உள்ளூராட்சி சபைகள் குறித்து வெளிப்படையாகப் பேச அழைக்கிறார் சுரேஷ்!

உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பாக, இரகசிய பேச்சு நடத்துவதை விடுத்து, கட்சித்தலைமைகளுடன் பேச்சுக்களை நடத்த வேண்டும் என ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “உள்ளுராட்சி சபைகள் எதிர்வரும் 20 ஆம் திகதி நிறுவப்பட உள்ளது. இச் சபைகளுக்கான தேர்தல் நடைபெற்று முடிந்திருந்தாலும், சபைகளுக்கு தலைவர்களைத் தெரிவு செய்வதுக்கான தேர்தலொன்று நடைபெற இருக்கின்றது. முக்கியமாக வடகிழக்கில் ஓரிரு சபைகள் தவிர மற்றைய இடங்களில் அறுதிப் பெரும்பான்மையற்ற நிலையில் தொங்கு நிலைமை காணப்படுவதால் அதற்கானதொரு தேர்தல் நடைபெறவிருக்கின்றது. இத் தேர்தல்கள் இரகசியமான முறையில் நடைபெறவுள்ளதா, அல்லது வெளிப்படையாக நடைபெற உள்ளதா, என்பதே இருக்க கூடிய கேள்வி.

ஆனால் தாங்கள் உள்ளுராட்சி சபைகளை சரியான முறையில் நிர்வகிக்க வேண்டுமாக இருந்தால் சம்மந்தப்பட்ட அரசியல் தலைமைகள், ஏனைய அரசியல் தலைமைகளுடன் சரியான முறையில் பேச்சு வார்த்தைகளை நடாத்தி சரியான முறையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். ஆனால் இங்கு, இரகசியமான முறையில் தூது அனுப்புவதும் அல்லது வென்று வந்த உறுப்பினர்களுடன் இரகசியமான முறையில் பேச்சு வார்த்தைகளை நடாத்துவதும் கீழ் மட்டங்களில் அந்தப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்வதை பல தரப்புக்களிலும் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.

இவ்வாறானவர்கள் ஏனைய கட்சிகளுடன் பேசுவதுக்கு வெட்கப்படுகின்றார்களா, இல்லையென்றால் என்ன காரணத்துக்காக தூதுவர்கள் ஊடாகவும் இரகசியமான முறையிலும் கீழ் மட்டங்களினூடாகவும் ஊடகவும் இதனை ஏன் செய்ய விரும்புகிறார்கள் என்று எமக்கு விளங்கவில்லை.

ஆகவே சரியான நிர்வாகத்தை நடத்த விரும்புபவர்கள் அபிவிருத்தி பற்றிப் பேசி அல்லது ஊழலற்ற நிர்வாகத்தை நடத்துவோம் என்று கூறுகின்றவர்கள், இரகசியமான முறைகளில் பேசுவதனை விடுத்து கட்சிகளுடன் பேசி ஒரு அறுதிப் பெரும்பான்மையை அவர்கள் எடுத்துக் கொண்டு அதனூடாக ஸ்திரமான முறையில் சபைகளை நடத்த முன் வரவேண்டும்.

அவ்வாறு அதனைச் செய்யமுன் வருவார்களாக இருந்தால் குறைந்தபட்சம், அபிவிருத்தியையென்றாலும் பிரசேதச சபைகளில் செய்யக் கூடியதாக இருக்கும். இல்லாவிட்டால் சகல சபைகளின் நிர்வாகங்களிலும் மீண்டும் பிரச்சினைகள் ஏற்படும்” என தெரிவித்தார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்