ஐ.நா. வதிவிட பிரதிநிதி உனா அம்மையாரின் திடீர் மறைவு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது! அனந்தி சசிதரன்!

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநியும் ஐ.நா. அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் வதிவிடப்பிரதிநிதியுமான உனா மொக்ஹோலி அம்மையாரின் திடீர் மறைவு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளதாக வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் கௌரவ திருமதி அனந்தி சசிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். அது குறித்து மேலம் தெரிவிக்கையில்..

இலங்கை அரசு மற்றும் அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட, மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட இனவழிப்பு செயற்பாடுகளில் இருந்து எமது மக்களின் இருப்பினையும் எமது மண்ணையும் பாதுகாக்கும் பொருட்டு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட உலக மன்றங்களில் நீதிக்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றோம்.

எமது நீதிக்கான போராட்ட மைய்யமாகத் திகழ்ந்துவரும் மேற்கூறிய தளங்களில் செயற்பட்டுவரும் அத்தனை பேரும் எமது இனம், மதம், மொழி மற்றும் கலை-கலாச்சாரம்-பண்பாட்டு விழுமியங்களோடு நேரடித் தொடர்பேதுமற்றவர்களாகவே இருந்து வருகின்றார்கள்.

அதையும் கடந்து எம்மையும் அவர்களையும் ஒரே புள்ளியில் இணைக்கும் விடயமாக மனித உரிமைகள் விவகாரம் அமைந்துள்ளது. சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்பற்றப்பட்டு வரும் மனித உரிமைகள் சாசனத்திற்கு அமைவாக எமது நீதி கோரும் பயணத்தில் உடனாளர்களாக பயணிக்கும் அத்தனை பேரும் அதிமுக்கியமானவர்களே.

அந்தவகையில், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான முதல் பெண் நிரந்தர வதிவிட பிரதிநிதியாக கடந்த ஆறு ஆண்டு காலம் பணியாற்றிவந்த உனா அம்மையார் அவர்களின் திடீர் மறைவானது பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்