இனவழிப்பு போரின் பழுவை சுமந்து நிற்கும் ஈழத்தமிழ் பெண்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்த அனைவரும் முன்வரவேண்டும்! மகளிர் தின விழாவில் அமைச்சர் அனந்தி சசிதரன் வலியுறுத்தல்!

இனவழிப்பு போரின் பழுவை சுமந்து நிற்கும் ஈழத்தமிழ் பெண்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்த, கட்சி, அரசியல், சாதி, மத வேறுபாடுகள் கடந்து தன்முனைப்பு நீங்கப்பெற்று ஆண், பெண் வேற்றுமை நீங்கி தமிழர்களாக நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என கிளிநொச்சியில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வில் உரையாற்றும் போது கௌரவ வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

வட மாகாண மகளிர் விவகாரம் புனர்வாழ்வளித்தல் அமைச்சின் சார்பில் “முன்னேற்றத்திற்கான உந்துதல்” என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டிருந்த சர்வதேச மகளிர் தின நிகழ்வானது நேற்று வியாழன் அன்று கண்டி வீதி, கிளிநொச்சியில் அமைந்துள்ள கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்றது. முன்னதாக காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி பழைய கச்சேரி வளாகத்தில் இருந்து ஆரம்பித்த விளிப்புணர்வு பேரணியானது நிகழ்விடம் வரை தொடர்ந்திருந்தது.

கௌரவ வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழிபுணர்வுப் பேரணி மற்றும் அரங்க நிகழ்வுகளிலும் பிரதம விருந்தினர்களாக கௌரவ இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் ரொபீனோ பீ மார்க்ஸ் அவர்களும் கௌரவ இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றித்தின் பதில் தூதுவர் மருத்துவர் பவுல் குட்பெரி ஆகியோர் பங்கேற்று சிறப்பித்திருந்தனர்.

இவர்களுடன், சிறப்பு விருந்தினர்களான கௌரவ வட மாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன், கௌரவ வட மாகாண சபை உறுப்பினர் ப.அரியரட்ணம், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திரு சு.அருமைநாயகம், வட மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு ஆர்.வரதீஸ்வரன் மற்றும் அமைச்சின் திணைக்களங்கள தலைவர்களும் பங்கேற்றிருந்தார்கள். கௌரவ வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொள்வதாக இருந்த நிலையில் தவிர்க்க இயலாத காரணத்தினால் பங்கேற்க முடியாது போயிருந்தது. இருந்தும் அவர் சார்பில் அனுப்பிவைக்கப்பட்ட அறிக்கை நிகழ்வில் வாசிப்பு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிகழவை தலைமையேற்று நடத்தியிருந்த கௌரவ வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் அவர்கள் உரையாற்றுகையில்…

இன்று சர்வதேச மகளிர் தினமாகும். பணியிடங்களிலும், பொது வெளியிலும், குடும்ப சூழலிலும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகள், துஷ்பிரயோகங்கள், அத்துமீறல்கள், வன்கொடுமைகள் உள்ளிட்ட உரிமை மீறல்கள், இனம், மதம், மொழி மற்றும் நாடுகள் கடந்த நிலையில் அனைத்துலக ரீதியாக காலம் காலமாகவே இடம்பெற்று வருகின்றது.

