்தார்.

அத்துடன் 7 பேர் கொண்ட சிறப்புக் குழு அபுதாபி சென்றுள்ள நிலையில் அது தொடர்பில் தகவல் கிடைக்கும் வரை எதுவும் கூற முடியாது என அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் உதயங்க வீரதுங்க என அவரது புகைப்படத்துடன் கூடிய முகப்புத்தக கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த நான்காம் திகதி அமெரிக்கா நோக்கி செல்ல முற்பட்ட போது நான் ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து அந் நாட்டின் இன்டர்போல் பொலிஸாரினால் தடுக்கப்பட்டேன். இதன்போது அவர்கள் என்னை தடுத்து விசாரணை செய்ததில் எனக்கு எதிராக எவ்வித சர்வதேச சிவப்பு அறிவித்தலும் இல்லை என்பதும் சர்வதேச குற்றச்சாட்டுக்கள் இல்லை என்பதும் உறுதியானது. அதன் பின்னர் அவர்கள் விடுதலை செய்தனர். எனக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை. என்னை தற்போதைய அரசாங்கம் அரசியல் ரீதியாக பழி வாங்குவதால், தற்போதைக்கு இலங்கை வரும் எண்ணம் எனக்கில்லை.

பொலிஸாரின் இந்த செயற்பாட்டுக்கு எதிராக நான் சர்வதேச நீதிமன்றில் நட்ட ஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்வேன். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மையப்படுத்தியே என்னை கைதுசெய்ய முயல்கின்றனர் எனக் கருத்துப்பட்ட பதிவினை அவர் இட்டுள்ளார்.

எவ்வாறாயினும் குறித்த பதிவின் நம்பகத்தன்மை தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தில் எவரும் உறுதி செய்யவில்லை.

About காண்டீபன்

மறுமொழி இடவும்