டென்மார்க்கில் மிகவும் எழுச்சியோடு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலையின் 9 ம் ஆண்டு வணக்க நிகழ்வு.

முள்ளிவாய்க்கால் மண்ணிலே சிறிலங்கா அரசு மேற்கொண்ட திட்டமிட்ட தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான மக்களை உயிர்பலி கொண்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் தமிழின அழிப்பின் 9ம் ஆண்டுவணக்க நிகழ்வு 19.05.18 ம் நாளன்று றணாஸ் நகரில் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது.

நிகழ்வானது பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகி, தேசியக்கொடி ஏற்றப்பட்டு அதனைத்தொடர்ந்து முள்ளிவாய்க்கால் மண்ணில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்கள் ,இறுதி வரை மண்டியிடாது போராடிய மாவீரர்களுக்குமான ஈகச்சுடரேற்றப்பட்டு,மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. மக்கள் மலர் தூவி, சுடரேற்றி வணக்கம் செலுத்தினார்கள்.அதனைத்தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு மேடை நிகழ்வுகள் தொடங்கின.

அரங்கநிகழ்வுகள் எழுச்சிகானங்களோடு ஆரம்பமாகின. முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்கள் பட்ட துன்பங்களை வெளிப்படுத்தும் கவிதைகள், எழுச்சி நடனங்கள், பேச்சு ,நாடகம்,சிறப்புரைகள் என்பன இடம்பெற்றன.

மக்கள் இருக்க இடமின்றி ,உண்ண உணவு இன்றி, மருத்துவ உதவி இன்றி, மரங்களின் கீழும் வீதியோரங்களிலும் வாழ்ந்தார்கள்.இத்தகைய மனித அவலங்கள் எதனையும் கருத்தில் கொள்ளாது தொடர்ச்சியான விமானத்தாக்குதல் ,எறிகணைத் தாக்குதல் ,இராசயன எரிகுண்டுத்தாக்குதல் என இலங்கை அரச படைகளினால் திட்டமிட்டுப்படுகொலைகள் நிகழ்த்தப்பட்டு வந்தன. இவ்வளவு அவலங்களிற்கு பின்னால் நாம் சோர்ந்து போகக் கூடாது. எமக்கான விடுதலையை பெற்றுக்கொள்வதற்கு நாம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். தமிழர்களின் தேசம் விடுதலை பெறும்வரை ஓய்ந்து போகக் கூடாது.அனைவரும் ஒன்றிணைந்து எமது விடுதலைப்பயணத்தை தொடர்ந்தும் முன்னெடுப்போம்.

வணக்க நிகழ்வின் இறுதியாக’நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்’ என்ற பாடல் இசைக்கப்பட்டது. அதன் பின்பு தேசியக்கொடி இறக்கப்பட்டு, ‘தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்’ என்ற தமிழர்களின் தாரகமந்திரத்துடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்