பாஜகவின் நல்லெண்ண தூதுவரான கல்லாப்பெட்டி ரஜனிகாந்த்.

சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் செப்பு ஆலைக்கு எதிரான பொதுமக்களின் நூறாவது நாள் போராட்டத்தின்போது பதின்நான்கு பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் ஆலைக்கு ஆதரவான நிலையை மோடி தலைமையினாலான இந்திய மத்திய பாஜக அரசும் ஓபிஎஸ், ஈபிஎஸ் இரட்டையர்கள் தலைமையினாலான தமிழ்நாடு மாநில அரசும் எடுத்திருந்தது.

இந்தப்படுகொலை நிகழ்வுக்கு ஐநா மனித உரிமமைப்பு உட்பட உலக அளவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அவை எதையும் பொருட்படுத்தாமல் நடிகர் ரஜினிகாந்த் அவர்களும் போராடிய மக்களை மிகவும் தரக்குறைவாக விமர்சித்திருக்கிறார்.

போராட்டத்தின்போது மத்திய மாநில அரசுகளின் திட்டமிட்ட துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டு வேதனையில் இருந்த மக்கள் மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களும் வக்கிரத்துடன் போராட்டக்காரர்கள் போலிசாரை தாக்கியதால்த்தான் பொலீஸ் துப்பாக்கி பிரயோகம் செய்தது என்ற கருத்துப்பட எதிர்வினையான தன்னிலை விளக்கம் அளிக்கப்போய் தமிழக மக்கள் மத்தியில் என்றுமில்லாதவாறு மிகப்பெரும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறார்.

ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை அகற்றக்கோரி கடந்த இருபத்திரண்டு வருடங்களாக அங்குள்ள மக்கள் உயிரைக்கொடுத்து போராடி வருகின்றனர்.

ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் இரசாயின கழிவுகள், அதனால் மாசடைந்துபோயிருக்கும் நிலத்தடி நீர், மற்றும் மண் வளம் ஆலையிலிருந்து வெளியேறும் நச்சு இரசாயின புகை அவைகளால் உண்டாகும் மூச்சுத்திணறல் சுவாசப்பை புற்றுநோய் சரும அழர்ச்சி சூழல் மாசுபாட்டால் உண்டாகும் மன அமைதியின்மை என்று பெரும் அவதியை குழந்தைகள் பெண்கள் உட்பட அம்மக்கள் தினமும் சந்தித்து வருகின்றனர்.

அதனால் ஆலையை உடனடியாக மூடி அந்த இடத்தை விட்டு ஆலை நிர்வாகம் வெளியேறவேண்டும் என்பதே மக்கள் கோரிக்கையாக இருந்துவருகிறது.

களத்தின் சூழ்நிலைகளை சற்றும் உணரமுடியாத பாதுகாப்பு சூழலில் சொகுசாக வாழ்ந்துவரும் மேல்த்தட்டு வர்க்கமான ரஜினிகாந்த் போன்றோரும் ஆட்சியாளர்களும் இன்னபிற சில அரசியற் தரகர்களும் மக்களுக்கு எதிரான நிலையிலேயே தொடர்ந்து இருந்துவருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் இடைவிடாது போராட்டத்தை அறிவித்து சனநாயக ரீதியில் அறவழியில் போராடியபோதும் ஆட்சியாளர்கள் எவரும் திரும்பிப்பார்க்காத காரணத்தால் நூறாவது நாளான 22/05/ 2018 அன்று ஒரு கோரிக்கை அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க இருப்பதாக போராட்டக்காரர்கள் அறிவித்திருந்தனர்.

குறித்த போராட்டம் ஜல்லிக்கட்டு மெரீனா புரட்சியைப்போல பிரும்மாண்டமாக உருவெடுக்கும் தார்ப்பரீகத்தை உளவுத்துறையை வைத்து புரிந்துகொண்ட மத்திய மாநில அரசுகள் போராட்டக்காரர்களை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடவேண்டுமென்று திட்டமிட்டு எந்தவிதமான விதி ஒழுங்குமுறைகளையும் பின்பற்றாமல் 144 ஊரடங்குசட்ட உத்தரவை பிரகடனப்படுத்தி ஜல்லிக்கட்டு போராட்டத்தின் கடசிநாள் பொலீஸ் அராஜகத்தை கட்டவிழ்த்துவிட்டதுபோன்று சர்வாதிகாரத்தனமாக பல நூறுபேர்களை தெருவில் வைத்து சுட்டு வீழ்த்தியது.

