இந்திய அமைதிப்படை வீரர்கள் கட்டி வழிபட்ட முருகன் கோவில் ஈழத்தில் கண்டுபிடிப்பு!

இந்திய அரசின் பிராந்திய வல்லாதிக்க நிலையை வலுப்படுத்தும் நோக்கில் தமிழீழ மண்ணில் அமைதிப்படையாக கால்பதித்து ஆக்கிரமிப்புப் படையாக மாறிய வரலாற்றை ஈழத் தமிழர்கள் என்றும் மறக்க முடியாதவாறு ஆழமான வடுவை ஏற்படுத்திச் சென்ற இந்திய அமைதிப்படை தொடர்பான வரலாற்று சான்றாக சிறு முருகன் கோவில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

யாழ். தொண்டைமானாற்றின் கரையோரத்தில் வரலாற்றுச் சிறப்பு பெற்ற ஈழத்து முருகன் ஆலயங்களில் தனிச்சிறப்புடன் திகழும் செல்வச் சந்நிதி ஆலயம் அமைந்துள்ளது. இவ் ஆலயத்திற்கு சரி நேராக ஆற்றங்கரையின் மறு கரையில் இச் சிறு முருகன் கோவில் அமைந்துள்ளது.

தொண்டைமானாறு ஆற்றின் மூலம் கடல் பெருக்கு காலத்தில் உள்வரும் கடல் நீரை கட்டுப்படுத்தும் வகையில் சிதைவடைந்திருந்த வான் கதவுகள் சீரமைக்கப்பட்டு வருகின்றது. 1990 களில் தொண்டைமானாற்றின் மேலான பாலம் தகர்க்கப்பட்டதன் பிற்பாடு ஆற்றின் அக்கரைக்கும் இக்கரைக்குமான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டிருந்தது.

பலாலி கூட்டுப்படைத் தலைமையகத்தின் பாதுகாப்பு கருதி ஏற்படுத்தப்பட்டுருந்த உயர்பாதுகாப்பு வலையத்தின் எல்லையாக தொண்டைமானாறு அண்மைக் காலம் வரை திகழ்ந்து வந்திருந்தது. 1990 களில் தகர்க்கப்பட்டிருந்த பாலம் தற்போது மீள உருவாக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகின்றது. இக்காலப்பகுதியில் சிதைவடைந்திருந்த துருசு பகுதி சிரமைக்கப்பட்டு வருகின்றது. துருசு அமைக்கும் பணிக்காக அருகில் இருந்த பற்றைகள் துப்பரவு செய்யப்பட்டபோதே இச் சிறு முருகன் கோவில் வெளிப்பட்டுள்ளது.

கருங்கல்லில் உருவாக்கப்பட்ட வேல் ஒன்றை வைத்து அமைக்கப்பட்ட இச்சிறு முருகன் கோவிலை இந்திய அமைதிப்படையில் கடமையாற்றிய தமிழகத்தை சேர்ந்த இராணுவத்தினர் அமைத்துள்ளமையை உறுதிப்படுத்தும் விதத்தில் அவர்களின் பெயர்கள் கோவில் கட்டிடத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

கோவிலின் கோபுரம் போன்று இரு பக்கத்திலும் கட்டப்பட்டுள்ள பகுதியில் TN – பேபிராஜ் அமைதிப்படை மற்றும் IPKF த.நடராஜன் என்ற பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பக்கவாட்டு சுவரில் 27.07.1989 என்று உருவாக்கப்பட்ட நாள் மற்றும் த.நடராஜன் என்றும் சிவப்பு வர்ணத்தில் எழுதப்பட்டுள்ளது.

ஆற்றங்கரைக்கு அக்கரையில் இருக்கும் செல்வச் சந்நிதி முருகன் கோவிலுக்கு சென்று வழிபட முடியாத சூழலில் இருந்த அமைதிப்படையில் பணியாற்றிய தமிழக வீரர்கள் அக்கோயிலுக்கு நேராக சிறு கோவில் ஒன்றை அமைத்து வழிபட்டிருப்பது இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது.

பருத்தித்துறை பலாலி வீதியில் தொண்டைமானாறு பாலத்திற்கு அருகாமையில் வீதியோரமாக அமைக்கப்பட்டிருக்கும் இம் முருகன் கோவிலில் வீதியால் செல்வோர் வணங்கிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த கோயிலுடன் நேரடியாக தொடர்புடைய தமிழக வீரர்கள் இன்று உயிருடன் இருக்கிறார்களோ…?

எது எப்படியோ இந்திய அமைதிப் படை ஈழத்திற்கு வந்து சென்றமைக்கான சாட்சியமாக இக்கோவில் திகழ்கின்றது.

படங்கள் மற்றும் செய்தி ஈழதேசம் இணையத்தள செய்தியாளர் மு.காங்கேயன்!

About மு.காங்கேயன்

மறுமொழி இடவும்