யாழில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவருக்கு நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த தண்டனை!

யாழில். சிறுமி ஒருவரை கடத்தி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞனுக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் இன்று தீர்ப்பளித்துள்ளார்.

அத்துடன், குற்றவாளிக்கு உதவிய குற்ற சாட்டில் அவரது நண்பர் ஒருவருக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையையும் நீதிபதி விதித்துள்ளார்.

வடமராட்சி, வல்வெட்டித்துறையில் 2014ஆம் ஆண்டு செம்டெம்பர் மாதம் 13 வயதுச் சிறுமி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். இது குறித்த விசாரணைகள் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் சுருக்கமுறையற்ற விசாரணைகள் இடம்பெற்றன.

அதன் நிறைவில் சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் வழக்குக் கோவைகள் சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் பாரப்படுத்தப்பட்டன.

முதலாவது சந்தேநபருக்கு எதிராக கடத்தல் மற்றும் துஷ்பிரயோக குற்றச்சாட்டும், இரண்டாவது சந்தேகநபருக்கு எதிராக கடத்தல் குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டு சட்ட மா அதிபரால் யாழ். மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து குறித்த வழக்கு விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று வழக்குக்கு தீர்ப்புக்காக எடுத்து கொள்ளப்பட்டது.

“முதலாவது எதிரி சிறுமியைக் கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளார். இரண்டு குற்றங்களுக்காகவும் முதலாவது எதிரிக்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது.

அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் ரூபா இழப்பீட்டை வழங்கவேண்டும். அதனை வழங்கத் தவறின் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும்.

தண்டமாக 5 ஆயிரம் ரூபா செலுத்தவேண்டும். அதனை செலுத்தத் தவறின் ஒரு மாத சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும்.

இரண்டாவது எதிரி, சிறுமியைக் கடத்திச் செல்ல முதலாவது எதிரிக்கு துணை நின்றுள்ளார். அதற்கு அவருக்கு 2 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது.

அந்தத் தண்டனை 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அத்துடன், 5 ஆயிரம் ரூபா தண்டம் செலுத்தவேண்டும்.

அதனைச் செலுத்தத் தவறின் ஒரு மாத சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும்” என நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பை வழங்கினார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்