ரஷ்யாவிடமிருந்து போர்க் கப்பல்களை கொள்வனவு செய்யும் ஸ்ரீலங்கா

ரஷ்யாவிடமிருந்து போர்க் கப்பல்களை கொள்வனவு செய்வது தொடர்பில் அந்நாட்டின் உயர் மட்ட அதிகாரிகளுடன் ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இராஜதந்திர மட்டப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவில் நடைபெறும் நவீன யுத்தத் தளபாடங்கள் தொடர்பான சர்வதேச மட்டத்திலான ஆயுதக் கண்காட்சிக்கு சென்றுள்ள நிலையிலேயே யுத்தக் கப்பல்களை கொள்வனவு செய்வது தொடர்பிலான பேச்சுக்களை ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியரத்ன மேற்கொண்டிருக்கின்றார்.

ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவில் ஆர்மி 2017 என்ற தலைப்பில் சர்வதேச ஆயுதக் கண்காட்சி நேற்று முன்தினம் 22 ஆம் திகதி ஆரம்பமாகியுள்ளது.

அதி நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய இராணுவம் மற்றும் அதி நவீன தொழில் நுட்பத்தை பறைசாற்றும் இராணுவ பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான சர்வதேச மாநாடு என்ற தொனிப்பொருளில் இம்முறை நடைபெறும் இந்த ஆர்மி 2017 சர்வதேச ஆயுதக் கண்காட்சி நாளை சனிக்கிழமை வரை நடைபெறவுள்ளது.

இதில் அதி நவீன ஆயுதத் தளபாடங்களை உற்பத்தி செய்யும் பல நிறுவனங்கள் கலந்துகொண்டு அவற்றினால் தயாரிக்கப்படும் அதி நவீன யுத்தத் தாங்கிகள், கனரக ஆயுதங்கள், யுத்த விமானங்கள், போர்க் கப்பல்கள் உட்பட பல ஆயுதத் தளபாடங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கா அரசின் சார்பில் ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியரத்ன தலைமையில் சென்றுள்ள குழுவில் ஸ்ரீலங்கா இராணுவம் உட்பட முப்படைகளின் உயர் நிலை அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

ஆர்மி 2017 ஆயுதக் கண்காட்சியில் கலந்துகொள்ள கிடைத்தது தனக்குக் கிடைத்த பாக்கியம் என்று தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அதி நவீன ஆயுதங்கள் தொடர்பான அறிவையும் சர்வதேச ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்வதற்கு இந்தக் கண்காட்சி மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது என்றும் தெரிவித்திருக்கின்றார்.

இதேவேளை கபில வைத்தியரத்ன தலைமையிலான ஸ்ரீலங்கா பாதுகாப்பு படைகளின் உயர் நிலை அதிகாரிகள் தலைமையிலான குழு நேற்றைய தினம் ரஷ்ய பிரதி பாதுகாப்பு அமைச்சர் அலெக்சாண்டர் போமின் தலைமையிலான ரஷ்ய இராணுவ உயர் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளது.

இந்த சந்திப்பை அடுத்து ரஷ்ய அரச ஊடகமான ஸ்புட்நிக் இற்கு வழங்கிய செவ்வியில் ரஷ்யாவிடமிருந்து யுத்தக் கப்பல்களை கொள்வனவு செய்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ரீதியிலான ஒத்துழைப்புக்களையும் இராணுவத் தொழிற்நுட்பங்களை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் இந்த பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டதாக ரஷ்ய பிரதி பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் கண்டிக்கு சென்று சிங்கள பௌத்த மக்களின் மதத் தலைவர்களான அஸ்கிரி, மல்வது பீடங்களின் மகாநாயக்கத் தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்ட ஸ்ரீலங்கா இராணுவம் உட்பட முப்படைகளின் பிரதானியான அட்மிரல் ரவிந்திர விஜேகுணரத்ன நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என அடித்துக் கூறியிருந்தார்.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் எந்தவொரு சம்பவங்களும் நிகழவில்லை என்று தெரிவித்த நிலையிலேயே ரஷ்யாவிடமிருந்து புதிதாக போர்க் கப்பல்களை கொள்வனவுசெய்வது குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்