அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தன!இதுவரை நடந்தது என்ன

ஜெயலலிதா மரணம் முதல் அதிமுக பில அணிகளாக பிரிந்து இன்று மீண்டும் ஒன்று சேர்ந்தது வரை சந்தித்த அதிரடி திருப்பங்கள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

டிசம்பர் 5,2016 : அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா திடீர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்ததையடுத்து நள்ளிரவில் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார்.

டிசம்பர் 29 : அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலாவை நியமனம் செய்து அதிமுகவினர் தீர்மானம் நிறைவேற்றினர்.

பிப்ரவரி 5 : தனிப்பட்ட காரணங்களுக்காக ஓபிஎஸ் ராஜினாமா செய்தார். சசிகலா சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்த நாளே பதவியேற்புக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டன. ஓ.பன்னீர்செல்வத்தின் ராஜினாமா ஏற்கப்பட்டாலும், புதிய முதல்வர் பதவியேற்கும் வரை பதவியில் நீடிக்க வேண்டுகோள் விடுத்திருந்தார்.

பிப்ரவரி 6 : ஆளுநர் தமிழகம் வராததால் சசிகலாவை முதல்வராக தேர்ந்தெடுக்கும் முடிவு தள்ளிப் போடப்பட்டது.

பிப்ரவரி 7 : ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா சமாதி முன்பு தியானம் செய்துவிட்டு, கடைசியில் நிர்ப்பந்தம் காரணமாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததாகக் கூறினார்.

பிப்ரவரி 9 : அதிமுகவின் அவைத் தலைவர் மதுசூதனனும் அதிமுகவில் இருந்து விலகி வந்து ஓ.பன்னீர்செல்வம் அணியில் சேர்ந்ததால் அவருக்கு கூடுதல் பலம் சேர்ந்தது.

பிப்ரவரி 10 : சசிகலா தரப்பு 129 எம்எல்ஏக்களை கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ரெசார்ட்டில் தங்க வைத்தனர், எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் அணிக்கு தாவாமல் இருக்க இந்த கடத்தல் நாடகம் நடந்தது.

பிப்ரவரி 14 : சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவிற்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டதால் எடப்பாடி பழனிசாமி சட்டசபை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார்.

பிப்ரவரி 15 : அதிமுகவின் துணை பொதுச்செயலாளராக டிடிவி. தினகரன் நியமிக்கப்பட்டார், சசிகலா பெங்களூரு சிறையில் சரணடைந்ததையடுத்து சிறையில் அடைக்கப்பட்டார்.

பிப்ரவரி 18 : முதல்வர் பழனிசாமி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தார். எதிர்க்கட்சிகள் வெளியேற ஓ.பிஎஸ் அணியினர் வாக்களிக்காமல்,சசிகலா அணியின் 122 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மார்ச் 8 : ஜெயலலிதா மரணத்தை விசாரிக்க ஆணையம், சசிகலா குடும்பம் அதிமுகவை விட்டு வெளியேற வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் பிரம்மாணட உண்ணாவிரதம் நடத்தினார்.

மார்ச் 9 : மறைந்த ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

மார்ச் 15 : அதிமுக சார்பில் ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளராக தினகரன் அறிவிப்பு, ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனன் வேட்பாளராக அறிவிப்பு

மார்ச் 18 : அதிமுகவின் இரட்டை இலை சின்னம், கட்சியின் பெயருக்காக சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி தேர்தல் ஆணையத்திடம் முறையீடு

மார்ச் 23 : கட்சியின் சின்னம் மற்றும் பெயரை தேர்தல் ஆணையம் முடக்கியது. இதனால் இரு அணிகளும் தங்களுக்கான புதிய பெயரையும், கட்சிக்கான
சின்னத்தையும் தேர்ந்தெடுத்தன.

ஏப்ரல் 7 : சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதில் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு அளிப்பதற்காக விநியோகிப்பட்ட பணம் குறித்த ஆவணங்கள் வெளியாகின

ஏப்ரல் 10 : வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.

