தமிழ் மக்களுடனான ஆயுதப் போராட்டம் மீண்டும் ஆரம்பிக்கும் – கோத்தபாய

வடக்கின் அரசியல் போக்கினை கருத்திற்கொள்ளாது தேசிய நல்லிணக்கம் என்ற பெயரில் புலிகளை நினைவுகூரும் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களுடனான ஆயுதப் போராட்டம் ஒன்றை உருவாக்கும் நிலையை தோற்றுவிக்கும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார்.

கடுவளை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,
பயங்கரவாத செயற்பாடுகளில் தொடர்புபட்ட விடுதலைப்புலிகள் இன்று எந்தவித அடிப்படை காரணமும் இல்லாது விடுதலை செய்யபட்டு வருகின்றனர். நல்லிணக்க அடையாளமாக இவற்றை அரசாங்கம் கூறுகின்றது. நல்லிணக்கம் என்ற பெயரில் பிரிவினைவாதத்திற்கு இடம்கொடுத்து பயங்கரவாதிகளை அனுஷ்டிக்கவும் அவர்களுக்கான நினைவு தூபிகளை எழுப்பவும் இடம் கொடுக்கப்படுகின்றது.

அத்துடன் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த மூண்டு ஆண்டுகளில் விடுதலைப்புலிகளை நியாயப்படுத்தி எமது இராணுவத்தை குற்றவாளிகள் என்ற நிலைப்பாட்டிற்கு கொண்டுவந்து சர்வதேசத்தை திருப்திப்படுத்தும் நோக்கத்தில் செயற்பட்டு வருகின்றனர்.

இந்த நாட்டினை மீட்டெடுக்க உயிர் தியாகம் செய்து, யுத்தத்தை வெற்றிகொண்ட எமது இராணுவ வீரர்களை சர்வதேச தேவைக்காகவும் அரசியல் நோக்கங்களுக்காகவும் காட்டிக்கொடுக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டால் இந்த நாடு முப்பது ஆண்டுகாலம் பின்னோக்கி பயணிப்பதுடன் மீண்டும் தமிழ் மக்களுடன் ஆயுத போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க வேண்டிய சூழல் உருவாகும்.

வடக்கில் இன்று இடம்பெற்றுவரும் செயற்பாடுகளை கருத்தில் கொள்ளாது அவர்களின் நோக்கங்களுக்கு இடம்கொடுத்து வந்தால் மீண்டும் பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்