அடுத்த மாகாணசபைத் தேர்தலில் விக்கி தலைமையில் புதிய அணி? பனங்காட்டான்

தமிழ் மக்கள் பேரவையானது ஒரு மக்கள் இயக்கமென்று அடிக்கடி வலியுறுத்திக கூறும் முதலமைச்சர் விக்கினேஸ்வரன், ஒரு மக்கள் இயக்கம் கட்சிக் கட்டுக்கோப்புகளில் சிலவற்றைப் பின்பற்றலாமென்று கூறியிருப்பதானது, அடுத்தகட்ட புதிய அரசியல் பயணத்தின் ஆரம்பக் குறியாகவே பார்க்கப்பட வேண்டியது.

புலி வருகுது, புலி வருகுது என்று ஒரு கதையை சிறுவயதில் படித்தது ஞாபகத்துக்கு வருகிறது.

வயல்வெளியில் மாடுகளை மேய்க்கும் சிறுவனொருவன் திடீரென புலி வருகுது, புலி வருகுது எனக் கத்துவான்.

வயலில் வேலை செய்து கொண்டிருப்பவர்கள் அச்ச மேலீட்டால் ஓடத்தொடங்குவார்கள். அச்சிறுவன் விழுந்து விழுந்து சிரிப்பான்.

இது ஒரு தொடர்கதையானதால் அவனது புலி வருகுது கூச்சலை பின்னர் எவரும் கணக்கிலெடுப்பதில்லை.

ஒருநாள் புலி வருகுது என்று கத்திக் கொண்டு அவனே ஓடத்தொடங்கினான். அவனின் கூச்சலுக்கு அர்த்தமில்லாது போனதால் வயலில் நின்றவர்கள் எவரும் ஓடவில்லை.

ஆனால், அன்று உண்மையிலேயே புலி வந்தது.

இதுதான் அந்தக் கதை.

தமிழ் மக்கள் பேரவையின் சிறப்புக் கூட்டமொன்று இந்த மாதம் முதலாம் திகதி யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பேரவையின் இணைத்தலைவர் என்ற முறையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் வரலாற்று முக்கியத்துவம் பெறப்போகின்ற உரையொன்றினை இங்கு நிகழ்த்தினார்.

இந்த உரையின் அச்சுப் பதிவினை மூன்று தடவைகள் மீள்வாசிப்புக்குட்படுத்தியபோது, புலி வருகுது கதைதான் என் மனதில் ஓடியது.

சட்டம், நீதி, தீர்ப்பு, ஆன்மிகம், சொற்பொழிவு என்று காலத்தை ஓட்டிக்கொண்டிருந்த விக்கினேஸ்வரனை அரசியலுக்கு இழுத்து வந்தவர்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர்.

இங்கு கூட்டமைப்பினர் என்று குறிப்பிடுவது நான்கு கட்சிகள் இணைந்த ஒன்றையே தவிர, தமிழரசுக் கட்சியின் தன்னாதிக்கம் நிறைந்த தலைமையை அல்ல.

விக்கினேஸ்வரனை அரசியலுக்கு இழுத்து வந்தவர்களில் ஒருவரான அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவர் பிரபல சட்டவாளர் நீலகண்டன் அவர்கள், கடந்த வாரம் இயற்கையெய்தியதை இங்கு மறவாது பதிவு செய்ய வேண்டும்.

கூட்டமைப்புக்குள் குதிராட்டம் போடும் சுமந்திரன், வடமாகாண முதலமைச்சர்மீது கொண்ட குரோதம் விரோதமாக மாறி, அவரைப் பதவி இறக்க எடுத்த நடவடிக்கை தோல்வியில் முடிவடைந்தது. இதனால் ஏற்பட்ட தாக்கம் சுமந்திரனை மேலும் மேலும் முதலமைச்சர்மீது பகைமை கொள்ள வைத்துள்ளது.

பேச்சு, எழுத்து, செயற்பாடு ஆகிய அனைத்திலும் இனமானக் கொள்கையுடன் செயற்படும் அரசியற்கட்சியல்லாத தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவராக முதலமைச்சர் இயங்குவது தமிழரசுக் கட்சிக்கு தாங்க முடியாத அச்சம்.

ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளிருந்து வெளியேறிய பண்டாரநாயக்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கினார்.

தமிழ் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தலைமையிலான குழு தமிழரசுக் கட்சியை ஆரம்பித்தது.

ராவுப் ஹக்கீமின் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸிலிருந்து வெளியேறிய ரிசாத் பதியுதீன் தலைமையிலான அணி புதிய கட்சியை உருவாக்கி செயற்படுகிறது.

