அரசியல் முள்ளிவாய்க்காலை நோக்கி தள்ளிவிடப்பட்டுள்ள தமிழர்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாது! – இரா.மயூதரன்.

பௌதீக ரீதியாக ஈடுசெய்ய முடியாத இழப்புகளையும், உயிரிப்பறிப்பு, அங்கவீனமாக்குதல், வலிந்து காணாமல் ஆக்குதல் என்ற அடிப்படையில் ஒருபோதும் இட்டுநிரப்ப முடியாதளவிற்கு பேரழிவுகளையும், பெருந்துயரத்தையும் தந்துசென்ற முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் இருந்து மீண்டெழுவதற்கு போராடித்துடித்துக் கொண்டிருக்கும் தமிழர்களை, அரசியல் முள்ளிவாய்க்காலை நோக்கி தள்ளிவிடுவதற்கான கால்கோள் விழாவாக சிறிலங்கா சனாதிபதித் தேர்தல்-2019 அமைந்துவிட்டது. இதற்கான முழுப்பொறுப்பையும் தமிழ் அரசியல் தலைமைகளே ஏற்கவேண்டும்.

தமிழ் மக்களின் எதிர்காலத்தையும், தமிழர் தேசத்தின் இருப்பையும் அடிப்படையாக கொண்டு சரியான திசைவழியை காட்டாது ஆளுக்கொரு முடிவெடுத்து தத்தம்பாட்டில் மக்களை குழப்பும் அறிவிப்புகளை விடுத்து நிற்கும் தமிழ் அரசியல் தலைமைகளே நடைபெறும் அனைத்துக்கும் முழுப்பொறுப்பாகும். இவ்வாறான குழப்பகரமான நிலையில் மேய்ப்பாரற்ற மந்தைகளாக மக்களும் தத்தமது புத்திக்கெட்டியவாறு அணி பிரிந்து செல்லத்தலைப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள பெரும்பாலான தமிழர்கள் கோத்தபாய ராசபக்சவுக்கே வாக்களிக்கத் தயாராகியுள்ளதாக அறிய முடிகின்றது. கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் முஸ்லீம்களால் தினம் தினம் நெருக்குவாரங்களை சந்தித்து வரும் தமிழர்கள் சிங்களர்களுடன் சேர்ந்தாவது தமது இருப்பினை பாதுகாத்துக்கொள்ள ஏலவே எடுத்த முடிவின் அடித்தளத்தில் இந்த தெரிவுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

வன்னி தேர்தல் மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் சஜித் பிரேமதாச மற்றும் கோத்தபாய ராசபக்சே ஆகிய இருவருக்கும் வாக்களிக்க அணிபிரிந்து நிற்பதை அவதானிக்க முடிகின்றது. முள்ளிவாய்க்கால் பெருந்துயரத்தை ஏற்படுத்திய கோத்தபாயவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்க முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவான தமிழர்கள் தீர்மானித்துள்ளனர். மறுபக்கமாக ரிசாட் பதியுதீனது அத்துமீறல்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்பதற்காக கோத்தபாயவுக்கே வாக்களிக்க ஒரு பகுதி மக்கள் தீர்மானித்துள்ளார்கள்.

கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தளவில் சஜித்தை விட கோத்தபாய கொஞ்சம் ஏறுமுகமாக இருப்பதை அவதானிக்க முடிகிறது. சிறிதரனின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் வகையில் சந்திரகுமாரின் வளர்ச்சி இதற்கு ஒரு காரணமாக நோக்கப்படுகிறது. சஜித்தை ஆதரிப்பதாக கூட்டமைப்பு முடிவெடுத்திருந்தாலும் சிறிதரன் முழு வீச்சில் அதனை செய்வதாக தெரியவில்லை.

யாழ் மாவட்டத்தை பொறுத்தவரை ஏனைய இடங்களைப் போன்று மக்கள் தாமாக ஒருசாரப்படவோ, சரி பாதியாக பிரிந்தோ அவரிவருக்காக அணிபிரியும் நிலை இல்லையென்றாலும் சிங்கள தேசியக் கட்சிகளின் தமிழ் பிரதிநிதிகளது முயற்சியால் கோத்தபாயவுக்கும் சஜித்துக்கும் கணிசமான வாக்குகள் மடைமாற்றப்படப்போகின்றது.

