விக்னேஸ்வரன் வெளியிட்ட அறிக்கை கபட நோக்கம் கொண்டது : எம்.ஏ. சுமந்திரன்

“உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வெளியிட்ட அறிக்கை கபட நோக்கம் கொண்டது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர் இப்படித்தான் செயற்பட்டார். வாக்களித்த மக்களை மந்தையாடுகள் என அவர் வர்ணித்தமைக்கு அவரைத் தேர்தலில் நிறுத்தியவர்கள் என்ற முறையில் பகிரங்கமாக மன்னிப்புக் கோருகின்றோம்.”
இவ்வாறு காட்டமாகக் கருத்து வெளியிட்டுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் எம்.பி.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடந்த செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்காலப் போக்குத் தொடர்பில் கடுமையாகச் சாடியிருந்தார். கூட்டமைப்பின் தலைவர்கள் திராணியில்லாதவர்கள் என்றும், பேரம் பேசும் வலு அவர்களிடம் இல்லை எனவும், மமதையில் அவர்கள் செயற்படுகின்றார்கள் என்றும் விமர்சித்திருந்தார்.

புதிய அரசமைப்பு முயற்சி, இடைக்கால அறிக்கை என்பன தொடர்பிலும் அவர் தனது விமர்சனத்தை முன்வைக்கத் தவறவில்லை.
முதலமைச்சரின் இந்தத் தேர்தல் நேர அறிக்கை தொடர்பில் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் எம்.பி. தொலைக்காட்சி ஒன்றுக்குக் கருத்து வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் தெரிவித்துள்ளவை வருமாறு:-

“வடக்கு மாகாண முதலமைச்சர் உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் தொடர்பில் வெளியிட்ட அறிக்கை கபட நோக்கம் கொண்டது. கடந்த மாகாண சபைத் தேர்தலில் தனக்கு வாக்களித்த மக்களை மந்தையாடுகள் என வர்ணித்து வடக்கு மாகாண முதலமைச்சர் கருத்து வெளியிட்டுள்ள கருத்துக்குப் பகிரங்க மன்னிப்புக் கோருகிறோம்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலிந்து வேட்பாளராக்கியபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு ஏற்ப பெரும் எண்ணிக்கையான மக்கள் வாக்களித்துப் பதவியில் அமர்த்தினார்கள்.

இவ்வாறு விக்னேஸ்வரனுக்கு மக்கள் வாக்களித்திருந்த நிலையில் வாக்களித்த மக்களை மந்தை ஆடுகள் என்கிறார் அவர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பதவிக்கு வந்து தற்போதும் அந்தப் பதவியிலேயே ஒட்டிக்கொண்டு வடக்கு மாகாண சபையையும் வினைத்திறனாக இயக்காமல், வளர்த்த கடா மார்பில் இடிப்பது போன்று செயற்படும் முதலமைச்சர், சென்ற நாடாளுமன்றத் தேர்தலைப்போன்று இப்போதும் இறுதி நேரத்தில் கபட நோக்கோடு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

எனவே, மக்கள் முதலமைச்சரின் கபட நோக்க அறிக்கையை நிராகரித்துத் தொடர்ந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு பயணிக்க வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு எதிராகச் செயற்படவில்லை, செயற்படவும் மாட்டாது. எனவே, மக்கள் இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
சென்னை அண்ணா சாலை ராணி சீதை மன்றத்தில் 2009 ஆம் ஆண்டு , ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற வைகோவின்
அமெரிக்காவுடனான உடன்பாடுகள் குறித்து, வங்குரோத்து அரசியல்வாதிகளின் ஒரு குழுவே, கொந்தளிப்பை ஏற்படுத்தும் நோக்கில் பொய்களை பரப்புகிறது என்று சிறிலங்கா நிதி
மட்டக்களப்பு – ஒல்லிக்குளம் பகுதியில் ஜ.எஸ். பயங்கரவாதிகளினால் நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 300 ஜெலக்நைட் குச்சிகளும், 1000 டெட்டர்நேட்டர்களும் மீட்கப்பட்டுள்ளன.

About இலக்கியன்

மறுமொழி இடவும்