வேண்டாம் வேண்டாம் !! சிறிலங்கா இராணுவத் தூதுவர் விவகாரத்தில் பிரித்தானிய அரசை நோக்கி அழுத்தங்கள் !!

பிரித்தானியாவில் சிறிலங்கா உயர் ஆணையத்திற்கு இராணுவத் தூதுவராக சிறிலங்காவின் பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோ மீண்டும் அமர்த்தப்படுவதை ஏற்க வேண்டாம் என பிரித்தானிய அரசிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளது.

போர்க்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், இனக்கொலைக் குற்றம் ஆகியற்றுக்காகக் கூண்டில் நிறுத்தபப்டுவதிலிருந்து இவ்வகையில் அவருக்கு அரசதந்திரக் காப்புக் கிடைக்க விடாமல் செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அக்கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘சிறிலங்காவில் நடந்த பெருந்திரள் படுகொலைகளுக்கும், பாலியல் வன்கொடுமைகளுக்கும் பொறுப்புக்கூறல் தொடர்பாக, ஐநா மனித உரிமைப் பேரவையில் ஒரு தீர்மானத்தைக் கூட்டாக முன்மொழிந்த நாடுகளில் ஒன்று என்ற முறையிலும், ஐநா பாதுகாப்பு மன்றத்தில் ஒரு நிரந்தர உறுப்பு நாடு என்ற முறையிலும் பிரித்தானியாவை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். சந்தேகத்துக்குரிய போர்க் குற்றவாளி ஒருவர் சிறிலங்காவின் இராணுவத் தூதுவராக மீண்டும் அமர்த்தப்படுவதை ஏற்றுக் கொள்ளாதீர்கள். இவ்வகையில் உலகளாவிய மேலுரிமையின் படியான வழக்கில் கூண்டில் நிறுத்தப்படுவதிலிருந்து விலக்குப் பெறும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்காமல் செய்யுமாறு கேட்கப்பட்டுள்ளது.

பன்னாட்டுச் சட்டம் மெதுவாக மலர்வுற்று, இப்போது குற்றவியல் சட்ட நடவடிக்கைகளில் அரசதந்திரத் தகுநிலையால் கிடைக்கும் காப்புத் திரையைப் பன்னாட்டுக் குற்றங்கள் கிழித்திடும் நிலை ஏற்பட்டிருப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நம்புகிறது. ஆனால் பெர்னாண்டோவின் அரசதந்திரத் தகுநிலை பிரித்தானிய நீதிமன்றங்களில் எடுபடும்படியான பாதுகாப்பை வழங்கி விடுமோ என்பதுதான் எமக்குள்ள கவலை.
பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோ இருநாள் முன்பு வரை பிரித்தானியாவில் சிறிலங்கா உயர் ஆணையத்தின் இராணுவத் தூதுவராகப் பணியாற்றினார். தமிழர்களுக்கு எதிராக சிறிலங்கா படைகள் நிகழ்த்திய பெருந்திரள் படுகொலைகளையும் பாலியல் வன்தாக்கையும் கண்டித்து சிறிலங்கா உயர் ஆணையத்துக்கு எதிரில் ஆர்ப்பாட்டம் செய்த தமிழர்களை நோக்கி அச்சுறுத்தலான வன்முறைச் சைகைகள் செய்தார் என்பதற்காக அவரை சிறிலங்கா அயலுறவு அமைச்சு அப்பதவியிலிருந்து நீக்கம் செய்தது.

சிறிலங்கா அதிபர் இன்று அதே இராணுவத் தூதுவர் பதவிக்கு அதே பெர்னாண்டோவை மீளமர்த்தம் செய்திருப்பதாகச் செய்தி வந்துள்ளது.

சிறிலங்கா அதிபர் பெர்னாண்டோவை மீளமர்த்தம் செய்திருப்பதால் அவர் மீண்டும் ஒரு முறை அரசதந்திர வழிகளுக்கு உட்பட்டு, தன் பெயரை பிரித்தானிய அயலுறவு அமைச்சிடம் அளித்து, ஓர் அரசதந்திரியாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

‘சிறிலங்க பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோவின் பெயர் அயலுறவு அமைச்சிடம் அளிக்கப்படும் போது அவர் இராணுவத் தூதுவராக மீளமர்த்தம் செய்யப்படுவதை ஏற்க வேண்டாம் என்று பிரித்தானியாவை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். தமிழ் மக்களுக்கு எதிராக அவர் போர்க்குற்றங்களும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களும் இனக்கொலைக் குற்றமும் புரிந்தார் என்ற குற்றச்சாட்டுகள் ஐநா அமைப்பினாலும் மற்றவர்களாலும் நம்பகமாக நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன’ எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

‘அரசதந்திரக் காப்புத் தர மறுப்பதோடு, தமிழ் மக்களுக்கு எதிராகச் செய்த போர்க் குற்றங்கள், மானிடத்துக்கெதிரான குற்றங்கள், இனக்கொலைக் குற்றம் ஆகிய குற்றங்களுக்காக உலகளாவிய மேலுரிமையின் கீழ் பெர்னாண்டோவை எதிர்த்து சட்ட நடவடிக்கைகள் தொடங்குமாறும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். பாதிப்புற்ற தமிழர்கள் பலர் இப்போது பிரித்தானியாவில் உள்ளனர்; அவர்கள் சிறிலங்காவில் தாங்கள் பட்ட கொடுமைகள் குறித்து பிரித்தானியக் காவல் துறையிடம் தகவலளித்து முறையீடும் செய்துள்ளனர். இவை தவிர, சிறிலங்காப் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்தவர்கள் செய்த கடுங்குற்றங்கள் பற்றி ஐநாவும் பிற பன்னாட்டு அமைப்புகளும் அளித்துள்ள பல அறிக்கைகளும் உள்ளன’ என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக் காட்டியுள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு போரின் இறுதி மாதங்களில் நிகழ்ந்த போர்க் குற்றங்களுக்கும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களுக்கும் 59ஆம் படைப்பிரிவின் ஜெமுனு கண்காணிப்புப் பட்டாளம் என்னும் அவரது படையணிதான் பொறுப்பு எனக் கூறும் பல அறிக்கைகள் வெளிவந்து விட்டன. ஐநாவும் மற்ற அமைப்புகளும் கூறியுள்ள படி, 59ஆம் படைப்பிரிவு போர்முனையில் நின்று சண்டையிட்ட படையாகும், அது பற்பல போர்க்குற்றங்கள் புரிந்தது: மருத்துவமனைகள் மீதும் உணவுப் பகிர்வு மையங்கள் மீதும் பிற குடிமக்கள் பகுதிகள் மீதும் குண்டுவீச்சும் செல்லடியும் நடத்தியது.

சிறிலங்கா தொடர்பிலான 2012ஆம் ஆண்டு உள்ளக ஆய்வறிக்கையின் படி, 2009இல் கிட்டத்தட்ட 70 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். ஏராளமான தமிழ்ப் பெண்கள் சிறிலங்கா பாதுகாப்புப் படையினரின் பாலியல் வன்தாக்கிற்கும் வல்லுறவுக்கும் ஆளானார்கள்.

ஐநா மனித உரிமை உயர் ஆணையர் 2017 மார்ச்சு மாதம் ஐநா மனித உரிமைப் பேரவைக்கு அளித்த அறிக்கையில் சிறிலங்காவில் பன்னாட்டுக் குற்றங்கள் நிகழப் பொறுப்பானவர்கள் மீது உலகளாவிய மேலுரிமையின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கும்படி உலக நாடுகளைக் கேட்டுக் கொண்டார் என்பதனையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்