இளைஞர்கள், பெண்கள் மாணவிகள், வயதானவர்கள் என்று எந்த பாகுபாடும்பாராது போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களை விஷேடமாக தெரிவுசெய்து, சீருடை அணியாத அரச பயங்கரவாத பிரிவு ஒன்று நெஞ்சிலும் தலையிலும் குறிபார்த்து இயந்திர துப்பாக்கியால் சுட்டு கொன்றதுடன், ஏனையவர்களையும் சரமாரியாக சுட்டுத்தள்ளியது. பன்னிரண்டு பேர் குறித்த இடத்தில் கொல்லப்பட்டனர் மற்றவர்கள் படுகாயமடைந்தனர்.

மறுநாள் ஊருக்குள் புகுந்த போலீஸ் மற்றும் துணை இராணுவம் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியதுடன் பதின்மவயது ஆண் பெண்களையும் பெரியவர்களையும் கைது செய்தது இழுத்துச்சென்று சிறைப்படுத்தியது.

இன்று ஜூன் 1 ம் திகதிவரை கொல்லப்பட்ட உடல்களை குடும்ப உறவினர்களிடம் கையளிக்கப்படவும் இல்லை, காயப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை அரசியற்கட்சி தலைவர்கள் மற்றும் வெளியாட்கள் சென்று பார்வையிட அனுமதிக்கப்படவுமில்லை.

அதேநேரம் தூத்துக்குடி போராட்டத்தில் தமிழகத்தின் முக்கியமான அரசியற் கட்சிகள் முன்னிலை வகிப்பதை போராட்டக்காரர்கள் விரும்பவில்லை. காரணம் தமிழகத்தின் இரண்டு பெரும் அரசியற் கட்சிகளான அதிமுக மற்றும் திமுக, இரண்டு கட்சிகளும்தான் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிறுவுவதற்கு ஆணிவேராக இருந்திருக்கின்றன மத்திய அரசு நிர்வாகத்தை மாறி மாறி கையில் வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சியும் பாஜக கட்சியும் ஆலைக்கு பேராதரவாக இருந்து வருகின்றன.

இந்த நிலையில் அரசியற்கட்சிகள் போராட்டத்தில் இணைந்தால் தேவையற்ற கருத்துவேறுபாடு உண்டாகும் என்பதும் போராட்டம் திசை திரும்பக்கூடும் என்பதாலும் போராட்டக்குழுவினர் அரசியற்கட்சிகள் போராட்டத்தை வழிநடத்தி முன்னிலைப்படுவதை விரும்பவில்லை.

ஆனால் தமிழ் தேசிய நலன்களின்பால் உணர்வுபூர்வமாக கொள்கை வகுத்து போராடிவரும் அரசியற்கட்சிகளான நாம்தமிழர் கட்சி, மற்றும் வேல்முருகன் தலைமையினாலான தமிழர் வாழ்வுரிமை கட்சி போன்றவை போராட்டத்திற்கு ஆதரவு அளித்ததாகவும் மக்களும் போராட்ட குழுவினரும் அவர்களை வேண்டி விரும்பியதாகவும் சொல்லப்படுகிறது, அவை தவிர்ந்து புரட்சிகர இளைஞர் அணி, மக்கள் அதிகாரம் அமைப்பு, சட்டப்பஞ்சாயத்து போன்ற அமைப்புக்களும் போராட்டத்தை முன் நின்று வழிநடத்தியதாக தெரிகிறது.

போராட்டம் வலிமையுடையதாக நாடளாவிய ரீதியில் மாறுவதற்கு மக்களின் ஏகோபித்த நம்பிக்கையை பெற்றுவரும் சீமான் தலைமையினாலான நாம்தமிழர் கட்சியும், தமிழக வாழ்வுரிமை கட்சியும் காரணிகளாக அமையப்போகின்றன என்பதே உளவுத்துறையின் தீர்க்கமான முடிவாக அரசுக்கு கோடிட்டுக்காட்டப்பட்டிருந்தது.

