நமது அம்மாவின் “இரட்டைக்குழல் துப்பாக்கி” இரண்டு உதவி ஆசிரியர்களை சுட்டுவிட்டது…

அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில், அ.தி.மு.க. – பா.ஜ.க. இரட்டைக்குழல் துப்பாக்கி போல இயங்குகிறது என கட்டுரை எழுதிய இரண்டு உதவி ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் நேற்று எழுதப்பட்டிருந்த கட்டுரை ஒன்றில், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீரவேண்டும் என்ற உறுதியான நம்பிக்கையோடு, மத்தியில் ஆளும் பாரதீய ஜனதாவும், தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க.வும் ஒருங்கிணைந்து பொறுப்புடன் செயல்பட்டு, இறுதி முடிவினை எட்டிக் கொண்டிருக்கிறன. எங்கே இருவரும் ஒற்றுமையாக இருந்து காவிரி பிரச்சினையில் வெற்றி அடைந்துவிடுவார்களோ? என்ற அச்சம் கொண்டிருக்கும் தி.மு.க., தேவையற்ற போராட்டங்களை நடத்தி வருகிறது.

எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும் அ.தி.மு.க. – பா.ஜ.க. உறவை யாராலும் பிரிக்க முடியாது. மத்திய – மாநில அரசுகளின் ஒற்றுமையை எவராலும் சீர் குலைக்க முடியாது. இந்திய அரசியலில் அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் இரட்டை குழல் துப்பாக்கியாய் செயல்படுவதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கிவிட்டன. அதற்கான பாதை தெளிவாக இருக்கிறது. பயணத்திட்டத்தை 2 கட்சிகளின் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். அதுவே காலத்தின் கட்டாயமாக இருக்கும். என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அ.தி.மு.க – பா.ஜ.க இடையேயான கூட்டணிக்கு அச்சாரமாக இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளதாக பல அரசியல் நோக்கர்கள் விமர்சித்திருந்தனர். மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழக அரசு துணை போகிறது என மு.க ஸ்டாலின் இந்த கட்டுரையை வைத்து கருத்து தெரிவித்திருந்தார்.

கூட்டணி குறித்து வரும் காலத்தில் கட்சித்தலைமை முடிவெடுக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கட்டுரை விவகாரத்தில் நமது அம்மா நாளிதழில் பணியாற்றும் 2 உதவி ஆசிரியர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

About இலக்கியன்

மறுமொழி இடவும்