கொல்லப்பட்ட மக்களுக்கு சுடர் ஏற்றிய ஹற்றன் நஷனல் வங்கி உத்தியோகத்தர்கள் பணிநீக்கம்

சிங்களப் படைகளால் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு நினைவேந்தல் நடத்தியமைக்காக கிளிநொச்சியில் உள்ள ஹற்றன் நஷனல் வங்கியின் உதவி முகாமையாளரும் ஓர் ஊழியரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று கிளிநொச்சியிலுள்ள ஹற்றன் நஷனல் வங்கியில் முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளர்களும் ஊழியர்களும் ஒன்று சேர்ந்து நினைவுச் சுடர் ஏற்றி வணக்க நிகழ்வில் ஈடுபட்டனர்.

இந்த நினைவேந்தல் தொடர்பான நிழற்படம் சமூகவலைதளங்களில் வெளியாகியது. இதையடுத்து வங்கியின் சிங்கள உயர் அதிகாரிகள் மேற்படி வங்கிக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக கொழும்பிலுள்ள குறித்த தனியார் வங்கியின் தலைமை அலுவலக உயர் அதிகாரிகள், கிளிநொச்சி வங்கியின் உதவி முகாமையாளரை விசாரணைக்கு உட்படுத்தினர்.

இறுதி யுத்தத்தில் தம் உயிர்களை அர்ப்பணித்த உறவினர்களை நினைவு கூருவது, அவர்களின் உரிமை என உதவி முகாமையாளர் தலைமை அலுவலக உயர் அதிகாரிகளுக்கு எடுத்துரைத்துள்ளார்.

ஆனால் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் போராளிகளை நினைவு கூர்ந்து வங்கியில் நினைவுச் சுடர் ஏற்றியமை தேசத்திற்கு விரோதமானது என்று குறித்த வங்கியின் கொழும்புத்தலைமை வாதிட்டிருக்கிறது.

அதுமட்டுமின்றி, உடனடியாக அந்த நிகழ்வை ஏற்பாடு செய்த உதவி முகாமையாளர், மற்றும் ஊழியர் ஒருவரையும் பணியில் இருந்து இடை நிறுத்துவதாகவும் அறிவித்துள்ளனர்.

அதேவேளை, கிளிநொச்சி வங்கியில் பணியாற்றும் ஏனைய அதிகாரிகள், மற்றும் ஊழியர்களையும் பணியில் இருந்து இடை நிறுத்துவதற்கான விசாரணைகளை, கொழும்பில் இருந்து கிளிநொச்சிக்குச் சென்ற உயர் அதிகாரிகள் ஆரம்பித்துள்ளதாகவும் வங்கியின் இணையத் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த வங்கியின் கிளிநொச்சிக்கிளையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் பணியில் இருந்து இடை நிறுத்தப்படலாம் எனவும் அச்சம் எழுந்துள்ளது.

முள்ளிவாய்கால் நினைவுச் சுடர் ஏற்றும் நிகழ்வு கிளிநொச்சியிலுள்ள குறித்த தனியார் வங்கி உட்பட வடபகுதியிலுள்ள ஏனைய வங்கிகளிலும் ஒவ்வொரு வருடமும் இடம்பெறுவது வழமை.

ஆனால் இந்த வருடம் மாத்திரம், குறித்த வங்கியில் விசாரணைகளை நடத்தி ஆரம்ப கட்டமாக, உதவி முகாமையாளர் மற்றும் ஊழியர் ஒருவரை பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஏனைய தனியார் வங்கி ஊழியர்கள் ஊழியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

விசாரணகள் தொடரும் என்ற போர்வையில் இடை நிறுத்தம் செய்யப்பட்டவர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தையும் மற்றையவர் அம்பாறை அக்கரைப்பற்றையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்