பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் தனித்தனியாக உள்ளனர்: சீமான்

இரண்டு அணிகளும் இது நாள் வரையில் தனித்தனியாக இருந்தன. இப்போது ஒரே இடத்தில் தனித்தனியாகவே உள்ளனர் என்று சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

மெரினாவில் சிவாஜி சிலை அகற்றப்பட்டதை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் நுங்கம் பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சினிமா டைரக்டர் சேரன், நடிகர் கே.ராஜன் மற்றும் சிவாஜி ரசிகர் மன்றங்களை சேர்ந்தவர்களும், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்டு சீமான் பேசியதாவது:-

மெரினாவில் யார்- யாருக்கோ சிலை இருக்கும் நிலையில், தமிழ் பேரினத்தின் கலை பெட்டகமான சிவாஜிக்கு சிலை இருக்கக் கூடாதா? அவரது சிலையை அகற்றி அங்கேயே வேறு இடத்தில் வைத்திருக்கலாம். அதை விட்டுவிட்டு சிவாஜி நினைவு மண்டபத்தில் வைத்துள்ளனர். அங்கேயும் ஒரு சிலை இருக்கட்டும், மெரினாவிலும் ஒரு சிலையை வைத்து தமிழக அரசு சிவாஜிக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

இந்த கோரிக்கையை தமிழக அரசு காதில் வாங்கிக் கொள்ளாமலேயே உள்ளது. இது சிவாஜிக்கு ஏற்பட்ட அவமானம் அல்ல. தமிழ் தேசிய இனத்துக்கே அவமானமாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக சீமான் அளித்த பேட்டி வருமாறு:-

கே:- அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி- ஓ.பி.எஸ். அணிகள் இணைந்ததை எப்படி பார்க்கிறீர்கள்?

ப:- 2 அணிகளும் இது நாள் வரையில் தனித்தனியாக இருந்தன. இப்போது ஒரே இடத்தில் தனித்தனியாகவே உள்ளனர். டெல்லியில் இருந்து சொல்லும் இயக்குனர் சொல்கிறபடி இருவரும் செயல்பட்டுக் கொண்டுள்ளனர்.

நீட் தேர்வு உள்ளிட்ட மாநில அரசின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. மத்திய அரசின் அடிமையாகவே மாநில அரசு மாறிவிட்டது. இன்று மத்திய அரசு இப்படி செய்து விட்டதே என்று எல்லோரும் கேட்கிறார்கள். அந்த நிலை நிச்சயம் ஒருநாள் மாறும். மாநில அரசு இப்படி செய்து விட்டதே? என்று மத்திய அரசு கேட்கும் நிலை வரும்.

கே:- எடப்பாடி ஆட்சிக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கடிதம் கொடுத்துள்ளனரே, இந்த ஆட்சி நீடிக்கும் என்று நினைக்கிறீர்களா?

ப:- இந்த இணைப்பின் மூலம் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். தர்ம யுத்தம் நடத்தியதாக கூறி வந்தனர். அவர்கள் நடத்தியது தர்ம யுத்தம் அல்ல. கரும யுத்தம். தமிழக ஆளுனர் திருமணம் செய்து வைப்பது போல 2 அணிகளையும் சேர்த்து வைத்துள்ளார்.

தினகரன் ஆட்சியை கவிழ்க்க முயன்றால் அவரை கைது செய்வார்கள். எனவே அதுபோன்ற நிலை ஏற்பட வாய்ப்பு இல்லை. இந்த ஆட்சியை காப்பாற்றவே பா.ஜனதா இத்தனை வேலைகளையும் செய்து வருகிறது. எனவே ஆட்சி கலையாது. பாராளுமன்ற தேர்தல் வரை மத்திய உள்துறை, தமிழக அரசை தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கும். அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.

இவ்வாறு சீமான் கூறினார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்