உலகளாவிய ரீதியில் இவ்வாறான பெண்களுக்கு எதிரான உரிமை மீறல்கள் நடைபெற்று வந்தநிலையில் சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் பிரான்சில்தான் முதன் முதலில் பெண்ணுரிமைக்கான போராட்டம் வலுவாக மேற்கொள்ளப்பட்டிருந்தது. பெண்களுக்கு எதிரான உரிமை மீறல்களை கண்டித்தும் அதற்கு நீதி கோரியும் பிரான்ஸ் முடிக்குரிய அரசருக்கு எதிராக பெருமெடுப்பில் போராட்டம் முன்னெடுக்கபட்டிருந்தது.
பெண்கள்தானே என்ற அலட்சியத்துடன் போராட்டத்தை அடக்கிவிட முயன்ற பிரான்ஸ் அரசர் இறுதியில் முடிதுறந்து ஓடுமளவிற்கு வீரியமான போராட்டமாக அமைந்திருந்தது. இந்த உற்சாகத்தில் பல்வேறு நாடுகளில் பெண்கள் தமது உரிமைகளை கோரி போராட்டத்தை தீவிரப்படுத்தியதன் விளைவாக 1848 ஆம் ஆண்டு மார்ச்-08 ஆம் நாளாகிய இன்றைய நாளில்தான் பிரான்ஸ் அரசவை ஆலோசனைக் குழுவில் பெண்களை இணைத்துக் கொள்ளவும், பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஆட்சியாளரால் ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தது.

பெண்ணுரிமைக்கான போராட்டத்தில் மிகப்பெரும் அடைவாக கருதப்பட்ட இந்த நாளை சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடும் வகையில் பின்னாட்களில் முடிவெடுக்கப்பட்டு இன்று வரை உலகம் தழுவியதாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் உலகம் தழுவியதாக காணப்பட்டு வரும் பெண்களுக்கு எதிரான உரிமை மீறல்களையும் கடந்து இனவழிப்பு போரின் பழுவினையும் ஈழத்தமிழ்ப் பெண்களாகிய நாம் சுமந்து நிற்கின்றோம்.

ஆணாதிக்க சமூகத்தினால் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அத்தனை கொடுமைகளையும் நாம் அனுபவித்து வருகின்றோம். அதைவிட இலங்கை அரசு நேரடியாகவும், மறைமுகமாகவும் மேற்கொண்ட, மேற்கொண்டுவரும் இனவழிப்பு போரின் காரணத்தால் மேலதிகமான பழுவினையும் நாம் சுமக்கும் நிலையேற்பட்டுள்ளது. இனவழிப்பு யுத்தத்தின் போது கணவரையோ, பிள்ளைகளையோ, பெற்றோரையோ அல்லது உடன்பிறப்புக்களையோ இழந்தவர்களாகவும், பறிகொடுத்தவர்களாகவும் பெண்களாகிய நாம் உள்ளோம்.

இவ்வாறு குடும்பத்தலைவர்களாக பொருளாதார சுமையினை தாங்கிநின்றவர்களின் இழப்பின் காரணமாக வழமையான கடமைகளுக்கு மத்தியில் குடும்பத்தின் வாழ்வாதாரத்தையும் தூக்கி சுமக்கவேண்டியவர்களாக நாம் தள்ளப்பட்டுள்ளோம். வடக்கு கிழக்கு பகுதிகளில் சுமார் தொண்ணூறாயிரத்திற்கு மேற்பட்ட பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்கள், இயற்கை மரணம் மற்றும் நோய்வாய்ப்பட்டோ அல்லது விபத்தினாலோ கணவர்மாரை இழந்து விதவைகளானவர் கிடையாது. கடந்த நான்கு தசாப்தங்களுக்கு மேலாக இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு போரின் காரணமாகவே இந்நிலைக்கு ஆளாகியுள்ளார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் நாற்பது வயதிற்கு உட்பட்டவர்களாக இருந்துவருவது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.

இவை ஒருபுறமிருக்க, இலங்கை இராணுவ கட்டமைப்பினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கிலான பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் நிலை சட்டியில் இருந்து அடுப்பிற்குள் விழுந்த கதையாக அமைந்துள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரும் போராட்ட முன்னெடுப்புகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வது ஒருபுறமாகவும் தமது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை தூக்கி சுமப்பது மறுபுறமாகவும் பெரும் இன்னல்களுக்கு மத்தியில்தான் இவ்வாறான பெண்களின் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கின்றது.