ஏற்கெனவே கொள்கை ரீதியாக மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகளை மிக மோசமாக தோலுரித்து பல போராட்டங்களில் பங்குபெற்றுவரும் கட்சிகளாக நாம்தமிழர் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சிகள் மத்திய மாநில ஆட்சியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்துவருகின்றன, தமிழகத்தில் மக்கள் செல்வாக்கு அதிகரிக்கக்கூடிய கட்சி தலைவர்களாக சீமான் மற்றும் வேல்முருகன் வளர்ந்துவிடக்கூடாது என்பதே மோடி அரசின் தலையிடியாகவும் எடப்பாடி பன்னீர் இரட்டையர்களின் வேண்டுதலாகவும் ஊடகங்களின் விருப்பமாகவும் இருந்துவருகிறது.

இந்தப்போராட்டம் வெற்றிபெறுமானால் நாம்தமிழர் கட்சி மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தவிர்க்க முடியாத பெரும்சக்தியாக தமிழக அரசியலரங்கில் விஸ்வரூபம் எடுத்துவிடும் என்பதை உணர்ந்து அக்கட்சிகளை இல்லாமல் அழிக்கும் நோக்குடன் அல்லது அக்கட்சிகளை தடை செய்வதற்கான காரணிகளை உருவாக்க அல்லது அக்கட்சிகளை பலவீனப்படுத்த எடுத்த முயற்சியின் ஒரு அங்கமே அவசரப்பட்டு நடத்தப்பட்ட தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு.

அதன் முன்னோட்டமாகத்தான் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌவுந்தரராஜன் போன்றோருடன் முதலமைச்சர் எடப்பாடி ஆகியோர் தீவிரவாதிகள் / பிரிவினைவாதிகள்/ தேசவிரோத சக்திகள் போராட்டக்காரர்களுடன் கலந்து பொது உடமைகளை அழித்தனர் வாகனங்களுக்கு தீ வைத்தனர் அதனால் விபரீதமாகி துப்பாக்கி சூட்டில் முடிந்திருக்கிறது என்ற கட்டுக்கதைகளை தொடர்ந்து அறிக்கைகளாகவும் வாக்குமூலங்களாகவும் பதிவுசெய்து வருகின்றனர்.

பொன் ராதாகிருஷ்ணன் தமிழிசை எடப்பாடி ஆகியோர் கூறிய தீவிரவாதிகள் என்ற பதம் பொதுமக்கள் மத்தியில் எடுபடவில்லை, ஒருவேளை நாம்தமிழர் கட்சி மற்றும் வாழ்வுரிமை கட்சியினர்தான் தீவிரவாதிகள் என வழக்கு பதிவுசெய்து நீதி மன்றத்திற்கு போனாலும் அந்தக்குற்றச்சாட்டு எடுபடாமல் முதல் தவணையிலேயே தள்ளுபடியாகிப்போகும் என்பதும் ஆட்சியாளர்களுக்கு தெரியும்.

இருந்தும் சீமான் வேல்முருகன் போன்ற தலைவர்களை ஒடுக்கி அக்கட்சிகளுக்கு தொடர் நெருக்கடிகளை கொடுத்து மக்களிடமிருந்து பிரித்தாளும் தந்திரம் ஆட்சியாளர்களால் திட்டமிட்டு செய்யப்பட்டே வருகிறது.

போராட்டக்காரர்களை அரசியல் அமைப்பு சட்டத்துக்குட்பட்ட வகையில் போராட அனுமதிக்காமை, சர்வதேச மற்றும் உள்நாட்டு விதிமுறைகளை பின்பற்றாமல் போராட்டக்காரர்களை சுட்டுத்தள்ளியது, மக்களுக்கு எதிராக இட்டுக்கட்டிய பொய்யான குற்றச்சாட்டுக்களை பரப்புவது போன்ற சனநாயகத்துக்கு முற்றும் புறம்பான ஆட்சியாளர்களின் செயற்பாடுகள் மக்கள் மத்தியில் கடுங்கோபத்தை உண்டாக்கியிருக்கிறது, அதனால் மக்கள் துப்பாக்கிச்சூட்டை பொருட்படுத்தாமல் வெவ்வேறு இடங்களிலும் தொடர் போராட்டத்தை விஸ்த்தரிக்க தொடங்கிவிட்டனர்.

முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பெருமக்களால் வெளியில் செல்லமுடியாத நிலை. ஊடகங்கள், மற்றும் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த முடியாத சூழல், இவைகளிலிருந்து மீளவேண்டுமானால் இன்னொரு நிகழ்வை தோற்றுவித்து மக்கள் பார்வையை மடைமாற்றிவிடவேண்டிய நிலைக்கு ஆட்சியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

அதன் ஒரு அங்கமாகத்தான் பாஜகவின் மோடி அரசு நடிகர் ரஜினிகாந்த்தை தெரிவு செய்துள்ளது.

