வன்னிக்காட்டில் இருந்த எனக்கு உயிருக்கு பயமில்லை!

உத்தமபாளையம் துப்பாக்கி சூட்டுக்கு நடுவே வன்னிக்காட்டில் ஒரு மாதம் தங்கி இருந்த எனக்கு உயிர் பயம் கிடையாது என்று வைகோ ஆவேசமாக பேசினார்.

தேனி மாவட்டம் போடி அருகே பொட்டிபுரம் பகுதியில் அம்பரப்பர் மலையை குடைந்து நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கடந்த 31-ந் திகதி மதுரையில் நடை பயணத்தை தொடங்கினார்.

அதன் பிறகு தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடை பயணம் மேற்கொண்டு பொதுமக்களை நேரடியாக சந்தித்து நியூட்ரினோவுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறார். 6-வது நாளாக தனது பிரசாரத்தை டி.புதுக்கோட்டையில் நிறைவு செய்த அவர் அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.

நியூட்ரினோ ஆய்வு திட்டம் குறித்து பல விஞ்ஞானிகளிடம் கருத்து கேட்டு பிறகுதான் எனது எதிர்ப்பை தெரிவித்தேன். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே இந்த திட்டம் அழிவைத் தரும் என்று அறிக்கை கொடுத்தேன். தற்போது அப்துல்கலாமின் உதவியாளர் என்று சொல்லும் பொன்ராஜ், நான் தேவையில்லாமல் நடைபயணம் மேற்கொள்வதாகவும், ஒரு உயிரை பலி வாங்கி விட்டதாகவும் கூறியுள்ளார்.

நான் விஞ்ஞானி இல்லை ஆனால் விஞ்ஞானிகளிடம் கேட்டறிந்து மக்களுக்கு ஆபத்து என்பதால் என்னை வருத்திக் கொண்டு போராடி வருகிறேன். அப்துல் கலாமின் உதவியாளர் என்று கூறும் பொன்ராஜ் சீமைக் கருவேல மரங்களை அகற்ற நான் போராடிய போது அதற்கு எதிராக அறிக்கை வெளியிட்டார். கூடங்குளம் அணுஉலை, ஸ்டெர்லைட்டையும் ஆதரித்த அவர் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மட்டும் எதிர்த்து வருகிறார்.

எந்த கூட்டத்துக்கு செல்லும் முன்பும் அது குறித்த முழுமையான விபரங்கள் தெரிந்த பிறகே நான் செல்வேன். வி‌ஷயம் தெரியாமல் பேச மாட்டேன்.

சமீப காலமாக சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் இருந்து என் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. சமூக ஊடகங்களில் என்னை கேவலமாக சித்தரித்து மீம்ஸ் போடுகின்றனர்.

அ.தி.மு.க., தி.மு.க. என பல்வேறு கட்சிகளுடன் நான் கூட்டணியில் இருந்தபோது கூட அவர்கள் என்னை இந்த அளவுக்கு விமர்சித்ததில்லை. எனக்கு அனைத்து சமூகத்தினர் மீதும் மரியாதை உண்டு. எல்லோருக்கும் நண்பனாகவே இருந்து வருகிறேன். என்னை சமூகத்தின் அவமானமாக சித்தரித்து கேலி செய்து வருகிறார்கள்.

ஈழ விடுதலைக்காக போராட்டம் நடந்த போது எனக்கு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். ஆயுதங்களை கொடுத்து அனுப்பினார். அதற்காக அவரை தமிழர் என்று சொல்லாமல் மலையாளி என்று சொல்ல முடியுமா?

வைகோவின் பின்னால் ஒரு லட்சம் தொண்டர்கள் திரள்வார்கள் என்று சொல்லும் அவர் பின்னால் 50 பேர் மட்டும் நடைபயணம் வருவது ஏன்? என்று சீமான் கேட்கிறார். நான் என் உதவியாளர்கள் மற்றும் தொண்டர்கள் சிலரை மட்டும் வைத்துக் கொண்டு கிராமம் கிராமமாக நேரடியாக சென்று மக்களை சந்தித்து வருகிறேன். 1 லட்சம் பேரை திரட்டினால் அவர்களுக்கு என்னால் உணவு வழங்க முடியாது. தற்போது என்னுடன் வரும் தொண்டர்களுக்கு கிராம மக்கள் உணவு வழங்குகின்றனர். எனவே இது போன்ற சிரமத்தை தவிர்க்கவே குறைந்த அளவு எண்ணிக்கையில் நடைபயணம் செல்கிறேன்.

நான் உயிருக்கு பயந்தவன் போல எனக்கு சவால்விடுத்து பேசுகின்றனர். வன்னிக்காட்டில் துப்பாக்கி சூடு மற்றும் பீரங்கி குண்டுகளுக்கு நடுவே ஒரு மாதம் தங்கி இருந்து போர் பயிற்சி பெற்றவன். எனக்கு உயிருக்கு பயமில்லை. இனிமேலும் விடுதலைப்புலிகள் பெயரைச் சொல்லியும், தமிழினப் போராளி என்று கூறிக் கொண்டு சர்வதேச மோசடியில் ஈடுபடும் நபர்களை நான் சும்மா விட மாட்டேன். இவ்வாறு அவர் பேசினார்.

தனது 7-வது நாள் நடைபயணத்தை டி.புதுக்கோட்டையில் இருந்து இன்று தொடங்கிய வைகோ ரங்கநாதபுரம், தேவாரம், மல்லிங்காபுரம், பண்ணைப்புரம் வழியாக சென்று இரவு மேலசிந்தலைச்சேரியில் நடைபெறும் பொதுகூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்