தமிழகம் என்ன உங்கள் சொத்தா? ஸ்டாலினை கடுமையாக தாக்கி பேசிய சீமான்!

கழகமே (திமுக) குடும்பம் என்றார் அண்ணா ; இன்றோ உங்கள் (கருணாநிதி) குடும்பமே கழகமாகிப்போய்விட்டதே தலைவரே.. இந்த வரிகள் திமுக தொண்டர் ஒருவர் கடந்த சட்ட மன்ற தேர்தல் சமயத்தில் நாளிதழ் ஒன்றுக்கு எழுதியிருந்த கட்டுரையில் இடம்பெற்றிருந்த வரிகள். ஆம், இந்த விமர்சனத்தில் உண்மைகள் இல்லாமல் இல்லை.

கடந்த 2006 – 2011 ஆட்சி காலத்தில் திமுகவினர் குறிப்பாக அக்கட்சி தலைவர் கருணாநிதியின் குடும்ப ஆதிக்கம் தமிழகம் முழுவதும் கொடிகட்டி பறந்தது என்றால் அதில் மிகையேதுமில்லை. கருணாநிதி முதல்வர், ஸ்டாலின் துணை முதல்வர், அழகிரி மத்திய அமைச்சர், கனிமொழி நாடாளுமன்ற உறுப்பினர், ஸ்டாலின் மகன் உதயநிதி ஓர் சினிமா தயாரிப்பு நிறுவனம், அழகிரியின் மகன் தயாவிற்கு ஓர் சினிமா தயாரிப்பு நிறுவனம், முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன் மத்திய அமைச்சர் என கருணாநிதியின் குடும்பமே அதிகாரத்தில் கொடி கட்டி பறந்தது.

தலைவர் எவ்வழியோ அவ்வழித்தானே தொண்டர்களும்.. தமிழகம் முழுக்க திமுகவின் அமைச்சர்களும், மாவட்ட செயலாளர்களும் அப்போது அடித்த கொட்டம் எழுதி மாளாது. மணல் கொள்ளை, நில அபகரிப்பு என திமுக முக்கிய புள்ளிகள் மீதான குற்றச்சாட்டுகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.

இவ்வளவு அதிகாரமிருந்தும் 2009 ஈழப்போரை நிறுத்த கருணாநிதி மூர்க்கமாக முயலாதது என்பது தனிக்கதை. காலங்கள் கடந்துவிட்டிருந்தாலும் மேற்காண் விமர்சனங்கள் யாவும் மக்கள் மனதை விட்டு இன்னமும் அகன்றுவிடவில்லை.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னதாக பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் “முதலில் கருணாநிதி, பின்பு ஸ்டாலின், அதற்கு பிறகு உதயநிதி, அவருக்கு பிறகு அவரது மகன் என நீண்டுகொண்டே போக தமிழகம் என்ன உங்கள் வீட்டு சொத்தா ? தமிழர் இறையாண்மையை உயர்த்திப்பிடிக்கிற, உங்களையெல்லாம் அதிகாரத்தை விட்டு விரட்டுகிற ஆட்சி நிச்சயம் அமையத்தான் போகிறது” என திமுகவின் குடும்ப அதிகாரத்தை சுட்டிக்காட்டி பேசினார்.

சீமானின் மேற்கண்ட பேச்சுக்கு பலத்த ஆதரவு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்