யாழ் மாணவர்கள் கொலை வழக்கு; பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீளவும் சேவையில் இணைப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சந்தேகநபர்களான 5 பொலிஸ் உத்தியோகத்தர்களும் மீளவும் சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர்.

5 பொலிஸாரும் சேவையில் மீள இணைக்கப்பட்டதனையடுத்து அவர்களின் பிணை நிபந்தனைகளில் ஒன்றை இலகுபடுத்தப்படுத்துமாறு முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நேற்று (27) அனுமதியளித்தது.
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இந்த வழக்கின் சுருக்கமுறையற்ற விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த நிலையில் சந்தேகநபர்களான 5 பொலிஸாருக்கும் கடந்த செப்ரெம்பர் 14ஆம் திகதி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
“5 சந்தேகநபர்கள் ஒவ்வொருவரும் 50 ஆயிரம் ரூபா காசுப் பிணை, 2 இலட்சம் ரூபா பெறுமதியிலான 2 ஆள் பிணையில் செல் அனுமதிக்கப்படுகின்றனர். அவர்கள் அனைவரும் பிரதி ஞாயிற்றுக் கிழமைகளில் கொழும்பு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் கையொப்பமிட வேண்டும். சந்தேகநபர்களின் கடவுச் சீட்டு யாழ்ப்பாணம் நீதிவான் மன்றப் பதிவாளரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அவர்கள் 5 பேரும் வெளிநாடு செல்வதற்கு தடைவிதிக்குமாறு குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிடப்படுகிறது” என்று பிணை விண்ணப்பங்கள் மீதான கட்டளையில் நிபந்தனைகளை விதித்திருந்தார் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன்.

5 பொலிஸ் உத்தியோகத்தர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டதால் அவர்களுக்கு தென்னிலங்கையில் மீளவும் பணியில் இணைத்தது பொலிஸ் திணைக்களம்.
தென்னிலங்கையில் பல்வேறு பகுதிகளிலிருந்து கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் சென்று கையொப்பமிடுவது சிரமமாகவுள்ளதாகவும் அந்த நிபந்தனையில் தளர்வு செய்யுமாறும் சந்தேகநபர்கள் சார்பில் மேல் நீதிமன்றில் பிணை விண்ணப்பம் மீதான சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அதன் மீதான விசாரணை நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. சந்தேகநபர்கள் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் கையொப்பமிடுவதற்கு அனுமதிக்கப்படுவதாக மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் திருத்திய கட்டளையை வழங்கினார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டியில் 2016ஆம் ஆண்டு ஒக்ரோபர் 20ஆம் திகதி நள்ளிரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். யாழ்ப்பாணப் பொலிஸார் மீது கொலைக் குற்றஞ்சாட்டப்பட்டது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்