உண்மையான போராளிகளிற்கே கௌரவம்!

தியாக தீபம் திலீபனிற்கு யாழ் மாநகரசபை சிலை வைத்தால் அதனை வரவேற்பதோடு அதற்கான ஒத்துழைப்பும் வழங்குவோம். அதேபோன்று மாவீரர்களின் பெயரில் முன்னர் இருந்த வீதிகளுக்கு மீண்டும் அவர்களது பெயர்கள் சூட்டப்படவேண்டும் என்றும் கிட்டு பூங்கா புனரமைக்கப்பட்டு மீண்டும் கிட்டு பூங்கா என பெயர் சூட்டப்படவேண்டும் என வலியுறுத்தியிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் யாழ் மாநகரசபை உறுப்பினருமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் அரச இயந்திரத்துடன் சேர்ந்து இயங்கி தமிழ் மக்களின் அழிவிற்குக் காரணமாகியவர்களுக்கு சிலை வைக்கவேண்டும் என சிலர் கோருவது தேவையற்ற ஒரு விடையம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் மாநகரசபையின் கன்னி அமர்வு இன்று புதன்கிழமை காலை யாழ் மாநகர சபா மண்டபத்தில் நடைபெற்றது. அங்கு தனது கன்னி உரையினை ஆற்றிய வி.மணிவண்ணன் இங்கு நடைபெற்றது ஒரு விடுதலைக்கான போராட்டம். அடக்கப்பட்ட தமிழ் பேசுகின்ற மக்களுடைய விடுதலைக்காகவே இந்தப் போராட்டம் நடைபெற்றது. அந்த மக்களுடைய விடுதலைக்காகப் போராடிய போராளிகளும் இருக்கிறார்கள் நாம் யாருக்கு எதிராக போராடினோமோ. எங்களை அடக்க நினைத்த அந்த அரச இயந்திரத்தொடு இணைந்து எமக்கு எதிராக போராடிய போராளிகளும் இருக்கிறார்கள். எம்மைப் பொறுத்தவரையில் விடுதலைக்காகப் போராடிய போராளிகளுக்கு மாத்திரமே சிலைவைக்க வேண்டுமே தவிர விடுதலைக்கு எதிராகப் போராடிய அரச இயந்திரத்துடன் சேர்ந்து இயங்கி தமிழ் மக்களின் அழிவிற்குக் காரணமாகியவர்களுக்கு சிலை வைப்பது பொருத்தமற்ற ஒரு செயற்பாடாகவே இருக்கும்.

கடந்த காலங்களில் யாரும் ஊழல் செய்ததாக நாங்கள் இங்கு சொல்லவில்லை. ஊழல் செய்திருக்கக்கூடாது என்பதுதான் எங்களுடைய விருப்பமாக இருக்கின்றது. மக்களுடைய வரிப்பணம் மக்களுக்குச் சென்றடையவேண்டும் மக்களுடைய வரிப்பணத்தை எவரும் பயன்படுத்தியிருந்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். கடந்த காலங்களில் ஊழல்கள் இடம்பெற்றிருப்பின் அவற்றிற்கு நடவடிக்கை எடுக்கத் தவறுவோமாக இருந்தால் எதிர்காலத்தில் நாங்களும் ஊழல் செய்வதற்கு வழிவிட்டவர்களாக மாறுவோம்.

கடந்த நிர்வாகம் மட்டுமல்ல அதற்கு முன்னய கால முறைகேடுகள் குறித்தும் ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணைகள் நடைபெற்றிருந்தன. அந்த அறிக்கைகள் இந்த அவைக்கு கொண்டுவரவேண்டும். அந்த அறிக்கைகள் முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. யாழ் மாநகரசபை தொடர்பில் விசாரணை நடைபெற்றிருப்பதாயின் அதனை யாழ் மாநகரசபை அதனைக் கோரிப் பெறப்பட்டு குற்றவாளிகள் இருப்பின் அவர்கள் தண்டிக்கப்படவேண்டுஅமனவும் அவர் கோரியுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்