கோட்டாபய – மஹிந்த தலைமையிலான குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலோ அல்லது அதற்கு முன்னரோ கோட்டாபய – மஹிந்த தலைமையிலான குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம். ஜனாதிபதித் தேர்தலில் எமக்கு ஏற்பட்ட தோல்விக்கு உரிய நேரத்தில் தக்க பதிலடி கொடுப்போம்.”

இவ்வாறு முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றியடைந்து ஜனாதிபதியாகப் பதியேற்றவுடன் அமைச்சரவையைக் கலைத்து பிரதமர் பதவியில் இருந்து விலகிய ரணில் விக்கிரமசிங்க, நேற்று பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையில் பிரியாவிடை உரையாற்றிவிட்டு வெளியேறினார். அதன்பின்னர் சர்வதேச செய்திச் சேவையொன்றின் கொழும்புச் செய்தியாளருக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மக்களின் ஜனநாயகத் தீர்ப்புக்கு மதிப்பளித்தும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் புதிய அரசு அமைக்க வழிவிட்டும் பிரதமர் பதவியை நான் துறந்தேன். ஆனால், ராஜபக்ச அணியினர் பழைய பல்லக்கிலேயே பயணிக்க ஆரம்பித்துள்ளனர். மீண்டும் குடும்ப ஆட்சி அரியணையில் ஏறி அமர்ந்துள்ளனர்.

இந்தக் குடும்ப ஆட்சியால் 2005ஆம் தொடக்கம் 2015ஆம் ஆண்டுவரை – சுமார் பத்து வருடங்களாக இந்த நாடு பாரிய சீரழிவுகளைச் சந்தித்தது. அதனால்தான் எமது ஒருமித்த பலத்தால் 2015ஆம் ஆண்டு மஹிந்த அரசு கவிழ்க்கப்பட்டது.

குடும்ப ஆட்சியை இந்த நாட்டு மக்கள் ஒருபோதும் விரும்பவேமாட்டார்கள். ஏனெனில், மஹிந்த தலைமையிலான அன்றைய ஆட்சிக்காலத்தில் இந்தக் குடும்ப ஆட்சிதான் பின்னர் சர்வாதிகார ஆட்சியாக மாறியது.

இதனால் நாட்டில் படுகொலைகள், கடத்தல்கள், காணாமல் ஆக்கப்படுதல் மற்றும் ஊழல், மோசடிகள் மலிந்து காணப்பட்டன. இதற்கெல்லாம் மக்கள் ஆதரவுடன் நாம் முடிவு கட்டியிருந்தோம்.

தற்போது ஐக்கிய தேசியக் கட்சியை தோல்வியடைந்த கட்சியாக ராஜபக்ச குடும்பம் பார்க்கலாம். ஆனால், அந்தத் தோல்வி எங்கள் வெற்றிக்கான படிகளை அமைத்துத் தந்துள்ளது. அதில் நாம் ஏறி வீறுகொண்டு பயணிப்போம். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலோ அல்லது அதற்கு முன்னரோ கோட்டாபய – மஹிந்த தலைமையிலான இந்தக் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம். ஜனாதிபதித் தேர்தலில் எமக்கு ஏற்பட்ட தோல்விக்கு உரிய நேரத்தில் தக்க பதிலடி கொடுப்போம்” – என்றார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்