வறுமையைப் பயன்படுத்தி பல பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு முகங்கொடுக்கின்றனர் – அனந்தி சசிதரன்

வடக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் நிலைமை தொடர்பாக வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவிக்கையில்,“

வடக்கு மாகாணத்தின் சமூக சேவைகள் திணைக்களத்தின் புள்ளிவிபரத்தின் பிரகாரம், யாழ்ப்பாண மாவட்டத்தில் 36,318 குடும்பங்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 8,435 குடும்பங்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 5,961 குடும்பங்களும், வவுனியா மாவட்டத்தில் 6,714 குடும்பங்களும் மன்னார் மாவட்டத்தில் 5,903 குடும்பங்களும் பெண்களை தலைமையாக கொண்டுள்ளன.இந்த பெண் தலைமைத்துவக் குடும்பங்களில், போரில் கணவனை இழந்தோர், காணாமல் போனோர், போரின் பின்னர் ஏமாற்றப்பட்ட பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் போன்றோர் உள்ளனர்.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களே யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களாக தெரிவு செய்து அரச உதவிகளாயினும், தனிநபர் உதவிகளாயினும் சரி, வழங்கப்படுகின்றன. எனினும், உண்மையில் மன்னார், வவுனியா ஒரு பகுதி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து வன்னி பகுதியில் வசித்து பின்பு மீள குடியமர்ந்துள்ளனர். அவர்களும் யுத்த பாதிப்புக்குள்ளான நிரலிலேயே உள்வாங்கப்படுகின்றனர். அதனால் இந்த விடயத்தில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தை தாண்டி பிற மாவட்டங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பெண்தலைமைக் குடும்பங்கள், வாழ்வாதாரத்துக்காக சுயதொழில்களை மேற்கொள்கின்றனர். பெரும்பாலும், கால்நடைகள் மற்றும் கோழி வளர்ப்பை மேற்கொள்கின்றனர். நாம் வடக்கு மாகாண ரீதியில் இவர்களை ஒரு கூட்டுறவாக ஒன்றிணைத்து சுயதொழில்களை மேற்கொண்டு வாழ்வாதாரத்தை முன்னேற்ற முடியும். ஆனால் தற்போது இவர்களின் மனநிலையை பார்க்கையில் அநேகமானவர்கள் குழு முயற்சிக்கு தயாராக இல்லை. இந்த 4 வருடத்தில் நாம் கணிசமான அளவில் பல வாழ்வாதார உதவிகளை வழங்கியிருந்தும், அது வெற்றியளிக்கவில்லை. காரணம் வடக்கு மாகாணத்தில் சரியான கண்காணிப்பு இல்லை.

கிராம உத்தியோத்தர் ஒவ்வொருவரும், தன் அனுமதி இன்றி எந்த ஒரு நுண்கடன் நிறுவனங்களும் உள்நுழையக் கூடாது என்ற இறுக்கமான முடிவினை எடுக்க வேண்டும். இதனால்தான் இந்த பிரச்சினையை நிவர்த்தி செய்ய முடியும்.

ஏற்கனவே, தொழில் முயற்சியில் ஈடுபடும் ஒரு பயனாளியை ஊக்குவிப்பதுக்காக மேலும் ஒரு உதவியை கடந்த காலத்தில் நம் மகளிர் விவகார அமைச்சு செய்திருந்தது. தற்போது ஒரு உதவியுமே கிடைக்காத பயனாளிகளை இனங்கன்டு அவர்களுக்கான உதவிகளை வழங்குவதுக்கான வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அனைத்து தரப்பு மக்களையும் ஊடகங்கள் சென்றடைவதில்லை. ஆகவே இம்முறை உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிட்ட பெண்களை தொடர்பு கொண்டு, நேரடி களவிஜயத்தின் போது, அந்த வீட்டின் நிலைமைகளை அறிந்து கொண்டு, எந்த ஓரு உதவியும் கிடைக்கப்பெறாதவர்களின் பட்டியலைக் கோரியிருந்தேன். இதன் பயனான முதற்கட்டமாக 300 பேரின் பட்டியல் கிடைக்கபெற்றுள்ளது.