இந்நிலையானது பெரும் சவால் நிறைந்ததாகவே அமைந்துள்ளது. நீதிக்கான போராட்ட முன்னெடுப்புகளுக்காக வாழ்வாதாரத்தையும் வாழ்வாதாரத்திற்காக நீதிகோரும் முன்னெடுப்புகளையும் தவிர்க்கவியலாது இருதலைக் கொள்ளி எறும்பாக தினறும் நிலையிலேயே பெண் தலைமைத்துவக் குடும்ப பெண்கள் உள்ளார்கள். இயற்கை மரணம் மற்றும் திடீர் மரணங்களின் மூலம் விதவைகளாக்கப்படுபவர்களின் பிரச்சினைகளுடன் இனவழிப்பு போரின் காரணமாக பெண் தலைமைத்துவக் குடும்பங்களாக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளை ஒப்பிட்டுப்பார்க்கவோ தீர்வுகாணவோ முடியாது. ஆகவே, வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் விடயத்தினை விசேட கவனத்திற்குட்படுத்த வேண்டியது அவசியமாகும்.

காலம் காலமாகவே யுத்தம் நடைபெறும் இடங்களில் முதலில் இலக்குவைக்கப்படுவது பெண்களைத்தான். அரசாட்சிக்காலத்திலும் சரி இன்றைய மக்களாட்சி காலத்திலும் சரி பெண்கள் வன்முறைக்குள்ளாக்கப்படுவது அதிகரித்தவண்ணமே உள்ளது. இந்தவகையில் இனவழிப்பு யுத்தத்திற்குள் இருந்து வந்தவர்கள் என்ற அடிப்படையில் நாம் எதிர்கொண்ட வன்முறைகள், துஷ்பிரயோகங்கள் மற்றும் பலாத்காரங்கள் என்பவற்றிற்கு இதுவரை உரிய நீதி கிடைக்கவில்லை.

எங்களுடைய மண்ணில் எத்தனையோ மாணவிகள் அரச படைகளால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். வடக்கு கிழக்கை சேர்ந்த இளம் பெண்கள் குடும்பப் பெண்கள் என இந்தப்பட்டியல் நீண்டுகொண்டே போகின்றது. இக்கொடூரச் செயலை மேற்கொண்ட இலங்கை அரசபடைகள் மற்றும் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்கள் எவரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. இக்குற்றங்களுடன் நேரடியாக தொடர்புடைய இவர்கள் இன்றுவரை சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருக்கின்றார்கள்.

இங்கு பிரதம விருந்தினராக வருகைதந்திருக்கும் ரொபீனோ அம்மையார் இனவெறி போரில் இருந்து விடுதலை பெற்ற தென்னாபிரிக்க மண்ணைச் சேர்ந்தவர். நிச்சயமாக எங்களுடைய வலிகளையும் வேதனைகளையும் அவர் உனர்ந்து கொண்டவர் என்ற அடிப்படையில் எங்களுடைய நீதிக்கான பயணத்தில் உறுதுணையாக இருப்பார் என்று நம்புகின்றேன்.

மானுடத்தின் உயிர்த்துடிப்பே பெண்கள் தான். அப்பேற்பட்ட பெண்களின் இன்னல்களை களைந்து வலுப்படுத்தும் வகையில், இந்நிலை நோக்கியதாக இவ் அவலத்தை தோற்றுவித்த இலங்கை அரசையும் அதற்கு துணைநின்ற அனைத்துலக நாடுகளையும், உலக மன்றங்களையும் உந்தித்தள்ள வேண்டுமாயின் கட்சி, அரசியல், சாதி, மத வேறுபாடுகள் கடந்து தன்முனைப்பு நீங்கப்பெற்று ஆண், பெண் வேற்றுமை நீங்கி தமிழர்களாக நாம் ஒன்றுபட வேண்டும் என்பதை மகளிர் தினமாகிய இந்நாளில் வலியுறுத்த விரும்புகின்றேன் என வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் அவர்கள் மேலும் தெரிவித்திருந்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்