7 பேர் விடுதலை குறித்து தமிழ்நாடு அரசே முடிவெடுக்கலாம் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஏழு பேரின் விடுதலை குறித்து, தமிழ்நாடு அரசே முடிவெடுக்கலாம் என்று இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும், முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய ஏழு பேரையும் விடுவிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்து இந்திய மத்திய அரசின் கருத்தைக் கோரியிருந்தது.

எனினும், தமிழ்நாடு அரசின் இந்த முடிவுக்கு எதிராக, இந்திய மத்திய அரசு உச்சநீதிமன்றில், மனுத் தாக்கல் செய்திருந்தது. அந்த வழக்கில், கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கே இருப்பதாக உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.

எனினும், இதற்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பிலும், இந்த வழக்குடன் தொடர்புடைய கைதிகள் சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் பின்னர் இன்று உச்சநீதிமன்ற நீதிபதி ரேஞ்சன் கோஹோய் தலைமையிலான அமர்வு இந்த வழக்கின் தீர்ப்பை அளித்து வழக்கை முடித்து வைத்துள்ளது.

இதன்படி, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட 7 கைதிகளின் விடுதலை விடயத்தில் தமிழ்நாடு அரசே முடிவெடுக்கலாம் என்றும், தமிழ்நாடு ஆளுனருக்கு தமது பரிந்துரையை அனுப்பி வைக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், ஏழு பேரையும் விடுவிக்கக் கோரி, 2016 ல் தமிழ்நாடு அரசின் சார்பில் அளிக்கப்பட்ட மனு மீது ஆளுனர் முடிவெடுக்கலாம் என்றும் உச்சநீதிமன்ற அமர்வு தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுக்கும், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட 7 கைதிகளுக்கும் சாதகமாக இந்த தீர்ப்பு அமைந்திருந்தாலும், ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் இந்திய மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தீர்மானம் எடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்