இந்த பட்டியலை கிராம சேவகரிடம் கோரும் போது, ஏற்கனவே உதவி வழங்கப்பட்டவர்களுக்கு மீள கிடைப்பதுக்கான சந்தர்ப்பம் உள்ளது. ஒரு அரசியல்வாதியிடம் கோரும் பட்சத்தில் வாக்கு பெற்றதை தக்க வைப்பதுக்கான அரச உத்தியோகத்தர்களின் பட்டியலாக உள்ளது.

இவற்றை நிவர்த்தி செய்ய அடிமட்ட மக்களிடம் இருந்து சரியான தேர்வுகள் கிடைக்க வேண்டும். இவற்றை எல்லாம் செய்வதற்கு நிதி எமக்கு போதாது உள்ளது. நாம் சரியான திட்டங்களை தயாரித்துள்ளோம். விரைவில் அதற்கு நிதியை பெற்று மக்களுக்கான உதவிகளை மேற்கொள்வோம்.

பெண் தலைமைத்துவ குடும்பங்கள் எதிர்கொள்ளும் மற்றுமொரு பிரச்சினை, பாலியல் ரீதியான பிரச்சினைகள். இவை பாரியளவில் உருவெடுத்துள்ளது. இவர்களின் வறுமையைப் பயன்படுத்தி பல பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு முகங்கொடுக்கின்றனர். இதில் நம் சமூகம் சரியாக வலுவிழந்து செல்கின்றது” என தெரிவித்தார்.

ஒரு பயனாளிக்கு தையல் இயந்திரம் வழங்கப்படும் போது, அந்த பயனாளி வறுமை காரணமாக அந்த இயந்திரத்தை விற்பனை செய்துவிடுகின்ற நிலமை காணப்படுகின்றது. அதனால் நான் கூட்டுறவு அமைச்சர் என்ற வகையிலும், தொழில்துறை அமைச்சர் என்ற வகையிலும் குழு முயற்சிகள் மூலம் வேலைத்திட்டங்களை தொடங்குவதுக்கான முயற்சிகளை மேற்கொள்கின்றேன்.

இங்கு சமுர்த்தி உதவித்திட்டம் ஒன்றை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. பல பெண்கள் சமுர்த்தியை பெற்றுதருமாறு கோருகின்றனரே தவிர, தாம் சுயமாக ஒரு வேலையை செய்து முன்னேறுவதுக்கு தயாராக இல்லை. வீட்டுடன் இணைந்த வருமானங்களான வீட்டுத்தோட்டம், கால்நடை வளர்ப்பு என்பவற்றை தற்போது செய்ய தவறுகின்றனர்.

இது மட்டுமல்லாது நோக்கத்தை அடையாத கடன்களை அதிக வட்டிக்கு பெற்று அதனை சரியான வழியில் முதலீடாக்காமல் செலவிடுகின்றனர்.

நாம் அரசுடன் பேசி, குறைந்த வட்டியுடன் அந்த கடனை அடைப்பதுக்கு கூட்டுறவினூடாக நிதியினை கோரியுள்ளோம். அனால் அந்த கடனை நிவர்த்தி செய்தாலும் மீளவும் இவர்கள் கடன் பெற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதுக்கு உத்தரவாதம் இல்லை. ஆகவே இந்த பெண்களை வலுவூட்டுதல் என்பது பெரும் கடினமாக உள்ளது. இந்த நுண்கடன் திட்டம், அதிகம், நகரப்புற பெண்களை நோக்கி நகர்வதில்லை. கிராமப்புற பெண்களே இதில் அதிகம் பாதிப்படைகின்றனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்