அதிபர் வேட்பாளர் தெரிவு விடயத்தில் தலையிடாது கூட்டமைப்பு

அரசியலமைப்பு சபையில், எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில், ஒரு ஆண்டுக்குள் புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தத் தயாராக இருப்பதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கூட்டமைப்பிடம் நேற்று உறுதியளித்தார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அதிபர் தேர்தல் தொடர்பாக நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், சிறிலங்கா பிரதமருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்தது.

இந்தச் சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்ட எம்.ஏ.சுமந்திரன்,

“புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் ஒருமித்த கருத்தை எட்டுவதற்கான, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிடத்தக்க விட்டுக் கொடுப்புகளைச் செய்திருந்தது.

அந்த இணக்கப்பாட்டின் அடிப்படையில், புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிகளில் முன்னேறிச் செல்வதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்கும்.

ஐதேகவின் அதிபர் வேட்பாளர் விடயத்தில், கூட்டமைப்பு தலையிடாது என்றும், அதனை ஐதேகவே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், கூட்டமைப்பு அதில் பங்கேற்காது என்றும் சிறிலங்கா பிரதமரிடம் கூறியுள்ளோம்.

ஐதேகவில் அதிபர் பதவிக்காக மூன்று பேர் போட்டியிடுவதாக தெரிகிறது. ஆனாலும், ஏனைய கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் உள்ளிட்ட அனைவருடனும் பேசிய பின்னரே, யாருக்கு ஆதரவளிப்பது என்று முடிவு செய்யப்படும்” என்று கூறினார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்