அன்று ஜெயலலிதா செய்ததை இன்று காங்கிரஸ் செய்கிறது…ஆனால் அசிங்கப்பட்டது தான் மிச்சம்!

அம்மா உணவகம் போல் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்திரா உணவக திறப்பு விழாவில் வாய் தவறி அம்மா உணவகம் என கூறிய ராகுல் காந்தி கூறினார்.

தமிழகத்தில் மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவால் 2013 ஆம் ஆண்டு மலிவு விலை உணவகம் மாநகராட்சிகளில் துவங்கப்பட்டது. இந்த வகை மலிவு விலை உணவகம் ஏழை எளிய மக்களுக்கு பயன்மிக்கதாய் விளங்கியதால் அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் இதே போன்று திட்டத்தை செயல்படுத்த அம்மாநில முதல் மந்திரி சித்தராமையா முடிவு செய்தார்.

காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் கர்நாடகாவில் இந்த திட்டத்தை இன்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி துவக்கி வைத்தார். மாநிலம் முழுவதும் சுமார் 101 இடங்களில் துவங்கப்பட்டுள்ள இந்த உணவகத்திற்கு இந்திரா உணவகம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த உணவகத்தில் காலை உணவு ரூ.5 க்கும் இரவு உணவு ரு.10க்கும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் இந்திரா உணவகத்தை துவக்கிவைத்த பின் அதில் உணவு அருந்திய ராகுல் காந்தி பின் நிகழ்ச்சியில் பேசினார். அப்போது, இந்திரா உணவகம் என்று கூறுவதற்கு பதிலாக வாய்தவறி அம்மா உணவகம் என்று சொல்லிவிட்டார். ராகுல் காந்தி பேசுகையில், “ ஒருசிலமாதங்களுக்குள் கர்நாடக மாநிலம் முழுவதும் உள்ள ஏழை மக்கள் இந்த அம்மா உணவகத்தில் சாப்பிட்டு பயன்பெற முடியும்” என தவறுதலாக குறிப்பிட்டு விட்டார்.

தொடரந்து பேசிய ராகுல் காந்தி, “ பட்டினியில் செல்லும் லட்சகணக்கான ஏழை மக்கள் தற்போது இந்த இந்திரா உணவகத்தில் சாப்பிட்டு பயன்பெற முடியும். காங்கிரஸ் ஆட்சியில் இது போன்ற நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு பயன் கிடைக்கிறது என்பதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார். முன்னதாக நேற்று, சுதந்திர தின விழாவில் பேசிய கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா மலிவு விலை உணவகங்கள் நாளை திறக்கப்படும் என்று அறிவித்து இருந்தார். பெங்களூருவில் உள்ள இந்திரா உணவகத்திற்காக ஆண்டுக்கு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

About செய்தியாளர்

மறுமொழி இடவும்