செயற்திட்ட உதவியாளர் நியமனம் இடை நிறுத்தம்

அண்மையில் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய செயற்திட்ட உதவியாளர் நியமனம் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தலில் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, யாழ் மாவட்ட செயலகத்தில் கையொப்பமிட்டு வந்த புதிய நியமனதாரிகள் இன்று தேர்தல் செயலகத்தின் அறிவுறுத்தலுக்கமைய திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

இன்று தேர்தல் செயலக அதிகாரிகள், யாழ் மாவட்ட செயலகத்தில் நியமனம் பெற்றவர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார்கள். தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் இந்த நியமனம் வழங்கப்பட்டதாக தெரிவித்து, ஜனாதிபதி தேர்தலின் பின்னரே இவர்கள் கடமைகளை பொறுப்பேற்கலாமென்றும், நாடாளாவிய ரீதியில் இந்த நியமனம் இடைநிறுத்தப்பட்டதாக தெரிவித்து அவர்களை அனுப்பி வைத்துள்ளனர்.

இதேவேளை, வடக்கின் முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களில் இன்று புதிய நியமனதாரிகள் கையொப்பமிட்டனர். எனினும் அவர்களது நியமனங்களும் இடை நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடளாவிய ரீதியில் 8,500 புதிய செயற்திட்ட, கருத்திட்ட  உதவியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொரு கிராமசேவகர் பிரிவிற்கும் ஒருவர் என்ற ரீதியில் நியமனம் வழங்கப்பட்டிருந்தது.

முன்னைய ஆட்சியில் சமுர்த்தி நியமனத்தை போல, தற்போதைய ஆட்சியில் இந்த நியமனமும் அரசியல் நியமனமாகவே அமைந்திருந்தது. தமது ஆதரவாளர்கள், மற்றும் எதிர்கால தேர்தல் தேவைக்காக இந்த நியமனம் வழங்கப்பட்டது. ஐ.தே.க மற்றும் பங்காளிக்கட்சிகளின் எம்.பிக்களின் சிபாரிசின் அடிப்படையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன.

மறுமொழி இடவும்