காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் யாருக்காக ?உறவினர்கள் கேள்வி!

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள அலுவலகத்தை தாம் புறக்கனித்த நிலையில் யாருக்காக அலுவலகம் செயற்பட போகின்றது என முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

அத்தோடு சர்வதேச மகளீர் தினத்தன்று பாரிய கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளனர்.

தமிழர் தாயகப் பகுதிகளில் போரின் இறுதி நாட்களில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்தும் உறவுகளால் நேரடியாக கையளிக்கப்பட்ட நிலையிலும் கைதுசெய்யப்பட்டும், கடத்தப்பட்டும் பலர் காணாமல் ஆக்கப்பட்டனர்.

தமது உறவுகளை மீட்டுத் தருமாறு வலியுறுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களின் அனைத்து மாவட்டங்களிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மேற்கொண்டுவரும் போராட்டம் எதிர்வரும் எட்டாம் திகதி ஒரு ஆண்டு நிறைவினை பூர்த்தி செய்யவுள்ளது.

ஓராண்டை நிறைவிற்கு கொண்டுவரும் இந்த வேளையில் எதிர்வரும் எட்டாம் திகதி நடைபெறவுள்ள போராட்டத்தில் கலந்துகொண்டு தமக்கு தீர்வினை பெற்றுத் தரும்படி வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் அரசியல் பிரதி நிதிகள் உள்ளிட்ட அனைத்து உறவுகளுக்கும் அறைகூவல் விடுத்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள அலுவலகம் தொடர்பிலும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்