பௌத்த பிக்குவின் அடாவடி-ஒருவர் பலி!

பொலனறுவை மாவட்டம் ஹபரன உல்பத்கம பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபரின் சடலம் காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் கண்டறியப்பட்டதை தொடர்ந்து குறித்த பௌத்த பிக்கு உள்ளிட்ட மூவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

பௌத்த பிக்குவிற்கும் உயிரிழந்த நபருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் பௌத்த பிக்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் 32வயதுடைய அதே பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து குறித்த பிக்கு மேலும் மூவருடன் இணைந்து உயிரிழந்தவரின் சடலத்தை காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று புதைத்துள்ளார். கணவன் வீட்டிற்கு வராததையடுத்து அது தொடர்பில் மனைவி ஹபரன பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் அடிப்படையிலேயே பௌத்த பிக்கு உட்பட மூவர் கைது செய்யப்பட்டதுடன், ஒருவர் தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் அவர் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், சந்தேக நபர்களை கெகிராவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த ஹபரன பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அத்துடன் புதைக்கப்பட்ட சடலத்தை நீதவான் முன்னிலையில் தோண்டுவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

About இலக்கியன்

மறுமொழி இடவும்