நான் தமிழ்த் தேசியத்தின் மீது பற்றுறுதியும், தீராத வேட்கை கொண்டவன்-இமானுவேல் ஆர்னோல்ட்

நான் தமிழ்த் தேசியத்தின் மீது பற்றுறுதியும், தீராத வேட்கையும் கொண்டவன் அதனை நோக்கி நாம் முன்னோக்கி நகரவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவன். தமிழ்த் தேசியத்தை நிலை நிறுத்துகின்ற எமது பாதையும் பயணமும் கடினமானதாக இருப்பினும், அது ஜனநாயக ரீதியானதாகவும், மக்கள் அங்கீகாரத்தோடு கூடியதாகவும், பன்னாட்டு அரங்கிலே மதிப்பார்ந்ததாகவும் இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவன் என யாழ்.மாநகர சபையின் முதல்வர் தனது கன்னி உரையில் தெரிவித்துள்ளார்.

நாம் எமது மக்களின் விடிவுக்கான ஒரு நெடிய போராட்ட வரலாற்றைக் கடந்து சென்று கொண்டிருக்கின்றோம். அந்தப் போராட்டத்தில் அகிம்சைசார் மென்வலு முயற்சிகளும், போர் சார் வன்வலு முயற்சிகளும் இடம்பெற்றிருந்தன. ஆனால் இன்றைய திகதியிலே எமது மக்களும், இந்த நாடும், பன்னாடும் மென்வலு சார்ந்த ஜனநாயக வழிமுறைகளே சாலச்சிறந்தது என்று எமக்கு மிகவும் உறுதியாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

எமது பதவிகளும், எமக்கு வழங்கப்படுகின்ற அதிகாரங்களும் எம்மையும் எமது மக்களையும் எமது மக்களுக்கான விடிவு நோக்கிய பயணத்திலிருந்து திசை திருப்புமாக இருந்தால், அந்தக் கணமே எமது பதவிகளைத் துறக்கவும், எமது அதிகாரங்களைத் தூக்கியெறியவும் நாம் ஒருபோதும் பின்னிற்கப்போவதில்லை என்பதையும் இங்கு நான் குறித்துக் கொள்கின்றேன்.

யாழ்.மாநகர சபையிலே பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாக பலரும் பலவேறு சந்தர்ப்பங்களிலே முறைப்பாடுகளை முன்வைத்து வந்திருக்கின்றார்கள். இவை உரிய முறையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.வடக்கு மாகாணசபையின் உள்ளூராட்சி அமைச்சு இதுவிடயத்தில் முன்னெடுக்கும் அனைத்து விதமான விசாரணைகள், மற்றும் நடவடிக்கைகளுக்கு இந்த அவை தனது பரிபூரண ஒத்துழைப்புக்களை நல்கும் எனவும் குறிப்பிட விரும்புகின்றேன்.

எனவே இத்தகைய அடிப்படைகளோடு சுத்தமான பசுமை மாநகரை நோக்கி கட்சி பேதங்களுக்கு அப்பால், மத்திய, மாகாண அரசுகளின் உதவிகளும் ஒத்துழைப்புக்களோடும் எல்லோரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என அவர் தனது முதலாவது கொள்கைவிளக்க உரையில் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்