இலங்கைக்கான ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதி காலமானார்!

இலங்கைக்கான ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாகப் பணியாற்றி வந்த உனா மக்கோலி காலமானார்.

கொழும்பில் உள்ள ஐ.நா பணியகம் இன்று அதிகாலை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

54 வயதான உனா மக்கோலி, மருத்துவ விடுமுறையில் சென்று சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் இலங்கைக்கான ஐ.நாவின் முதல் பெண் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக பணியாற்றியிருந்தார்.

வலுவான, உறுதியான, அர்ப்பணிப்புள்ள தலைவராக இருந்த உனா மக்கோலி, இலங்கையில் ஐ.நாவின் 21 அமைப்புகளுக்கு தலைமை தாங்கியிருந்தார். இலங்கையில் ஆறு ஆண்டுகள் பணியாற்றியுள் இவர் இரண்டு ஆண்டுகள் ஐ.நா வதிவிட இணைப்பாளர் மற்றும் ஐ.நா அபிவிருத்தி திட்ட பிரதிநிதியாகவும் அதற்கு முன்னர் யுனிசெப் பிரதிநிதியாகவும் பணியாற்றியிருந்தார்.

ஐ.நாவில் 17 ஆண்டுகள் பணியாற்றிய உனா மக்கோலி, 7 ஆண்டுகள் சிறுவர் அபிவிருத்தி தொடர்பான பணிகளில் ஈடுபட்டிருந்தார். இவர் பனாமா, டோகோ, சூடான், கென்யா, அங்கோலா போன்ற நாடுகளிலும் பணியாற்றினார்.

அயர்லாந்தைச் சேர்ந்த உனா மக்கோரி இரண்டு பிள்ளைகளின் தாயாராவார். இவரது மரணம் ஆழ்ந்த துயரத்தை தருவதாக ஐ.நா வருத்தம் தெரிவித்துள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்