தினகரனை கண்டு கதிகலங்கும் திமுக,அதிமுகவினர்?

சமீபத்தில் டிடிவி தினகரனின் பேச்சுகள் எல்லாம் பிரதான கட்சிகளுக்கு அவ்வப்போது பீதியை கிளப்பிவிட்டு போய் கொண்டிருக்கிறது.

கருணாநிதி மறைவை அடுத்து 2 பெரிய அரசியல் மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. ஒன்று, ஸ்டாலினின் புதிய பொறுப்பு. இதன் மூலம் அவருடைய செல்வாக்கு சற்று உயர்ந்துள்ளது போல தொண்டர்கள் கருதுகிறார்கள். இதற்கு காரணம் கருணாநிதி மறைவால் வந்த அனுதாபமாகவும் இருக்கலாம், அல்லது ஸ்டாலினின் தனிப்பட்ட அணுகுமுறைகூட காரணமாக இருக்கலாம். தனது முதல் பேச்சிலேயே பாஜகவுடன் உறவு, கூட்டணி இல்லை என்பதை கட் அண்ட் ரைட்டாக தெரியும்படி வெளிப்படுத்திவிட்டார்.

இரண்டாவது பெரிய நிகழ்வு அதிமுகவில். திரும்பவும் ஆரம்பிச்சிட்டாங்க உட்கட்சி பூசலை. மதுசூதனை ஆளாளுக்கு சந்தித்து விட்டு வருகிறார்கள். ஏற்கனவே ஜெயலலிதா உயிரிழந்ததிலிருந்தே இந்த கட்சி படும் பாடும், அக்கட்சியினர் படுத்தும் பாடும் கொஞ்சம் நஞ்சமல்ல. நிம்மதி இல்லாத, அமைதி இல்லாத, பிரச்சனை, விவகாரம் இல்லாத நாளே இல்லை இக்கட்சியில். இந்த நிலையில் மீண்டும் ஒரு பிளவை நோக்கி இக்கட்சி சென்று கொண்டிருப்பதாகவே தெரிகிறது.

இதற்கு நடுவில் டிடிவி தினகரன் தனது பொதுக்கூட்டங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தி வருகிறார். அந்த மாவட்டங்களில் எல்லாம் தினகரனின் தெரிவிப்பதும், பேசுவதும், உறுதிகூறுவதும், நம்பிக்கை தெரிவிப்பதும் எல்லாமே இரண்டு ஊர் இடைத்தேர்தல்களை பற்றிதான். பொதுவாகவே தினகரன் பேசினால் அமைதி முகத்துடன், பரபரப்பு, டென்ஷன் இவைகளை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் அதே சமயத்தில் எல்லா கேள்விகளுக்கும் மிக மிக திடமாக பதில் கூறுவார். அப்படித்தான் இப்போதும் கூறி வருகிறார்.

திருப்பரங்குன்றத்தை பற்றி கூறும்போதும் இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிட்டு அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெறும் என்று கூறி வருகிறார். இதில் உச்சக்கட்டமாக அவர் கூறுவது திருவாரூர் இடைத்தேர்தலை. அந்த இடத்தில் தான் கண்டிப்பாக வெற்றி பெறுவேன் என ஆணித்தரமாக இவர் பேசுவதை மக்கள் உட்பட அனைத்து கட்சி தலைவர்களும் ஆழ்ந்து கவனிக்கின்றனர்.

அந்த தொகுதிக்கு கருணாநிதி தொகுதி என்ற தனி முத்திரையே உண்டு. ஒரு பக்கம் ஸ்டாலின் இருக்கிறார், மற்றொரு பக்கம் அழகிரி இருக்கிறார். இரண்டு மகன்கள் இருக்கும்போது, தினகரன் எங்கே அங்கே வந்தார் என்றும், எந்த தைரியத்தில் திருவாரூரில் அதிகப்படியான வாக்குகளை பெறுவேன் என்று டிடிவி கூறுகிறார் என அனைவரும் மண்டை காய்ந்து போயுள்ளனர்.

20 ரூபாய் திரும்பவும் வேலை செய்ய போகிறதா? அல்லது எல்லார் வீடுகளிலும் குக்கர் சத்தம் கேட்க போகிறதா? என தெரியவில்லை. எப்படியோ, திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களில் டிடிவி தினகரன் ஜெயிக்கிறாரோ இல்லையோ, ஆனால் எல்லா கட்சிக்காரர்களின் வயிற்றிலும் அப்பப்போ புளியை கரைத்து கொண்டு வருகிறார் என்பது மட்டும் தெரிகிறது!

About இலக்கியன்

மறுமொழி இடவும்