சிறீலங்கா இராணுவத்தில் தமிழ் இராணுவ அணி!

இலங்கை இராணுவத்தில் தமிழ் இளைஞர் யுவதிகளை கூலியாட்களாக இணைக்க இராணுவத்தலைமை தொடர்ந்தும் முனைப்புக்காட்டியே வருகின்றது. இதன் ஊடாக வடக்கில் இராணுவ பிரசன்னத்தை பேண அரசு திட்டமிட்டுள்ளதனை ஏற்கனவே வடமாகாண முதலமைச்சர் அம்பலப்படுத்தியுமுள்ளார்.

இந்நிலையில் தமிழ் இளையோர்கள் ஆர்வத்துடன் முன்வர வேண்டும் என்று இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஸன ஹெட்டியாராச்சி கோரியுள்ளார்.
இராணுவத்தில் உள்ள இராணுவம் சாராத வேலைகளுக்கு உடனடியாக 50 இளையோர்களை ஆட்சேர்ப்பு செய்கின்றோம். இவர்களுக்கு வருகின்ற மூன்று வாரத்துக்குள் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கின்றோம். இருப்பினும் 100 பேருக்கு நியமனம் வழங்குவது குறித்து நான் சாதகமாக பரிசீலிக்கின்றேன்.

இராணுவத்தில் உள்ள இராணுவம் சாராத ஊழியர்களும் அனைத்து வகையிலும் இராணுவ வீரர்களைப் போலவே கௌரவமாக எம்மால் நடத்தப்படுகின்றனர். யாழ்ப்பாணத்தில் கணிசமான தமிழ் இளையோர்கள் இராணுவத்தில் உள்ள இராணுவம் சாராத வேலைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களிடம் நேரடியாக வினவி இவர்களை நாம் நடத்துகின்ற விதம் குறித்து நீங்களாகவே அறிந்து கொள்ளலாம்.

அதே நேரத்தில் இராணுவத்தில் கணிசமான அளவில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளையோர்கள் இணைதல் வேண்டும். இது சிங்கள இராணுவம் அல்ல. எல்லா இனத்தவர்களுக்குமான இராணுவம் ஆகும்.

18 வயதுக்கும் 28 வயதுக்கும் இடைப்பட்ட இளையோர்கள் இராணுவத்தில் இணைய முடியும். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளையோர்கள் இராணுவத்தில் இணைகின்ற பட்சத்தில் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே பணியாற்ற முடியும்.தினமும் கடமையை நிறைவு செய்து வீட்டுக்கு சென்று வர முடியும். யாழ்ப்பாணத்தில் தமிழ் இளையோர்கள் கணிசமான அளவில் இராணுவத்தில் இணைவதன் மூலம் தமிழ் இராணுவத்தை இங்கு உருவாக்க முடியுமென தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்