ஏப்ரல் 17 : இரட்டை இலைக்கு லஞ்சம் பெற முயன்றதாக டிடிவி. தினகரனை டெல்லி காவல்துறை விசாரணைக்கு அழைத்தது.

ஏப்ரல் 18 : கட்சி நலனுக்காக இரு அணிகள் இணைப்புக்காக அமைச்சர்கள் சிலர் கேட்டுக் கொண்டதால் கட்சியை விட்டு விலகுவதாக தினகரன் அறிவித்தார்.

ஏப்ரல் 24 : அதிமுகவின் இரண்டு அணிகள் இணைய இரண்டு அணிகள் சார்பிலும் தலா 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

ஏப்ரல் 26 : சின்னத்திற்காக லஞ்சம் தர முயன்ற முகாந்திரம் இருந்ததாக டிடிவி. தினகரன் சிறையில் அடைக்கப்பட்டார்.

மே 1 : அதிமுக அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும் என்று கணிக்கப்பட்டது, ஆனால் வெளிப்படையாக எந்த அதிகாரப்பூர்வ
சந்திப்புகளும் நடக்கவில்லை.

மே 5 : ஓ.பன்னீர்செல்வம் காஞ்சிபுரத்தில் இருந்து தொண்டர்களை சந்தித்து ஆதரவு திரட்டும் தர்மயுத்தத்தை தொடங்கினார்.

மே 17 : அதிமுக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டினார் முதல்வர் பழனிசாமி. கட்சியும் ஆட்சியும் பழனிசாமி கையில் வந்தது அது முதல் எடப்பாடி பழனிசாமி அணியாக செயல்படத் தொடங்கியது.

ஜீன் 1: திஹார் சிறையில் இருந்து டிடிவி. தினகரன் வெளியில் வந்தார், கட்சியில் தான் தொடர்ந்து செயலாற்றப் போவதாக அறிவிப்பு

ஜீன் 5: எடப்பாடி ஆதரவு எம்எல்ஏக்கள் தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். 32 எம்எல்ஏக்களின் ஆதரவு தினகரனுக்கு கிடைத்தது.

ஜீன் 12: அதிமுக அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை குழு கலைக்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு.

ஜீன் 29 : அதிமுகவின் எடப்பாடி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி இணைய தினகரன் 60 நாட்கள் கெடு விதித்தார். ஜூலை மாதம் முழவதும் இரு அணிகள் இணைவதற்கான பரபரப்பு கிளம்பினாலும் அமைச்சர்களின் விமர்சனங்கள், ஓ.பிஎஸ் அணியினரின் சவடால் பேச்சுகளால் அணிகள் இணையவில்லை

ஆகஸ்ட் 6 : கெடு முடிந்ததையடுத்து தினகரன் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் உள்பட சிலருக்கு கட்சியில் புதிய நிர்வாகப் பொறுப்பை வழங்கினார்.

ஆகஸ்ட் 10 : தினகரன் நியமனம் செல்லாது என்று முதல்வர் பழனிசாமி அறிவிப்பு, தினகரன் உத்தரவுக்கு கட்சியினர் கட்டுப்பட வேண்டாம் என்றும் தீர்மானம்.

ஆகஸ்ட் 11 :டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு. அதிமுக அணிகள் இணைப்பு குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்.

ஆகஸ்ட் 14 : ஓ.பன்னீர்செல்வம் பிரதமரை சந்தித்து விட்டு வந்து மக்களுக்கு நல்லது நடக்கும் முடிவை எடுப்பேன் என்று அறிவிப்பு.

ஆகஸ்ட் 14 : மதுரை மேலூரில் தினகரன் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கு பிரம்மாண்ட ஏற்பாடு, யாருக்கும் பயப்படாமல் கட்சியில் உரிய நேரத்தில்
உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று அறிவிப்பு

ஆகஸ்ட் 17 : ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம், வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

ஆகஸ்ட் 18 : முதல்வர் பழனிசாமி , முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தங்களது அணியினருடன் ஆலோசனை நடத்தி ஜெ. சமாதியில் இணைகின்றனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்