நாட்டு நடப்பு, அடித்தட்டு மக்களின் அன்றாட வாழ்வியற் சூழல் எதையும் அறியாத, அதுபற்றிய பிரக்ஞையே இல்லாத சுயநலன் ஒன்றே குறியாக வாழ்ந்துவரும் ரஜினிகாந்த் மத்திய மாநில அரசுகளின் சதித்திட்டத்திற்குபலியாகியிருக்கிறார். அவரது முதலமைச்சர் கனவும் இதில் உள்ளீடாக ஒரு காரணி என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து.

எண்பது தொண்ணூறு இரண்டாயிரம் ஆண்டு காலகட்டங்களில் ரஜினி என்ற பிம்பத்தை எதிர்த்து கருத்து சொல்ல எந்த ஊடகங்களும் சரி கருத்தாளர்களும் சரி துணிந்ததில்லை. அவ்வளவு ரசிகர் கூட்டமும் மக்கள் ஆதரவும் ரஜினிக்கு இருந்தது உண்மையே. சினிமா படங்களில்க்கூட முகத்துக்கு நேராகவன்றி ரஜினியின் கைகளுக்கு முதுகுப்புறமாக கைவிலங்கு போட்டால்க்கூட தியேட்டர் அடித்து உடைக்கப்படும் அளவுக்கு அபாயகரமான ரசிகர்கள் கூட்டம் குவிந்திருந்தது என்பதும் நிதர்சனமே.

அப்படி ஒரு பிருமாண்ட ஒளிவெள்ளம் ரஜினிமீது குவிந்திருந்தது இறந்தகால வரலாற்று உண்மை என்பதை எவரும் மறுப்பதற்கில்லை.

ஆனால் இன்று அப்படி ஒருநிலை அறவேயில்லை.

ரசிகர்களாக ரஜினி ஆதரவு நிலையில் இருந்தவர்கள் பலர் இன்று அரசியல் ரீதியாக எதிர்நிலையாளர்களாக மாற்றம் பெற்றிருக்கின்றனர், இருந்தும் ரஜினிபற்றிய அறிமுகம் உலகமட்டத்தில் பெருகியிருக்கிறது. நன்றோ தீதோ ரஜினி பற்றிய செய்தியை அறிந்துகொள்வதில் எண்பது தொண்ணூறுகளில் மக்களுக்கு ரஜினிமீது இருந்த அதே அளவு ஆர்வம் இன்றைக்கும் இருப்பதாக ஊடகங்கள் நம்புகின்றன.

அதனால் ரஜினி பற்றிய சிறிய நிகழ்வுகளைக்கூட பெரும் விவாதப்பொருளாக ஊடகங்கள் கையாள்வதை காணலாம். இத்தாலிய முசோலினி, ஜெர்மானிய அடொல்ஃப் ஹிட்லர் உகண்டா இடி அமீன் போன்றோர் சமூகத்தால் வெறுக்கப்படுபவர்களாக இருந்தபோதும் ஊடக வெளிச்சத்தில் அவர்களின் அசைவுகளை காண சமூகம் முண்டியடித்து ஆர்வம் காட்டியது.

அந்த கணக்கில்த்தான் ரஜினியின் அசைவுகளை ஊடகங்கள் வியாபார நோக்கோடு கையாளுகின்றன என்பதை ரஜினி புரிந்துகொண்டதாக தெரியவில்லை.

1996 ஜெயலலிதாவின் அடக்குமுறைக்குள் சிக்குண்டு அல்லல்ப்பட்ட ரஜினிகாந்த் இன்னொருமுறை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று தன்னுடைய தனிப்பட்ட வன்மத்தை பொதுப்பிரச்சினைக்கான காரணிபோல வெளிப்படுத்தி குரல்கொடுத்தார். அப்போது ஜெயலலிதாமீது மக்களுக்கிருந்த வெறுப்பு காரணமாக ரஜினியின் குரல் தேவாலய மணி ஓசைபோல் பார்க்கப்பட்டது திமுக உட்பட்ட கட்சிகளும் அவர்கள் சார்ந்த ஊடகங்களும் ரஜினியின் குரலை ஓங்கி ஒலித்து பிரபலமாக்கி இலாபம் பார்த்தன.

