இனம் இனத்துடன் தான் சேரும்: தமிழ் மக்களை ஏமாற்றிய கூட்டமைப்பு!

வட மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி சபை களைக் கைப்பற்றுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்படியெல்லாம் நடந்து கொள்கிறது என்பதை நினைக்கும் போது ஏதோவொரு அழிவு ஏற்படப் போகிறது என்பதை மட்டுமே உணர முடிகிறது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை எப்படியெல்லாம் தூற்றிய இலங்கைத் தமிழரசுக் கட்சி இப்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவைப் பெற்று உள்ளூராட்சி சபைகளின் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அமைச்சுப் பதவி வழங்கக்கூடாது என்று தடுத்தவர்கள் தமிழரசுக் கட்சியினர்.

கூடவே தேசிய அரசியல் கட்சிகள் வடக்கில் வேரூன்ற விடக் கூடாது என்று தமிழ் மக்களு க்கு அறிவுரை கூறியவர்களும் அவர்களே.ஆனால் இப்போது பதவி என்றதும் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதைத் தமிழ் மக் கள் பார்த்து அறிந்திருப்பர்.

ஒருமுறை தீவகத்து நாரந்தனைப் பகுதியில் தங்களை ஈபிடிபியினர் தாக்கினர் என்று குற்றஞ்சாட்டிய தமிழரசுக் கட்சியினர் அதனை வைத்தே பாராளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றனர்.

இவ்வாறான தாக்குதல் நடத்தியவர்களை இந்த மண்ணில் இருந்து துரத்த வேண்டும் என தமிழரசுக் கட்சிக்கு ஆதரவான ஊடக மொன்று அடிக்கடி எழுதி வந்தது.

ஆனால் அந்த ஊடகத்தையும் உதறித் தள்ளி விட்டு, நாரந்தனையில் படுகாயமடைந் தவர்களையும் உதறி எறிந்து விட்டு, எம் பதவிக்காக ஈபிடிபியை எதிர்க்க வேண் டும் என்றால் எதிர்ப்போம்.

மாறாக ஈபிடிபியை அணைத்தால் தான் பதவி கிடைக்குமென்றால் அதனையும் திறம்படச் செய்வோம் என்பதை தமிழரசுக் கட்சி செய்து காட்டியுள்ளது.

இச்செயலை அக்கட்சியின் தலைமை தமது இராஜதந்திர வியூகம் என நினைத்துக் கொள்ளலாம்.ஆனால் நிலைமை அதுவல்ல என்பதைக் காலம் நிச்சயம் போதித்து நிற்கும்.

இது ஒருபுறம் இருக்க, ஈபிடிபியிடம் பொது மக்கள் சென்றால், ஈபிடிபியிடம் வேலைவாய்ப்புப் பெற்றால், ஈபிடிபியினர் வழங்குகின்ற உதவித் திட்டங்களை மக்கள் நாடினால் அவர்கள் எல்லாம் தமிழினத்துக்கு எதிரானவர்கள் என்று கூறிய தமிழரசுக் கட்சியினர், இன்று என்ன செய்துள்ளனர்.

தமிழ்த் தேசிய முன்னணியினர் வெற்றி பெற்ற இடங்களையும் கபளீகரம் செய்வதற்காக கொள்கையை விற்று, தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை உதாசீனம் செய்து; தமிழ் மக்களை ஏமாற்றி பதவி தேவையென்றால் தென்பகுதியில் உள்ள தேசிய அரசியல் கட்சிகளுடனும் கூட்டுச் சேருவோம் என்பதை வெளிப்படையாகக் காட்டியுள்ளனர்.

கூட்டமைப்புத் தலைமையின் இச்செயல் கட்சிக்குள் முரண்பாட்டை ஏற்படுத்தியிருந்தாலும் வாய் திறப்பதற்கு யாருளர்.மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று அமைந்தால் ஒழிய, கூட்டமைப்பின் போக்கை யாரும் எதுவும் செய்ய முடியாது என்பதே உண்மை.

நன்றி வலம்புரி

About இலக்கியன்

மறுமொழி இடவும்