இவையெங்கினும் தமிழ்த் தலைமைகளின் தீர்மானங்கள் செல்வாக்குச்செலுத்தவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் காகம் இருக்க பனம் பழம் விழுந்த கதையாக அவரவர் உரிமை கோருவர் என்பது தனிக்கதை.

இவ்வாறு தமிழர் தாயகத்தில் உள்ள தமிழர்கள் அவரவர் புத்திக்கெட்டியவாறு முடிவெடுத்து சிறிலங்கா தேசத்தின் எட்டாவது சனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க தயாராகிவிட்டார்கள். முள்ளிவாய்க்கால் பெருந்துயரின் நினைவழியா நினைவுகளுக்கும், தமிழர்களின் இருப்பிற்கான முனைப்புகளுக்கும், சிங்கள தேசியக் கட்சிகளின் தமிழ் பிரதிநிதிகளின் வாக்கு வேட்டைக்கும் இடையேயான போட்டியே சஜித்-கோத்தா ஆகியோருக்கான வாக்குகளாக பங்கு பிரிபடப்போகின்றது.

எப்படியோ சிங்கள தேசியக் கட்சிகளின் பின்னால் தமிழர்களை அணிவகுத்து செல்வதற்கான நிலமையை தமிழ்த் தலைமைகள் ஏற்படுத்திவிட்டன. இதன் நீட்சியாக வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் மாகாணசபைத் தேர்தல்களிலும் சிங்கள தேசியக் கட்சிகள் சார்பில் கணிசமானவர்கள் தமிழர்களின் ஆதரவுடன் வெற்றிபெறப்போகின்றனர். அதன் பின் தமிழ்த் தேசிய அரசியல் என்பது கேள்விக்குறியாகும். இதனடிப்படையில் தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய அரசியல் நீக்கம் செய்யப்படுவார்கள். காலப்போக்கில் தமிழர் தாயகத்தில் சிங்கள தேசியக் கட்சிகளே ஆதிக்கம் செலுத்தும். அப்போது ஒரே நாடு, ஒரே தலைமை என்றாகும். ஒருவேளை சம்பந்தரும், சுமந்திரனும் இதைத்தான் ஒன்றுபட்ட நாட்டிற்குள் இலங்கையர்களாக வாழ்வதற்கான முயற்சிகளை தாம் மேற்கொண்டு வருவதாகச் சொல்கிறார்கள் போலும்?

இவற்றுக்கிடையே ஆறுதலளிக்கும் வகையில் சுயேட்சை வேட்பாளராக ஆரம்பித்து திடீர் பொது வேட்பாளராக தனது பயணத்தை தொடரும் சிவாஜிலிங்கம் அவர்களுக்கான ஆதரவும் கணிசமாக அதிகரித்து வருவதையும் அவதானிக்க முடிகின்றது. தடுமாறும் தமிழ்த் தலைமைகளுக்கு ஒரு பாடம் புகட்டவேண்டும் என்ற வைராக்கியத்தின் அடிப்படையிலும், தமிழன் ஒருவர் இருக்கும் போது மற்ற தெரிவு எதற்கு? யார் வந்தாலும் எங்களுக்கு எதுவும் கிடைக்காது; அதனால் தமிழனுக்கே எனது வாக்கு போன்ற இன்னோரன்ன காரணங்கள் வழியே சிவாஜிலிங்கம் அவர்களுக்கு ஒரு இலட்சத்திற்கு அதிகமான வாக்குகள் கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

எது எப்படியோ, மக்களுக்கு சரியான திசைவழியை காட்டாது தமிழ்த் தலைமைகள் ஆளுக்கொரு பக்கமாக பிரிந்து நின்று, தமிழர்களை அரசியல் முள்ளிவாய்க்காலுக்காலை நோக்கி தள்ளிவிட்டு வேடிக்கை பார்த்து நிற்கின்றனர். இனி தமிழர்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாது.

இரா.மயூதரன்
15/11/2019

About இலக்கியன்

மறுமொழி இடவும்