மாவீரர், போராளிகள் குடும்பங்களுக்கிடையில் முல்லையில் நடைபெற்ற கலந்துரையாடல்!

தமிழர் தாயகத்தில் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வசிக்கும் முன்னை நாள் போராளிகள், மாவீரர்கள் குடும்பங்களுக்கான கலந்துரையாடல் இன்று 18.02.2018, ஞாயிற்றுக் கிழமை முல்லை மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் நடைபெற்றது.

முன்னை நாள் போராளிகள், மாவீரர்கள் குடும்பங்களுக்கான கலந்துரையாடலும், அவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான விடயங்களையும், அவர்களின் மேம்பாட்டுக்கான பொது அமைப்பு ஒன்றினை நிறுவி அவற்றின் ஊடாக எதிர்காலத்தில் வாழ்வாதாரம் வழங்குவது தொடர்பாக இந்தக் கலந்துரையாடலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அனைத்து மாவீரர் துயிலும் இல்லங்களும் வணக்கத் தலங்களாக மாற்றி உறவுகளை வழிபட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், இக்கூட்டத்தில் வேண்டுகோள் முன் வைக்கப்பட்டதுடன், கிராமம், பிரதேசம், கோட்டம், வலயம், மாவட்டம், மாகாணக்களுக்கான மத்திய குழு, ஆலோசனைக் குழு போன்ற கட்டமைப்புக்களை உருவாக்கி, இவர்களுக்கான வாழ்வாதார மேன்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என போராளிகள் மத்தியில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

தற்போது இயங்கும் செயற்குழுவுடன் இணைந்து தமிழீீீழத்தின் எட்டு மாவட்டங்களில் இருந்தும் ஒவ்வொரு பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டதுடன், வெகுவிரைவில் குறிப்பாக 10, நாட்களுக்குள் நிரந்தர கட்டமைப்பை உருவாக்கி அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய பொருத்தமான பெயர் வைத்து தலைமை அலுவலகம் திறக்கப்பட வேண்டும் என அனைத்து போராளிகளாலும் ஏகமனதாக பரிந்துரைக்கப்பட்டது.

மேலும் இவ்வமைப்பு தொடர்பான கொள்கை விளக்கத்தை திரு, சிவனடியார் அவர்கள் இங்கு வாசித்து விளக்கியதுடன், போராளிகளின் கேள்விகளுக்கான பதில்களையும் வழங்கியிருந்தார்.

இந்நிகழ்வுக்கு மாவீரர் போராளிகள் குடும்ப உறுப்பினர்கள், போராளிகள், பங்குத்தந்தை, கலாநிதி ஜெயகுலராஜா அவர்கள், யாழ் போதனா வைத்திய சாலைப் பணிப்பாளர் கலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள், யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி சு.வீரசுதன் அவர்கள், சாளரம் சஞ்சிகையின் ஆசிரியர் திருமலை யோகேந்திரம் அவர்கள், உள்ளிட்ட 1700 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் இக் கலந்துரையாடலில் கலந்து கொள்ள முடியாத போராளிகள், கலந்து கொள்ள முடியாததையிட்டு மனம்வருந்தியதுடன், வரும் காலங்களில் இவ்வமைப்புடன் இணைந்து பயணிப்பதாகவும் உறுதியளித்துள்ளனர்.

தமிழர் தாயகத்தில் ஏற்பட்டுள்ள இன்றை சூழலில் இக் கலந்துரை யாடலை பலரும் வரவேற்றுள்ளதுடன் இவர்களுக்கான சகலவித ஒத்துழைப்பும் வழங்கவும் முன்வந்துள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்