மீண்டும் ஐந்தாண்டுகள் கழித்து 2001 ஜெயலலிதா முதல்வரானார் ரஜினி எதிர்ப்பு நிலையை ஜெயலலிதா மறக்கவில்லை, 2002 ல் வெளிவந்த பாபா படம் பாமக கட்சியினரால் முடக்கப்பட்டது ஜெயலலிதா முதல்வராக இருந்ததால் ரஜினி மண்புழுவாக பதுங்க நேரிட்டது, 1999 படையப்பா படத்துக்குப்பின் ரஜினி சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்டவராகவே கருதப்பட்டார் ஆறு ஆண்டுகள் கழித்து 2005 ல் சந்திரமுகி படம் ஒரு வெற்றியை கொடுத்திருக்காவிட்டால் இன்று ரஜினி கதை ஒரு இறந்தகாலமாகவே முடிந்திருக்கும்.

இந்த காலகட்டங்களில்த்தான் ரஜினி ஒரு பக்கா சுயநலவாதி என்ற சுயரூபம் மக்கள் மன்றத்தில் அறியப்பட்டது 2008 ஒகனேகல் உண்ணாவிரத போராட்டத்தின்போது கர்நாடகத்திற்கு எதிரான நிலை எடுக்க விருப்பமில்லாமல் ஒரு சம்பிரதாயத்திற்கு போராட்டத்தில் ரஜினி கலந்துகொண்டார் இருந்தும் ரஜினியின் கள்ளத்தனத்தை நடிகர் சத்தியராஜ் பொதுமேடையில் வைத்து தோலுரித்தபோது ரஜினியின் இருண்ட முகம் இன்றைக்கும் எவராலும் மறக்கமுடியாது.

ஜெயலலிதாவின் மரணத்தின் பின் ரஜினியின் முகமூடியற்ற சுயரூபம் அப்பட்டமாக வெளிவந்தகாலம். மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முதலாவது ஆளாக வாழ்த்து தெரிவித்த ஒருவர் என்றால் அது ரஜினிகாந்தாகத்தான் இருந்தது ஆனால் பண மதிப்பிழப்பின்போது ரஜினி சம்பந்தப்பட்டவர்கள் எவரும் வங்கி வாசலுக்கு போய் நின்றதாகவோ எடிஎம்மில் காத்திருந்ததாகவோ தகவல் இல்லை.

இன்று தமிழகத்தில் மிக மோசமான இன வெறுப்பாளர்களாக வலம்வரும் எச் ராசா, எஸ் வி சேகர், அர்ஜூன் சம்பத் போன்றவர்களை விஞ்சிய ஒரு தமிழின வெறுப்பாளராக சிவாஜிராவ் கெக்வாட் எனப்படும் ரஜினிகாந்த் அறியப்படுகிறார்.

அரசியல் ரீதியாக ரஜினிகாந்தை எதிர்க்கும் முதல் அமைப்பாக நாம்தமிழர் அமைப்பு இருந்துவருகிறது. நாம்தமிழர் கட்சி கொள்கைரீதியாக மாநில நலன்களுக்கு நேர் எதிராக செயற்படும் இந்திய் தேசிய கட்சிகளை எதிர்க்கும் மூல சித்தாந்தங்களை கொண்டிருக்கிறது, மோடியின் முகத்தை அப்படியே பிரதிபலித்து பாஜகவின் சித்தாந்தங்களை ரஜினிகாந்த் அப்பட்டமாக வழிமொழிந்து வருகிறார்

தமிழகத்தில் சினிமாமூலம் புகழ்பெற்று உச்ச நட்சத்திரமாக திகழும் ரஜினியால் சினிமா மாயைக்குள் புதைந்துகிடக்கும் தமிழகத்தின் அப்பாவி மக்களை கணிசமாக ஏமாற்றி தன்பக்கம் திரட்டமுடியும் என்பதை நாம்தமிழர் கட்சி மட்டுமல்ல அனைத்து கட்சிகளும் நம்புகின்றன. பாஜகவும் அந்த நம்பிக்கையை நூறுவீதம் நம்புகிறது.

நடிகர் கமலஹாசனையும் பாஜகதான் மறைமுகமாக இயக்குவதாக பரவலான ஒரு கருத்தும் உண்டு.

