மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்க் கட்சிகள் தனித்து ஆட்சியமைக்க வேண்டும் என்பதற்காக தமது கட்சி ஆதரவினை வழங்கியுள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று, போரதீவுப்பற்று, பட்டிப்பளை ஆகிய பிரதேசசபையில் ஆட்சியினை அமைப்பதற்கு தமது கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவினை வழங்கியுள்ளதாக இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேசியக் கட்சிகள் தமிழ்ப் பகுதிகளில் ஆட்சியமைப்பதினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்த அவர், தமிழ் பகுதிகளில் தனித் தமிழ்க் கட்சிகள் தனித்து ஆட்சியமைப்பதற்கு தமது கட்சி ஆதரவு வழங்கும் என தெரிவித்தார்.
இந்நிலையில், போரதீவுப்பற்று பிரதேசசபையின் ஆட்சியினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிகொள்வதற்கு காரணமாக விநாயகமூர்த்தி முரளிதரனின் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் போரதீவுப்பற்று உறுப்பினர் வினேஸ்வரனின் ஆதரவே முக்கியமானதாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