தமிழ் மக்கள் பேரவையை வளரவிட்டால், அது ஒருகாலத்தில் தமிழரசுக் கட்சிக்கு சவாலாகிப் போய்விடுமென்ற அச்சமே சுமந்திரன் அன்ட் கம்பனியை வாட்டிக் கொண்டிருக்கிறது.

இதன் காரணமாகவே விக்கினேஸ்வரனை ஓரங்கட்டவும், முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கவும், அடுத்த வடமாகாண சபைத் தேர்தலில் நியமனம் வழங்காதிருக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இந்த வருடப் பிற்பகுதியில் நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் விக்கினேஸ்வரன் தலைமையிலான ஓர் அணி (கட்சி அல்ல) தமிழரசை எதிர்த்து களத்தில் குதிக்கலாமென்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் பரப்பி வருபவர்கள் தமிழரசுக் கட்சியினரே.

இந்தப் பரப்புரைக் குழுவின் தலைவர் சுமந்திரன். இவரது உதவியாளர் மாவை சேனாதிராஜா.

புலி வருகுது, புலி வருகுது என்று கூறப்பட்டது இப்போது உண்மையாகவே அந்தப் புலி வந்துவிட்டதுபோல் தெரிகிறது.

பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் முதலமைச்சர் நிகழ்த்திய உரையை ஆழமாக வாசிப்பின், அந்த உரையின் வரிகளுக்கிடையே மறைந்திருக்கும் எதிர்கால வரிகளைக் கண்டுகொள்ள முடியும்.

பேரவை உருவாக்கப்பட்டபோது அதன் கொள்கைகளும், அடிப்படைக் கோட்பாடும் திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டன. வடக்கு கிழக்கு இணைப்பு, தமிழ்த் தேசியம், சுயாட்சி என்பவை இதன் அடிப்படை அம்சங்கள்.

பேரவை சார்பானவர்கள் இதனைப் பகிரங்கமாகக் கூறிவந்தபோது தமிழரசுசார் கூட்டமைப்பு இதனை வெட்டியே பேசி வந்தது. இணைப்பு, தேசியம், சுயாட்சி பேசுபவர்கள் தீவிரப் போக்காளர்கள் என்றே இவர்கள் அண்மைய தேர்தலின்போது அறிவித்து வந்தனர்.

இதனைச் சுட்டி உரையாற்றிய முதலமைச்சர், அண்மைய தேர்தல் முடிவுகள் பேரவையின் கருத்தையும், கொள்கையையும் மக்கள் ஏற்றுக் கொண்டதை காணக்கூடியதாகக் கூறியுள்ளார். இது முற்றிலும் உண்மை.

உள்;ராட்சிச் சபைத் தேர்லில் பேரவை ஒரு மக்கள் இயக்கமாக பக்கச் சார்பின்றி இருந்ததாயினும், பேரவையுடன் இருக்கும் கட்சிகள் தேர்தலில் கலந்து கொண்டபோது, மக்கள் வழங்கிய ஆதரவுத் தீர்ப்பு தங்கள் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி என்றும் முதலமைச்சர் கூறியிருப்பது முற்றிலும் உண்மையே!

பேரவை தனது வேகத்தைக் கூட்டி பயணிக்க வேண்டிய தருணம் தற்போது உருவாகியுள்ளது என்று முதலமைச்சர் தெரிவித்திருப்பதன் அர்த்தம் என்ன? வரப்போகின்ற வடமாகாண சபைத் தேர்தலையா அவர் குறிப்பிடுகிறார்?

அண்மைய தேர்லின்போது, எம்மைப் பார்த்து தீவிரப் போக்காளர்கள் என்று கூறியவர்களை கணிசமான மக்கள் நிராகரித்துள்ளனர் என்று முதலமைச்சர் விரல் காட்டுவது, தமிழரசு தலைமை தாங்கும் கூட்டமைப்பையே என்பது விபரிக்கப்பட வேண்டியதல்ல.

கட்சிகளின் ஆதரவாளர்கள் கட்சிகளையே முதன்மைப்படுத்துகின்றனர். பேரவையின் ஆதரவாளர்கள் கொள்கை ரீதியாக ஒன்றுபட்டுச் செயற்படுபவர்கள் என்ற இவரது கூற்று கூட்டமைப்பை நோக்கி வீசப்பட்டுள்ள அம்பு.

இவ்வேளையில், இளைஞர்களை ஒன்றுசேர்க்கும் பாரிய பொறுப்பு எம்மேல் (பேரவை) சுமத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிடுவது, இளைஞர் அணியைத் தமிழர் தேசமெங்கும் பேரவை ஏற்படுத்த வேண்டுமென்ற நீண்டதூர அரசியல் பயணத்தின் இலக்குக் கொண்ட வேண்டுகோள்.