ஆட்சியிலிருக்கும் அதிமுக சோரம்போய் அழிந்துபோன ஒரு கட்சியாகவே கருதமுடியும் அடுத்த இடத்தில் இருப்பது திராவிட முன்னேற்றக்கழகம். அக்கட்சி உறுதியான அடிப்படை கட்டமைப்புக்களையும் எழுபது ஆண்டுகள் பாரம்பரியத்தையும் தன்னகத்தே கொண்டிருந்தாலும் கருணாநிதியின் முதுமை ஓய்வுக்குப்பின் சமயோசிதமாக செயலாற்ற முடியாத வல்லமையற்ற தலைவராகவே திமுகவின் அடுத்தகட்ட தலைவராக செயற் தலைவர் ஸ்ராலின் இருந்து வருகிறார்.

பலவீனமான ஸ்ராலினின் தலைமை காலகட்டத்தை பயன்படுத்தி அதிமுக பாஜக ரஜனி இன்னும் ஒருபடி மேலேபோய் கமலஹாசனையும் சேர்த்து ஒரு கூட்டணி அமையுமானால் நிச்சியம் ரஜினிகாந்த் முதலமைச்சராவது தடுக்கமுடியாது போகும்.

இந்த இடத்தில் நாம்தமிழர் சீமான், வேல்முருகன் உள்ளிட்ட இன்னும் பல தமிழ் தேசியவாத இயக்கங்கள் ஒரு கூட்டு சேருமாக இருந்தால் அது திமுக வெற்றிபெறுவதற்கு வழிவகுக்கும் எனவே நாம்தமிழர் கட்சிக்கு ஆளும் கட்சியினரால் வருங்காலங்களில் இன்னும் அதிகமான நெருக்கடிகள் உண்டு.

சீமானை சிறையில் அடைக்கும் திட்டமும் இருக்கிறது. சீமானை கைதுசெய்து சிறையில் அடைத்தால் அவரை வளர்த்துவிடுவது போன்ற செயற்பாடாகிவிடும் என்ற ஐயமும் இல்லாமல் இல்லை.

பாரளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் மட்டுமே இருப்பதால் அதற்கிடையில் உள்ளூராட்சி தேர்தலை நடத்தவேண்டிய கடப்பாடும் இருப்பதால் உள்ளூரட்சி தேர்தல் நடைபெறும்போது சீமான் வேல்முருகன் போன்றோரை வெளியில் நடமாட விடாமல் சிறைப்படுத்தி உள்ளே போடும் செயலும் நடக்கக்கூடும்.

சீமானின் நாம்தமிழர் கட்சியை தீவிரவாத கட்சியாக குற்றஞ்சாட்டும் காரியம்தான் ஜல்லிக்கட்டு போராட்ட கடைசிநாள் தீவிரவாதிகளின் ஊடுருவல் என்ற குற்றச்சாட்டும். ஸ்டெர்லைட் போராட்டத்தில் தீவிரவாதிகள் என்னும் குற்றச்சாட்டும் என்று எடுத்துக்கொள்ள முடியும்.

தமிழ் தேசியவாதிகளை பிரிஞ்ச் எலிமண்ட் என்றும் பிரிவினைவாதிகள் என்றும் தீவிரவாத குழுக்கள் என்றும் பல்வேறு தளங்களில் தமிழிசை பொன்னார் உட்பட பாஜக வின் பேச்சாளர்க கூறிவருவதன் பொருள் மெல்ல மெல்ல அதுவாக மாற்றுவதற்கான உளவியல் தொழில் நுட்பம் என்றே கொள்ளமுடியும் ரஜினி கூறிய தீவிரவாதிகள் என்ற பதம்கூட மொழி மாற்றம்செய்து வாசித்தால் சீமான் அல்லது நாம்தமிழர் என்பதாகவே வெளிப்படும்.

ரஜினியை மராட்டியன் என்றும் கர்நாடககாரர் என்றும் பொதுவெளியில் விமர்சிக்கும் ஒரே நபர் சீமான் என்பது வெளிப்படையானது அந்த கோபம் ரஜினிக்கு நீறுபூத்த நெருப்பாக நெஞ்சில் இருப்பதன் வெளிப்பாடுதான் தூத்துக்குடியில் இருந்து திரும்பி வந்து சென்னை விமானநிலையத்தில் ஏய் என்று விளித்து விரல் நீட்டி தீவிரவாதிகள் என்று மிரட்டிய நிகழ்வை எடுத்துக்கொள்ள முடியும்.

ஈழதேசம் செய்திகளுக்காக.
கனகதரன்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்