மணலாறில் போராட சொகுசு பிக்கப் தேடும் வடமாகாணசபை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை கண்டிக்கும் வகையில் வடமாகாணசபையின் 38 உறுப்பினர்களும் தமது சபையின் இறுதிக்காலத்தில் களவிஜயம் செய்ய தயாராகிவருகின்றனர். அவ்வகையில் எதிர்வரும் 10ம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சென்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தவும் தீர்மானித்துள்ளனர்.அதற்கென பயணிக்க பிக்கப் ரக சொகுசு வாகனங்களை தற்போது அவர்கள் தேடிவருகின்றனர்.

இன்று நடைபெற்ற வடமாகாணசபையின் 120வது விசேட அமர்வில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்த நிலையில் அரை மணிநேரத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைதீவு மணலாறு செல்லமுடியுமாவெனவும் அவர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர் நிலத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை தடுப்பதற்கான வழிவகைகள் தொடர்பாக ஆராய்வதற்கான விசேட அமர்வு இன்றைய தினம் பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.

முல்லைதீவு மாவட்டத்தை சேர்ந்த மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் பலமுறை நிலசுவீகரிப்பு பற்றி பிரஸ்தாபித்திருந்த போதும் அது மாகாணசபையால் நிறைவேற்ற தீர்மானங்களுள் முடங்கியிருந்தது.

இந்நிலையிலேயே இன்றைய அமர்வில் மேற்படி சிங்கள குடியேற்றங்களை தடுப்பதற்கான உறுதியான தீர்மானம் எடுக்கவேண்டும் எனவும், வடமாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சென்று தமதுஎதிர்ப்பை காட்டவேண்டும் என மாகாணசபை உறுப்பினர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

இதற்கமைய எதிர்வரும் 10ம் திகதி மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர்கள், அவை தலைவர் உள்ளிட்ட 38 மாகாணசபை உறுப்பினர்களும் முல்லைத்தீவுக்கு சென்று எல்லை கிராமங்களை பார்வையிடுவதுடன் திட்டமிட்ட குடியேற்றங்களுக்கு எதிரான கவனயீர்ப்பை செய்வதுடன் மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை கையளிப்பதெனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை நிறுத்துவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் அழுத்தம் கொடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதற்காக மாகாணசபை உறுப்பினர்கள் விரைவில் வடமாகாணத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பேசுவதெனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கணிசமான உறுப்பினர்கள் தமக்கு போக்குவரத்து வசதியில்லையென தெரிவித்ததுடன் பேரூந்தில் பயணித்தால் தாமதமாகிவிடுமென்பதால் சொகுசு பிக்கப் ஏற்பாடுகளை கோரியிருந்தனர்.

அவர்கள் அனைவரும் கட்சி வேறுபாடின்றி தமக்கு வழங்கப்பட்ட சொகுசு கார் பெமிட்களை விற்றுவிட்டமை தொடர்பில் மறந்தும் வாய்திறந்திருக்கவில்லை.

அதனையடுத்து அவை தலைவர்,அமைச்சர்கள் தமது வாகனங்களில் ஏற்றி செல்வது தொடர்பான தீர்மானமும் நீண்ட ஆராய்வின் பின்னர் எடுக்கப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்