நல்லாட்சி நாயகர்களும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் ஒரு வருட காலக் கண்ணீர்ப் போராட்டமும் — அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

2009ம் ஆண்டு போர் முடிந்து ஒன்பது வருடங்களைக் கடக்கும் நிலையில், சிங்களத்தால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களுக்கான நீதி இன்றுவரை கானல் நீராகவே உள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சொந்தங்களால் மேற்கொள்ளப்படும் கவனயீர்ப்புப் போராட்டமானது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாகிய 30ம் திகதி ஆகஸ்ட் மாதத்தையும் கடந்து இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்றது.

உலகிலேயே சிறிலங்காவில் தான் அதிக அளவில் வலிந்து காணாமல் ஆக்கபட்டோர் உள்ள நாடாக கணிக்கப்படுகின்றது. ஐநா மனித உரிமைச் சட்ட வரைபுகளுக்கு விரோதமாக மனித நேயத்தையே குழிதோண்டிப் புதைத்துவிட்டு தமிழ்மக்களைக் கொன்று குவித்த பௌத்த தேசமானது பௌத்த தர்மத்தையே நரகக் குழிக்குள் தள்ளிவிட்டுள்ளது.

சிறிலங்காவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசாங்கம் ஒரு முறையான பொறுப்புக் கூற வேண்டும் எனக் கோரி ஓர் ஆண்டு காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலவரையற்ற கவனயீர்ப்புப் போராட்டம் ஐநா சபையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் உதாசீனம் செய்யும் சிறிலங்காவிடம் இருந்து நீதி கிடைக்கும் என்ற ஒரு நப்பாசையில் இன்றுடன் (20.02.2018) இரண்டாவது ஆண்டை நோக்கி கண்ணீரும் கம்பலையுமாக நகர்கின்றது.

இந்த ஓராண்டு காலத்தில் சிங்கள அரசு பலவிதமான உறுதிமொழிகளை அளித்தும் இன்றுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை நேரடியாக வந்து சந்தித்துப் பேச்சுக்கள் நடத்திய பிரதி பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்தன எழுத்து மூலமாக அளித்த உறுதிமொழியும் காற்றில் பறக்கவிடப்பட்டது.
கடந்த வருடம் தைத்திருநாளில் யாழ்ப்பாணம் வந்த ரணில் விக்கிரமசிங்க வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் யாரும் உயிருடன் இல்லை என்று பொதுமேடையில் கூறினார். நல்லாட்சி நாயகர்களின் கபடத்தனத்தின் ஒரு வெளிப்பாடாகவே தமிழ்மக்கள் இவரின் நயவஞ்சகக் கூற்றை நோக்கினர்.

தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களுக்கு சனாதிபதி கொடுத்த வாக்கின்படி தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் கூட வெளியிடவில்லை. இறுதி யுத்தத்தின் போது 18000ற்கு மேற்பட்டோர் இராணுவத்திடம் கையளிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இந்தக் காலப்பகுதியில் காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படும் என்று அமைச்சர் ரஞ்சன் விஜேவர்தன தெரிவித்தார். ஆனால் இதுவரை எந்த முன்னெடுப்புக்களோ நடவடிக்கைகளோ எடுத்ததாகத் தெரியவில்லை. இப்படியாக அமைச்சர்களதும் அரசியல்வாதிகளதும் உறுதிமொழிகள் காற்றில் பறந்தது தான் மிச்சம்.

2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், இலங்கை பாராளுமன்றத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் அமைப்பதற்கு ஒரு மசோதாவை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றியது. ஆனால், இன்றுவரைக்கும் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படவில்லை. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் வழக்குகளை விசாரிக்க பணிக்கப்பட்ட எல்லா வகையான ஆணைக்குழுக்களும் இதுவரைக்கும் எந்தவொரு வழக்குகளையும் விசாரணை செய்து தீர்த்ததாகத் தெரியவில்லை. அனைத்து விடயங்களிலும் தமிழ்மக்களை ஏமாற்றிக் காலத்தைக் கடத்தும் தந்திரோபாயத்தையே நிகழ்த்தி வருகின்றது நல்லாட்சி நாயகர்களின் நயவஞ்சக அரசு.

இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தெருக்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்காக இலங்கையில் தமிழ் பெண்களால் முன்னெடுக்கப்படுகின்ற எதிர்ப்பு போராட்டமானது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது மற்றும் எந்த முகாம்களில் இந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், போன்ற விபரங்களை வெளியிடாது தொடர்ந்தும் மக்களை ஏமாற்றி வருகின்றது இந்த இனவாத அரசு.

2017ஆம் ஆண்டு, யூன் மாதம் 26ஆம் திகதி, சனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வலிந்து காணாமல் ஆக்கபட்டோர் தொடர்பாக நீதிகோரி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது கால அளவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான மூன்று பட்டியல்களை பத்திரிகைகளில் வெளியீடு செய்வதற்கு தான் ஏற்பாடுசெய்வதாகத் தெரிவித்திருந்தார். இவற்றுள் முதலாவது பட்டியலானது இறுதி யுத்தத்தின் முடிவில் சரணடைந்தவர்கள் மற்றும் யார், யாரெல்லாம் தடுப்புகாவலில் தடுத்து வைக்கபட்டு உள்ளார்கள் என்பதை பற்றிய பெயர் பட்டியலாகும், இரண்டாவது பெயர் பட்டியலானது யாரெல்லாம் இரகசிய தடுப்புகாவல் முகாங்களில் தடுத்து வைக்கபட்டிருப்பவர்கள் பற்றியது, மற்றும் மூன்றாவது பெயர்பட்டியலானது யாரெல்லாம் பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டு இருக்கின்றனரோ அவர்களின் பெயர்பட்டியல் ஆகும்.

ஆனால் இன்றுவரையும் சிறிலங்கா அதிபர் தன்னை சந்தித்து கோரிக்கைகளை சமர்ப்பித்த, இந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக நீதிகோரி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தான் கொடுத்த வக்குறுதியை நிறைவேற்றுவதில் பின்னடைவையே கண்டுள்ளார். மாறாகக் கடந்த வருடம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் யாரும் தனது ஆட்சியில் எந்த முகாம்களிலும் இல்லை என்று கூறி தமிழ்மக்களின் தலையில் பாரிய குண்டைத் தூக்கிப் போட்டார்.

முடிவின்றித் தொடரும் இம் மக்களின் நீதிக்கான போராட்டத்திற்கு ஒரு நல்ல தீர்வை சர்வதேசம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை சர்வதேச சமூகத்திடம் முன்வைப்பதோடு எமது நீதிக்கான தீர்வை ஐநா சபையின் பாதுகாப்புச் சபைக்கு கொண்டு செல்ல எல்லோருமாக ஒன்றிணைந்து செயற்படுவோம்.

-தமிழரின் தாகம் தமிழுழத் தாயகம்-
-அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-

About இலக்கியன்

மறுமொழி இடவும்