கட்சி தாவினால் பதவி பறிபோகுமென்கின்றது தமிழரசு!

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் தென்னிலங்கையில் மட்டுமல்லாது, வடக்கிலும் பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளநிலையில் கூட்டமைப்பிலிருந்து எவரும் மாற்று கட்சிகளிற்கு தாவினால் அவர்கள் கட்சியை விட்டு நீக்கப்படுவார்களென தமிழரசுகட்சி தலைமை எச்சரித்துள்ளது.
வடக்கில் உள்ள பெரும்பாலான சபைகளில் எந்த ஒரு கட்சிகளும் பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொள்ளாத நிலையில், அரசியல் நெருக்கடி ஏற்பட்டிருக்கின்றது.
கூட்டமைப்பின் மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்ற நிலையில் கூட்டமைப்பின் தலைமையினது தவிசாளர் தெரிவு கடுமையான சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களிற்கு தமிழரசு தலைமை புனர்வாழ்வளிக்க முற்பட்டுள்ள நிலையில் தேர்தலில் தெரிவான உறுப்பினர்களில் பலரும் கட்சி தாவ முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், வடக்கில் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியை கைப்பற்றும் நடவடிக்கையில், அரசியல் கட்சிகளுக்கும், சுயேட்சைக்குழுக்களும் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

அந்தவகையில், வடக்கில் பூநகரி மற்றும் ஊர்காவற்றுறை தவிர்ந்த ஏனைய எந்த உள்ளூராட்சி சபையிலும், பெரும்பான்மை பலம் எந்தக் கட்சிக்கும் கிடைக்கவில்லை. தொங்கு நிலையில் உள்ள சபைகளில் ஒன்றில் ஈ.பி.டி.பியும், இரண்டில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஏனையவற்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதிக ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ளன.

இந்நிலையில், வடக்கில் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியை கைப்பறும் நோக்கில் பல்வேறு தரப்பினர்களும் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பெரும்பான்மை பலத்தை திரட்டுவதற்காக, இரகசிய பேரங்கள் நடத்தப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
வடக்கில் தொங்கு நிலையில் உள்ள சபைகளில் ஆட்சியை கைப்பற்ற அரசியல் கட்சிகள் களத்தில் குதித்துள்ளதால், கட்சி தாவல்கள், தீவிரமடையலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையிலேயே கட்சி தாவலில் ஈடுபட்டால் பதவி பறிப்பு பற்றிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கான முன்னோடியாக தமிழரசுகட்சியிலிருந்து அனந்தியை வெளியேற்றும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்