இதனை மேலும் வலியுறுத்தும் வகையில், வடக்கில் கிழக்கில் இளைஞர் அணிகளை உருவாக்க தக்க தருணம் வந்துவிட்டது என்ற முதலமைச்சரின் கூற்றில் வரும் தக்க தருணம் என்பது சற்றுக் கூர்ந்து நோக்கப்பட வேண்டியது.

தமிழ் மக்கள் பேரவையானது ஒரு மக்கள் இயக்கமென்று அடிக்கடி வலியுறுத்திக கூறும் முதலமைச்சர் விக்கினேஸ்வரன், ஒரு மக்கள் இயக்கம் கட்சிக் கட்டுக்கோப்புகளில் சிலவற்றைப் பின்பற்றலாமென்று கூறியிருப்பதானது, அடுத்தகட்ட புதிய அரசியல் பயணத்தின் ஆரம்பக் குறியாகவே பார்க்கப்பட வேண்டியது.

கட்சி அரசியல் வேறு, அரசியல் நாட்டம் வேறு என்று பிரித்துக் கூறும் முதலமைச்சர், கட்சி அரசியலில் வெகுவாக ஈடுபடாதிருக்கும் பதினொரு பேரை (தம்முடன் சேர்த்து) செயற்குழுவில் நியமித்திருப்பதாக அறிவித்திருப்பது இன்னொரு வகையான அரசியல்.

இக்குழுவிலுள்ள முதலமைச்சரும் பேராசிரியர் சிற்றம்பலமும் முறையே கூட்டமைப்பு மற்றும் தமிழரசின் உள்வாங்கல்களாக பொதுமக்களால் பார்க்கப்படுபவர்கள்.

ஆனால், வெகுவாக ஈடுபடாதவர்கள் என்ற அவரது அழுத்தம், அரசியல் செயற்பாடுகளில் தங்களைச் சுட்டுவதாகும்.

அதேசமயம், மேலும் மூவர் இந்தச் செயற்குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர்.

வடமாகாண முன்னாள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன், தற்போதைய அமைச்சர் அனந்தி சசிதரன், தென்மராட்சியின் தமிழரசுக் கட்சி அமைப்பாளராக இருந்த க.அருந்தவபாலன் ஆகியோரே இம்மூவரும்.

தமிழரசுக் கட்சியின் முன்னெடுப்பால் பதவியிழந்தவர் ஐங்கரநேசன். தமிழரசுக் கட்சியால் பழி வாங்கப்பட்டவர் அனந்தி சசிதரன். தமிழரசுக் கட்சியின் உள்ளக மோதலால் காயப்பட்டவர் அருந்தவபாலன்.

இவர்கள் மூவரையும் வெகுவாக அரசியலில் ஈடுபடாதவர்கள் என்று முதலமைச்சர் கூறுவது ஏற்புடையதன்று.

முதல் இருவரும் வடமாகாணசபை உறுப்பினர்கள். மூன்றாமவர் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு கட்சியினால் பலியெடுக்கப்பட்டவர்.

இவைகளை கூரிய பார்வையுடன் அணுகும்போது கட்சிகளுக்கு அப்பாற்பட்ட இனம்சார் அரசியல் சிந்தனை கொண்ட புதிய அணியொன்றின் உருவாக்கம் கண்களுக்குப் புலப்படுகிறது.

பண்டாரநாயக்கா, செல்வநாயகம், ரிசாத் பதியுதீன் வரிசையில் விக்கினேஸ்வரனின் பெயரும் இடம்பெறலாம்.

தமிழரசுசார் கூட்டமைப்பினால் ஓரங்கட்டப்பட்டோர், பதவி நீக்கப்பட்டோர், பதவி பறிக்கப்பட்டோர், வெளியேற்றப்பட்டோர், விலக்கப்பட்டோர், அலட்சியப்படுத்தப்பட்டோர் மற்றும் தொல்லைகள் தாங்காது விலகியோர் சங்கமமாகி வரப்போகும் மாகாணசபைத் தேர்தலில் களமிறங்கப் போவது நன்றாகத் தெரிகிறது.

இதன் உருவாக்கம், செயற்பாடு, வெற்றி அனைத்துக்கும் தளம் அமைத்துக் கொடுத்தவர்களும் கொடுத்துக் கொண்டிருப்பவர்களும் சுமந்திரன் அன்ட் கம்பனியினரே.

தொடர்டர்புடைய செய்திகள்
வவுனியாவில் காணாமல் போன மக்களின் உறவினர்கள் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்ட பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு சர்வதேச சமூகத்தின் கவனத்தை
இலங்கையில் புலிகள் மீண்டும் வந்து விட்டதாக பூச்சாண்டி காட்டி வடக்கில் நிலைக்கொள்ள இராணுவம் முயற்சிக்கின்றது. தற்போது வடபகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தின்
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச தலையீடு அவசியம் என வட.மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். வாரம் ஒரு

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*