நூற்றுக்கு நூறு வீதம் புனிதம் சாத்தியமில்லை! சுரேஸ்

நூற்றுக்கு நூறு வீதம் புனித தன்மையோடோ அதேபோன்று நூறு வீதம் விட்டுக்கொடுப்புக்கள் இல்லாமல் இருப்பதனூடாகவோ தமிழ் மக்களின் அபிலாஷைகள் எதனையும் சாதித்துவிட முடியாது என முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி தலைவருமான தெரிவித்துள்ளார்.

நேற்று பிற்பகல் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

தமிழ் தேசிய கூட்டமைப்பினை நம்பி கடந்த காலங்களில் தமிழ் மக்கள் அவர்களுக்கு தமது ஆதரவுகளை வழங்கியிருந்தார்கள். ஆனால் தற்போது நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலானது தமிழ் தேசிய கூட்டமைப்பு மிகவும் பலவீனப்பட்டுவிட்டது அல்லது மக்களால் வெறுக்கப்பட்ட அமைப்பு என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பானது தமிழ் மக்கள் வழங்கிய ஆணைகளை கைவிட்டு தான் விரும்பிய வழியில் ஒரு வழிமுறையை பின்பற்றியிருந்த நிலையில் அதில் ஒன்றாக புதிய அரசியலமைப்புக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் இன்று அதுவும் தோல்வியில் முடிவடைந்துவிட்டது. அத்துடன் தமிழ் மக்கள் ஆணைக்கு முரணாக தமிழ் தேசிய கூட்டமைப்பானது செயற்பட்டமையானது அது இவ்வரசாங்கத்தை உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் காப்பாற்றுகின்ற செயற்பாடகவே அமைந்த்து.

தமிழ் மக்களது காணிப்பிரச்சனை, காணாமல் போனவர்கள் பிரச்சனை, பௌத்த கோவில் புதிதாக அமைக்கப்பட்ட பிரச்சனை, சிங்கள சிற்றுளீயர்களை வடக்கில் நியமித்த பிரச்சனை, வவுனியா மன்னாரில் சிங்கள அரச அதிபர்களை நியமித்த பிரச்சனை போன்றன தொடர்பாக பேச முற்பட்டால் அரசியல் சாசனம் தொடர்பாக பேச முடியாமல் போய்விடும் என கூட்டமைப்பு கூறிவந்த நிலையில் தற்போது இரண்டும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பானது தான் வகுத்த வியூகத்தின் ஊடாக அல்லது இராஜதந்திர நடவடிக்கை ஊடாக எதனை சாதித்தது என்பது கேள்விகுறியாகவே உள்ளது. ஆகவே தான் தற்போது மக்கள் தற்போது மாற்றத்தை விரும்புகின்றார்கள். இவ்விடயத்தை என்னுடைய கட்சியும் வலியுறுத்திவந்திருந்த்து.

கடந்த முறை முதலமைச்சரும் தமிழ் மக்களது உரிமைகளை அவர்களது அபிலாஷைகளை உள்ளடக்கிய அமைப்பு முறை தேவையென்றும், மக்கள் விரும்பினால் தாம் மீளவும் அரசியலில் இருப்பதாகவும் கூறினார். எனவே எதிர்காலத்தில் உறுதியான மாகாண சபை உருவாக வேண்டும். தமிழ் மக்களது நீண்ட கால போராட்டத்தில் அவர்களது காணிகள் மீட்கப்பட்டு, தனித்துவத்துடன் வாழக்கூடியதாக இருக்க தமிழ் கட்சிகளுக்குள் ஐக்கியம் என்பது தேவையாகின்றது.

இங்கே நூற்றுக்கு நூறு வீதம் புனித தன்மையோடோ அதேபோன்று நூறு வீதம் விட்டுக்கொடுப்புக்கள் இல்லாமல் இருப்பதனூடாகவோ தமிழ் மக்களின் அபிலாஷைகள் எதனையும் சாதித்துவிட முடியாது. அத்துடன் வெறுமனே பத்திரிகைகளுக்கு செய்தி அறிக்கைகளை விடுவதனூடாகவும் மக்களின் அபிலாஷைகளையும் தீர்த்துவிட முடியாது.
எனவே புதிதாக உருவாகப்போகின்ற ஜக்கிய முன்னனி என்பது தனக்கு என்று பொதுவான யாப்பு, பொதுவான கொள்கை, மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்குரிய சரியான திட்டமிடல்கள் போன்றன உருவாக்கப்பட்ட அமைப்பாக காணப்பட வேண்டும். அவ்வாறிருந்தாலேயே மக்களின் உரிமைகளை வென்றுடுக்க முடியும் என்றார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்