வெகு சிறப்பாக நடைபெற்ற வடமராட்சி வடக்கு பண்பாட்டுப் பெருவிழா – 2018!

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள அனுசரணையுடன் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் மற்றும் கலாசாரப் பேரவை நடாத்திய பண்பாட்டுப் பெருவிழா – 2018 நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது.

பருத்தித்துறையில் அமைந்துள்ள வடமராட்சி வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று 18/12/2018 காலை 9.30 மணியளவில் நடைபெற்றுள்ள இந்நிகழ்விற்கு யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு சு.முரளிதரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.

வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் மற்றும் கலாசாரப் பேரவைத் தலைவருமான திரு ஆழ்வாப்பிள்ளை சிறி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு சிறப்பு அதிதிகளுக்கு மாலை மரியாதை செய்யப்பட்டு மங்கல வாத்திய இசையுடன் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டதுடன் ஆரம்பமாகியது. தமிழர் மரபுப்படி ஆராத்தி எடுக்கப்பட்டு நிகழ்விடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் வைபம் நடைபெற்றது.

அண்மையில் சுகவீனம் காரணமாக சாவடைந்திருந்த வடமராட்சி மண் பெற்றெடுத்த சிலம்பாசான் கலாபூஷணம் தில்லை.தவராசா (சிவலிங்கம்) அவர்களை சிறப்பித்து பெருமைப்படுத்தும் வகையில் அவரது பெயரால் அமைக்கப்பட்டிருந்த நிகழ்வு அரங்கத்தில் தமிழ் மொழி வாழ்த்து, வரவேற்பு நடனம், இசையுடன் யோக அசைவுகள், இசை விருந்து, கிராமிய நடனம் மற்றும் காத்தவராயன் சிந்துநடைக்கூத்தின் சில காட்சிகள் அரங்கேற்றப்பட்டிருந்தது.

அரங்கத்திறப்புரையை, திரு க.முருகதாஸ் அவர்களும், வரவேற்புரையை, வடமராட்சி வடக்கு உதவிப் பிரதேச செயலாளர் திருமதி சோ.றோ.றொபின்சன் அவர்களும், தலைமையுரையை, வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் மற்றும் கலாசாரப் பேரவைத் தலைவருமான திரு ஆழ்வாப்பிள்ளை சிறி அவர்களும், கௌரவ விருந்தினர் உரையை, யோகக் கலையக இயக்குநர் திரு ம.இரட்ணசோதி அவர்களும், பிரதம விருந்தினர் உரையை யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு சு.முரளிதரன் அவர்களும் வழங்கி சிறபித்திருந்தார்கள். கலாசார உத்தியோகத்தர் திரு அ.சிவஞானசீலன் அவர்களது நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

செய்தி மற்றும் படங்கள் இரா.மயூதரன்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்