தேசியத் தலைவரின் இலட்சியத்தை கிராமமட்ட செயற்பாடுகளின் மூலம் தொடர்ந்து முன்னெடுப்போம்! அனந்தி சசிதரன்!

பெண்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் எவ்வேளையிலும் நடாமாடும் சூழல் குறித்த தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் இலட்சியத்தை கிராமமட்ட செயற்பாடுகளின் மூலம் தொடர்ந்து முன்னெடுக்க உள்ளதாக வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் தெரிவித்தள்ளார்.

பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் நிறைந்து காணப்படும் இன்றைய சமூக சூழலில் பெண்கள் தம்மை தாமே எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து மாணவர்களிடையே விழிப்புனர்வை ஏற்படுத்தும் முகமாக வட மாகாண மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் விசேட செயலமர்வு நடைபெற்றுள்ளது. இலங்கை பெண்கள் சாரணியம் அமைப்பின் அனுசரனையுடன் கடந்த சனிக்கிழமை(07.04.2018) யாழ்.கொக்குவில் இந்து கல்லூரியில் நடைபெற்ற இவ் அமர்வை தலைமைதாங்கி நடத்திய வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் தனது தலைமையுரையின் போது மேலும் தெரிவிக்கையில்

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பு இருந்தது. அப்போது பெண்களுக்கு எதிரான வன்முறைகளோ, துஷ்பிரயோகங்களோ இல்லாத நிலையே காணப்பட்டது. ஆனால் ஆயுத மௌனிப்பின் பின்னர் அந்த நிலையில் பாரிய மாறுதல் ஏற்பட்டிருப்பதனை அவதானிக்க முடிகின்றது.
அதைவிட ஆயுத மெனிப்பின் பின்னர் தாயகத்திலும் புலம் பெயர் தேசங்களிலும் குடும்ப விவாகரத்துகள் அதிகரித்து வருகின்றது. இனத்தின் விடுதலைக்காக நடத்தப்பட்ட போராட்டம் எமது குடும்ப வாழ்விலும் பாதுகாப்பான நிலையை தோற்றுவித்திருந்ததை இவ்விடயங்களின் மூலமாக நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

பெண் பிள்ளைகளுக்கான முதல் பாதுகாப்பாக அவர்களது பெற்றோரே இருக்க முடியும். அதற்கேற்றவாறான சூழலை ஒவ்வொரு பெற்றோரும் வீட்டில் ஏற்படுத்துவது அவசியமாகும். பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்த அக்கறையின் வெளிப்பாடாக பெற்றோர் வெளிப்படுத்தும் கட்டுப்பாடுகள் சில வேளையில் கடுமையானதாக பிள்ளைகளாகிய உங்களின் பார்வையில் படலாம். ஆனால் அது உங்களின் பாதுகாப்பிற்கானதென்பதை உணர்ந்து கொள்வது அவசியம். நீங்களும் பெற்றோர் என்ற நிலைக்கு வரும்போது இதனை நன்கு உணர்ந்து கொள்வீர்கள்.

எமது கலாச்சாரம், பண்பாட்டு விழுமியங்களுக்கு அமைவாக பெண் பிள்ளைகளாகிய உங்களது செயற்பாடுகளை நீங்கள் வகுத்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்ப முடியும். இவ்வகையில் பெண் பிள்ளைகளை வழிநடத்தி செல்வதுடன் அவர்களுக்கான பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்தும் பொறுப்பும் கடமையும் பெற்றோர் மற்றும் ஆசிரியர் சமூகத்திற்கே உண்டு. இக்கூட்டுப் பொறுப்பினை உணர்ந்து செயற்படுவதன் மூலமே பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் துஷ்பிரயோகங்கள் அற்ற சூழலை எமது பிள்ளைகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.

அந்த சமூக நோக்கின் வெளிப்பாடாகவே இவ் விசேட செயலமர்வு திட்டமிடப்பட்டு நடத்தப்படுகின்றது. இதனை கிராம மட்டத்திலும் முன்னெடுத்துச் செல்வதன் மூலம் பெண்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் எவ்வேளையிலும் நடாமாடும் சூழல் குறித்த தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் இலட்சியத்தை நிறைவேற்ற முடியும். அதனை தொடர்ந்து வரும் காலங்களில் செயற்படுத்த உள்ளதாகவும் அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் மேலும் தெரிவித்திருந்தார்.

யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்பது, பத்து மற்றும் பதினோராம் ஆண்டு மாணவர்கள் இவ் விசேட செயலமர்வில் பங்கேற்றிருந்தார்கள். இவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருந்தது. கொக்குவில் இந்து கல்லூரி அரங்கத்தில் கடந்த சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி நண்பகல் 1.30 வரை நடைபெற்றிருந்த இந் நிகழ்வில் இலங்கை பெண்கள் சாரணியம் அமைப்பின் பிரதிநிதிகள், வட மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு ஆர்.வரதீஸ்வரன் மற்றும் அமைச்சின் திணைக்களங்களின் தலைவர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்டர்புடைய செய்திகள்
உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைத்து வரும் நிலையில் எதிர்காலத்தில் மக்களிடம் சென்று எதைச்
இராணுவ வசம் உள்ள வவுனியா கூட்டுறவு கல்லூரி கட்டிடத்தினை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வட மாகாண கூட்டுறவு மற்றும்
வடக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் நிலைமை தொடர்பாக வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*