குரல் கொடுத்தால் சலுகை பறிப்பு: விக்கினேஸ்வரன் ?

உரிமைகளிற்காக குரல் கொடுத்தால் இலங்கை அரசு தனது சலுகைகளை பறித்துக்கொள்ளுமென்பது அப்பாட்டமாக தெரிவதாக முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கருத்து வெளியிட்டுள்ளார்.

வடமாகாண முதலமைச்சராக அவருடைய பதவிக்காலம் முடிந்ததன் பின்னர் வழங்கப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப்பு அலுவலர்கள் திடீரென விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர் மாவீரர் தினம் தொடர்பாக தனது கருத்துக்களிற்கான அரசின் வெளிப்பாடு இதுவாக இருக்கலாமென தெரிவித்தார்.ஏற்கனவே ஏனையவர்களிற்கு வழங்கப்பட்ட வாகன வரி விலக்கு கூட முன்னாள் முதலமைச்சரிற்கு நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே முதலமைச்சருடன் கடமையிலிலுள்ள மெய்ப்பாதுகாவலர்கள் கடமை நிலையத்திற்கு திரும்பாவிட்டால் அவர்களது பதவியிலிருந்து தாமாக விலகியதாக கருதப்படுமென காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று இலங்கை ஜனாதிபதிக்கு முதலமைச்சர் அனுப்பியுள்ள கடிதத்தில் சில காலங்களுக்கு முன்னர் என்னுடைய உயிருக்கு ஆபத்து என்பது சம்பந்தமாக பொலிஸ்மா அதிபருக்கும் சிரேஸ்ட உப பொலிஸ் மாஅதிபருக்கும் தெரிவித்திருந்தேன். அது சம்பந்தமான செய்திகளை எமக்கு வழங்கியவர் அம்பலாங்கொடையைச் சேர்ந்த டிசில்வா என்பவர். நீங்கள் யாழ்ப்பாணம் வந்த போது உங்களுக்கும் தனிப்பட்டரீதியில் இதுபற்றித் தெரிவித்திருந்தேன். இதில் சந்தேகத்திற்குரியவராகக் கணிக்கப்பட்டவர் தற்போது கைது பண்ணப்பட்டிருக்கும் உப பொலிஸ் அதிபர் நாலகசில்வா என்பவர்.

உயிராபத்து சம்பந்தமாக பொலிஸ்மா அதிபரும் சிரேஸ்ட உப பொலிஸ்மா அதிபரும் தெரிந்து வைத்துக் கொண்டிருந்த காரணத்தினால் அவர்களுக்கு இது பற்றி எழுத்தில் தெரிவிக்குமாறு கோரியிருந்தார்கள். இது என்னால் செய்யப்பட்டது. குறித்த கடிதத்தின் பிரதி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. என்னுடைய வாசஸ்தலத்திற்குரிய பாதுகாப்பு கைவாங்கப்பட்டதெனினும் என்னுடைய தனிப்பட்டபொலிஸ் பாதுகாப்பு இற்றைவ வரையில் தொடர்ந்துவந்துள்ளது.

இன்று காலை யாழ் பொலிஸ் தலைமையக மேற்பார்வையாளர் என்னுடைய பொலிஸ் பாதுகாப்பு அலுவலர்களை உடனே யாழ் பொலிஸ் நிலையத்தில் வந்துகையெழுத்திடுமாறு கோரியிருந்தார்.

நான் தற்போது கொழும்பில் என்னுடைய பாதுகாப்பு அலுவலர்களுடன் தங்கியிருக்கின்றேன். எனினும் இரு அலுவலர்கள் இன்று காலை யாழ் பொலிஸ் நிலையத்தில் கையெழுத்திட்டுள்ளார்கள்.

பொலிஸ்மா அதிபருக்கு அறிகையிடப்பட்ட என்னுடைய உயிராபத்திற்கான காரணங்களை முன்வைத்து என்னுடைய தனிப்பட்டபொலிஸ் பாதுகாப்பை அனுமதிக்குமாறு உங்களிடம் தயவாகக் கேட்டுக்கொள்கின்றேன். கிழக்கு மாகாண முன்னைய முதலமைச்சர் அவர்களுக்கு தற்போதும் பாதுகாப்பு வழங்கப்பட்டுவருவதாகஅறிகின்றேனென முதலமைச்சர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்