எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர் ஊடக விபச்சாரம் செய்கின்றது – மனோகணேசன் குற்றச்சாட்டு!

வீரகேசரி, தினக்குரல் ஆகிய கண்ணியமும், நிதானமும் மிக்க பல தேசிய மற்றும் பிராந்திய பத்திரிக்கைகளை வெளியிடும் எக்ஸ்பிரஸ் நியுஸ்பேபர்ஸ் நிறுவனம் ஊடக விபச்சாரத்தையும் செய்துகொண்டிருப்பதாக தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் குற்றம் சுமத்தியுள்ளார்.

குறித்த நிறுவனமானது, தன்னைக் கள்ளன் எனச் சித்தரித்து மானநஷ்ட வழக்குப் போடுமளவுக்கு புதிதாக செய்திகளை உருவாக்கி தனக்கு விளம்பரம்தேடிக்கொண்டிருப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

முதலாம் நாள், அவிசாவளை மக்களுக்கு வீடு கட்ட நான்கு ஏக்கர் காணியும், மத்துகமை தமிழ் பிள்ளைகளுக்கு பாடசாலை கட்ட ஐந்து ஏக்கர் காணியும் அமைச்சரவையில் சண்டை போட்டு வாங்குகிறேன்.

இரண்டாம் நாள், எம்பிக்களுக்கு மொழி வகுப்புகளை ஆரம்பிக்கிறேன்.

மூன்றாம் நாள், அரசாங்க அலுவலக படிவங்களை மும்மொழியில் மொழிபெயர்க்க ஆரம்பிக்கிறேன்.

நான்காம் நாள், பெயர் பலகைகளில் தமிழ் மொழியை இடம்பெற செய்ய, எனக்கு கிடைத்துள்ள குறைந்த நிதியை பயன்படுத்தி, பாடுபடுகிறேன்.

மறுநாள், “அதிகாரத்தை பகிர்ந்து இனப்பிரச்சினையை தீர்ப்போம்; புதிய அரசியலமைப்பை உடனடியாக கொண்டு வருவோம்” என கொளுத்தும் வெயிலில், கொழும்பு மாநகர நடுத்தெருவில் சத்தியாக்கிரகம் செய்கிறேன்.

அடுத்த நாள், பொலிஸ் அதிகாரிகளுக்கு மொழிக்கொள்கையின் அவசியம் பற்றி போதிக்கிறேன்.

ஒவ்வொரு நாளும், தமிழ் பேசும் மக்களைப்பற்றி, தொண்டை கிழிய ஓயாமல், சிங்கள ஊடகங்களில், மேடைகளில் சிங்களத்தில் பேசுகிறேன்…..

இன்னமும் எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம். நான் தூங்குவதில்லை. ஒருநாளில் இருபது மணித்தியாலங்கள், ஏனைய தமிழ் பேசும் அரசியல்வாதிகள் மத்தியில், நானும் ஒருவனாக என்னால் இயன்றவரை உணர்வுடன் உழைக்கிறேன்.

தம் சொந்த வயிற்றுப்பாட்டு தேவைகளுக்காக என்னை அழிக்க வேண்டும், என் கட்சியை ஒழிக்க வேண்டும் என்று, இங்கே கொழும்பு மற்றும் வத்தளை பகுதிகளில் உலவும் கீழ்த்தரமான, காழ்ப்புணர்ச்சிக்கொண்ட, மிகச்சிறிய சின்ன “பொடியன்களுடன்” சேர்ந்து ஒரு மஞ்சள் துண்டு பத்திரிகை பொய் செய்திகளை வெளியிட்டு வருகிறது.

விமர்சனங்களை எதிர்கொள்வது எனக்கு அல்வா மாதிரி. ஆனால் இது, திடீரென ஒரு “செய்தி”யை இட்டுக்கட்டியும், மானநஷ்ட வழக்கு போடும் அளவுக்கு, என்னை ஒரு திருடன் என்ற பொருள்படவும் பொய் அவதூறு மூட்டைகளை பிரசுரிப்பதாகும் எனத் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்