தோட்டக்காட்டான் என்றார் அத்தாவுல்ல, அவருக்கு தண்ணீரால் ஊற்றினார் மனோ கணேசன்

மலையகத் தமிழர்களைத் தோட்டக்காட்டான் என விழித்துக் கூறிய ஏ.எல்.எம். அத்தாவுல்ல மீது, முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் குடிதண்ணீரை ஊற்றியதுடன், அவரைக் கடுமையாகத் திட்டித்தீர்த்தார்.

சக்தி ரி.வியின் இன்று (24) இடம்பெற்ற மின்னல் நிகழ்ச்சியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றது. நேரடி ஒளிபரப்பாக இடம்பெற்ற இந்தக் காட்சியை மக்கள் நேரில் பார்வையிட்டனர்.

சக்தி ரி.வியில் வாராந்தம் நடைபெறும் மின்னல் நிகழ்ச்சியில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டு அரசியல் விவாதம் நடத்தப்படும். இதன்போது, வாசகர்கள் நேரடியாகவே அந்த அரசியல்வாதிகளிடம் கேள்வி எழுப்பினால் அவர்கள் அதற்கு பதிலளிப்பர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மின்னல் நிகழ்ச்சியில் ஈ.பி.டி.பி செயலாளர் டக்ளஸ் தேவானந்தா, தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம் அதாஉல்லா, ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் பங்குபற்றினர்.

நிகழ்வு இறுதியில், தோட்டத் தொழிலாளர் விவகாரம் பேசப்பட்டுக்கொண்டிருந்தபோது, நிகழ்ச்சித் தொகுப்பாளர் அத்தாவுல்லவிடம் சில கேள்விகளைக் கேட்டார். அதற்கு பதிலளிக்காத அவர் மனோ கணேசனை வசைபாடினார்.

கோத்தபாய ராஜபக்சவிற்கு ஆதரவு அளித்து வரும் அத்தாவுல்ல, தாங்கள் பயங்கரவாதத்தை அழித்து மக்களை அமைதியாக வாழவைத்தவர்கள் எனக் கூறினார்.

ஒரு கட்டத்தில், மலையக மக்களைத் தோட்டக்காட்டான் என விழித்தார் அத்தாவுல்ல. இதனால் கடும் கோபமடைந்த மனோ கணேசன் அந்தக் கருத்தை வாபஸ் பெறுமாறு கூறினார். அத்தாவுல்ல எதிர் வாதம் புரிந்தார்.

இதன்போது, ஈ.பி.டி.பி செயலாளர் டக்ளஸ் தேவானந்தா இருவரையும் சமாதானப்படுத்த முயன்றார். எனினும் இருவரும் தர்க்கத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் மனோ கணேசன் ஆத்திரம் மேலோங்கியவராக தனது மேசையில் கிளாஸில் இருந்த தண்ணீரை எடுத்து அத்தாவுல்ல மீது ஊற்றினார்.

குறித்த நிகழ்ச்சியை அத்துடன் முடித்துக்கொள்வதாகக் கூறிய நிகழ்ச்சித் தொகுப்பாளர், அத்தாவுல்ல கூறிய கருத்துக்கு கடும் கண்டனத்தையும் வெளியிட்டார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்