தொடர் புறக்கணிப்பால் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் அதிருப்தி!

தாம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைமைகள் அதிருப்தியடைந்துள்ளன. 20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் கடந்த திங்கட்கிழமை சிறிலங்கா சனாதிபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு அழைக்கப்படாது புறக்கணிக்கப்பட்டமை குறித்தே இவர்கள் அதிர்ப்தியை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

கூட்ட நிகழ்வை தலைமைதாங்கி நடத்திய சிறிலங்கா சனாதிபதி மைத்திரியும், கூட்டமைப்பின் தலைவரும் சிறிலங்கா எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தனும் இவர்களை புறக்கணித்துள்ளார்கள்.

கொழும்பில் உள்ள சனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற முக்கிய சந்திப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ள கட்சிகள், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து செயற்படும் கட்சிகள், பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றிருக்காத சில கட்சிகள் தமிழரசுக் கட்சி மற்றும் ஏனைய கட்சிகள் பங்கேற்றுள்ள நிலையில் திட்டமிட்டு தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

அனைத்துக் கட்சிக் கூட்டமாக 20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் கட்சிகளின் கருத்துக்களைப் பெறும் முகமாகவே இக்கூட்டம் நடைபெற்றுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கின்ற ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகியன பதிவு செய்யப்பட்ட கட்சிகளாக இருப்பினும் அவற்றுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக சந்திப்புகளை செய்யும் போது பங்காளிக் கட்சித் தலைவர்களையும் அழைக்க வேண்டும் என கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்த போதும் கூட்டமைப்பின் தலைவர் கூட பங்காளிக் கட்சிகளை அழைக்காது தானும் சுமந்திரனும் கலந்து கொண்டுள்ளார்கள்.

எனவே, எதிர்காலங்களில் நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டங்களிலும் தம்மையும் உள்வாங்க வேண்டும் என ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய கட்சிகள் சிறிலங்கா சனாதியிடம் எழுத்து மூலமாக கோரிக்கை ஒன்றினை முன்வைக்க திட்டமிட்டுள்ளார்கள்.

ஈழதேசம் இணையம்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்