முன்னாள் போராளியின் வித்துடலுக்கு பெருந்திரளானோர் வணக்கம் செலுத்தினர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி சந்திரசேகரம் பிரதீபனின் இறுதி வீரவணக்க நிகழ்வு இன்று (30) முல்லைத்தீவு முத்துவிநாயகர்புரத்திலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.

இறுதி வணக்க நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

புற்றுநோய் காரணமாக நேற்று முன்தினம் உயிரிழந்த பிரதீபனின் பூதவுடல் நேற்றும் இன்றும் மக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. இதன்போது ஆயிரக்கணக்கானோர் திரண்டுவந்து அஞ்சலி செலுத்தினர்.

இன்று அவரது இல்லத்தில் இடம்பெற்ற இறுதி வணக்க நிகழ்வைத் தொடர்ந்து முத்துவிநாயகபுரத்திலுள்ள இளந்தளிர் கல்வி நிலையத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட பந்தலில் அவரது வித்துடல் வைக்கப்பட்டு வீரவணக்கக் கூட்டம் நடைபெற்றது.

இதன்போது பலர் வணக்க உரை நிகழ்த்தினர். இதனைத் தொடர்ந்து பல நூற்றுக்கணக்கானோர் திரண்டுவந்து மலர் மாலைகள் அணிவித்தும் மலர் தூவியும் வணக்கம் செலுத்தினர்.

முன்னாள் போராளிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பல்துறை சார்ந்தோரும் வணக்கம் செலுத்தினர்.

அதைத் தொடர்ந்து அவரது புகழுடல் முத்துவிநாயகபுரம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு எரியூட்டப்பட்டது.

பிரதீபனின் இறுதி வணக்கம் இடம்பெற்ற இடம் சிவப்பு மஞ்சல் கொடிகளாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

அப்பிரதேச இளைஞர்களும் பொதுமக்களும் இணைந்து மிகவும் உணர்வெழுச்சியாக இந்த ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்